Search This Blog

Saturday 24 April 2021

நாய்ச்சியார் திருமொழியில் நவ வித பக்தி


நாய்ச்சியார் திருமொழியில் நவ வித பக்தி


Image Credit: @vishnuprabhanc


முன்னுரை
 
ஸ்ரீ பிரகலாதாழ்வான் தான் கற்ற சாரமாக இரணியனிடம் சொன்னவற்றுள் ஒன்று: "எம்பெருமானிடம் உள்ள பக்தியை ஒன்பது வகையாக வெளிப்படுத்தவேண்டும்" என்பது. இதுவே 'நவ வித பக்தி' [ச்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாதஸேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம்] என்று பெரியோர்களால் கொண்டாடப்படுகின்றது.

இந்த நவ வித பக்தியை ஆழ்வார்கள் தத்தம் பாசுரங்களில் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

"ஆழ்வார் திருமகளார் ஆண்டாளின் பாசுரங்கள் நாயகி மனோபாவத்தில் பாடப்பட்டவை. இந்த மனோபாவத்தில் இந்த நவ வித பக்தி எவ்வாறு வெளிப்பட்டுள்ளது?" என்று சற்றே தேட, சில முத்தான பாசுரங்கள் விடை அளித்ததைக் கண்டு மகிழ்ந்தேன். அந்த மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

திருப்பாவையில் இதே நவ வித பக்தியை, இதே நாயகி மனோபாவத்தில் தாராளமாகச் சுவைக்க முடியும். எனினும், நாய்ச்சியார் திருமொழியின் பாசுரங்களும் எல்லோரையும் சென்றடையவேண்டும் என்ற நோக்கத்தில் இக்கட்டுரையை நாய்ச்சியார் திருமொழியில் உள்ள பாசுரங்களைக் கொண்டே வரைந்துள்ளேன்.




1. ச்ரவணம் - எம்பெருமான் திருநாமங்கள், கதைகள் ஆகியவற்றைச் செவிச் செல்வத்தால் கேட்டல்


ஸ்ரீ ஆண்டாள் - ஸ்ரீ நாய்ச்சியார் திருமொழி - பாசுரம் # 5-4
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
ஸ்ரீ பெரியாழ்வாரின் திருவாக்கால் கண்ணன் கதைகளைக் கேட்டு வளர்ந்தவள் கோதை.

நம் கோதை வீட்டுக் கிளியும் கோவிந்த நாமம் பாடும். கூட்டில் வைத்தால் இன்னும் பல முறை அத்திருநாமத்தை ஓதும்! சோறு படைக்காவிடில் எம்பெருமான் திருநாமங்களை இன்னும் நன்றாகவே ஓங்கிக் கூவும்! இப்படித் தன் செவிச் செல்வத்தை எம்பெருமான் பொருட்டுப் பயன்படுத்திய கோதை, குயில்களையும் அவன் திருநாமங்களைப் பாடும்படிக் கேட்கின்றாள்.

"குயிலே! வைகுந்தன் என்ற தோணி கிடைக்காமல் துன்பக்கடலுள் பல நாள் தட்டித் தடுமாறுகின்றேன். இத்துன்பம் என் எலும்புகளையும் கூட உருக்கிவிட்டன. அழகிய, நெடிய வேல் போன்ற என் கண்களும் ஒரு கணமும் உறங்கவில்லை. அன்பரகளைப் பிரிவதால் ஏற்படும் துன்பத்தை நீயும் அறிவாயன்றோ? பொன் போன்ற திருமேனி உடையவனும், கருடக் கொடியுடையவனும், தருமமே வடிவெடுத்தவனுமான புண்ணியனின் திருநாமங்களைப் பாடி அவன் இங்கே வரும்படிக் கூவுவாய்!" என்கிறாள்.




2. கீர்த்தனம் - எம்பெருமான் திருநாமங்கள், கதைகள் ஆகியவற்றை வாயாரப் பாடுதல் / பேசுதல்


ஸ்ரீ ஆண்டாள் - ஸ்ரீ நாய்ச்சியார் திருமொழி - பாசுரம் # 8-3
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
பிரிவால் மிக வாடும் தன் நிலைமையைத் திருவேங்கடவனிடம் எடுத்துச் சொல்லும்படி மேகங்களைத் தூது விடுகின்றாள் கோதை. திருப்பாவையில் "பரமன் அடி பாடி, உத்தமன் பேர் பாடி" என்றெல்லாம் எம்பெருமான் திருநாமங்களைப் பாடும்படி நமக்கு அறிவுறுத்திய கோதை, 'அப்படிப் பாடினாலும் கூட இனி என் உயிர் தங்குமோ?' என்று இங்கு ஐயமுறுகின்றாள்.

"அருளைப் பொழியவேண்டிய மேகங்களே! [பிரிவாற்றாமையால் மிகவும் நொந்த] என் மேனியின் ஒளி மற்றும் நிறம், என் வளை, என் சிந்தை, என் உறக்கம் ஆகியவை என் எளிய நிலையைக் கண்டு என்னை விட்டு நீங்கிவிட்டன. [இந்நிலையில்] குளிர் அருவிகள் நிறைந்த திருவேங்கடத்தில் உறையும் என் கோவிந்தனின் குணம் பாடினாலும் கூட இனிமேல் என் உயிர் தரிக்குமா என்று அறியேன்! என்னை விட்டுப் பிரியாமல் என் உயிரை அவன் காக்கவேண்டியிருக்க, என் உயிரை நான் காக்க வேண்டுமோ? அவனிடம் என் நிலையை எடுத்துக் கூறுங்கள்!" என்று மன்றாடுகின்றாள்.




3. ஸ்மரணம் - எம்பெருமான் திருநாமங்கள், கதைகள் ஆகியவற்றை மனதார நினைத்தல்


ஸ்ரீ ஆண்டாள் - ஸ்ரீ நாய்ச்சியார் திருமொழி - பாசுரம் # 14-4
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
இது மிகவும் சுவையான பதிகம்! இப்பதிகத்தில் கோதை இரு வேறு ஆயர்ச் சிறுமியரின் நிலையை அடைகின்றாள். ஒருத்தி கண்ணனைத் தேடுபவளாய், "அவனைக் கண்டீரா?" என்று கேட்கின்றாள். இன்னொருத்தி கண்ணனைக் கண்டவளாய், "விருந்தாவனத்தே கண்டோமே!" என்கிறாள். ஸ்ரீ பெரியாழ்வார் உள்பட மற்ற ஆழ்வார்களும் இது போன்ற பதிகங்களை அருளியுள்ளார்கள்.

"கண்ணனின் திருமுகமண்டலம் கருத்துக் குளிர்ந்த மேகம் போன்றது. அம்மேகத்திலே தாமரை மலர்கள் மலர்ந்தாப்போலே உள்ளன கண்ணனின் திருக்கண்கள். அத்திருக்கண்கள் என்ற நீண்ட பாசக் கயிற்றால் என் மனத்தை ['என்னை' என்பது 'என் மனத்தை' குறிக்கும் என்று உரையில் உள்ளது காணீர்] ஈர்த்துக்கொண்டு விளையாடும் அந்த ஈசனைக் கண்டீரா?" என்று ஆயர்ச் சிறுமியருள் ஒருத்தியான கோதை கேட்கின்றாள்.

கண்ணனைக் கண்ட ஆயர்ச் சிறுமியருள் ஒருத்தியான கோதை, "ஒளியுடைய யானைக்கன்று போலுள்ள கண்ணபிரான், அவன் வேர்வைத் துளிகள் என்ற முத்துச்சட்டையால் அலங்கரிக்கப்பட்டு, விளையாடுவதை விருந்தாவனத்தே கண்டோமே!" என்று விடை அளிக்கின்றாள்.

கண்ணனை நினைக்க வழி தேடும் நமக்கும், கண்ணனின் திருக்கண்கள் என்ற பாசக்கயிற்றால் ஈர்த்துக்கொள்ளப்பட்ட மனத்தை உடைய கோதைக்கும் உள்ள வாசி இது பாரீர்!




4. பாதஸேவனம் - எம்பெருமானின் திருவடிகளில் தொண்டு புரிதல்


ஸ்ரீ ஆண்டாள் - ஸ்ரீ நாய்ச்சியார் திருமொழி - பாசுரம் # 1-8
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
புருடோத்தமனான எம்பெருமானுக்கே தம் ஆன்மாவை மணவாட்டியாக அர்ப்பணிக்கும் திருமாலடியவர்களுக்கு எம்பெருமானைத் தவிர வேறொரு தெய்வத்தைத் தொழுவது என்பது கிடையாது. சரணாகதி மட்டுமே நெறியாக உடைய ஸ்ரீவைஷ்ணவத்தில் உபாசனை செய்யும் நெறியைப் பின்பற்றுவதும் கிடையாது.

எனினும், அந்த எம்பெருமானுக்குத் தம் ஆன்மாவை மணவாட்டியாக அர்ப்பணிக்க ஆண்டாள் மன்மதனை உபாசனை செய்கின்றாள்!! "எம்பெருமானை இன்னும் அடையவில்லையே!" என்று அவள் ஏங்கி அனுபவிக்கும் ஆற்றாமையின் திறம் அவளை அப்படிச் செய்யத் தூண்டிச் சுட்டெரிக்கின்றது!!!

"'பிரிந்தாரைக் கூட்டுவிப்பவன்' என்ற தேசும் மிடுக்கும் உடையவனே! [அதனால்] எனக்குத் தெய்வமான மன்மதனே! அழுக்குப் படிந்த மேனியோடு, தலையை விரித்துக்கொண்டு, [தாம்பூலம் ஆகியவை தவிர்த்ததால்] உதடுகள் வெளுத்து, ஒரு வேளை மட்டுமே உண்டு, நான் வருந்தி நோற்கின்ற இந்நோன்பை நீ நினைவில் கொள்ளவேண்டும்.

இதற்கெல்லாம் பலனாக என் உயிரின் மூலமானதும், எனக்கு மிகப் பெரிய பேறானதும் ஆகிய "இவள் கேசவ நம்பியைக் கால் பிடிப்பவள்" என்ற பெருமையை நீ எனக்கு அருளவேண்டும்!" என்கிறாள்.




5. அர்ச்சனம் - எம்பெருமானைத் தூமலர் தூவித் தொழுதல்


ஸ்ரீ ஆண்டாள் - தனியன்கள்
தனியன்கள் - ஒரு சிறு அனுபவம்
 
கோதைக்கும் மலர்களுக்கும், மலர்மாலைகளுக்கும் உள்ள தொடர்பை அவள் பாசுரங்கள் கொண்டுதான் அறியவேண்டுமோ?

திருப்பாவையில் "தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது" என்று நமக்கு வழி காட்டிய கோதை, எம்பெருமானுக்குத் தூமலர் மாலைகள் கட்டி அணிவிக்கும் ஸ்ரீ பெரியாழ்வாருடைய திருக்குமாரத்தியாய், அவருடைய திருநந்தவனத்திலேயே, திருத்துழாய் வனத்தின் கீழே திருவவதாரம் செய்து, எம்பெருமானுக்கென்று கட்டிவைத்த மாலையைத் தான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி அன்றோ?

ஆதலால், இங்கே மட்டும் அவள் அருளிய பாசுரங்களைக் காட்டிலும், அவளைக் கொண்டாடும் தனியன்களைச் சுவைப்பதே பொருத்தமாகும் என்பதால் அவற்றையே மேற்கோள் காட்டியுள்ளேன். கோதையே எம்பெருமான் சூடும் ஒப்பற்ற மாலையாம்.

ஸ்ரீ பொன்னடிக்கால் ஜீயர் அருளிய நாய்ச்சியார் திருமொழியின் ஒரு தனியன் "செழுங்குழல் மேல் மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய சோலைக்கிளி" என்று அவளைப் போற்றும்.

அவளது வாழித்திருநாமமும் "உயர் அரங்கர்க்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!" என்று முழங்கும்.

"அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல்" என்றன்றோ ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதியும் ஸ்ரீ இராமானுசரை ஏற்றிப் பேசுவது!




6. வந்தனம் - எம்பெருமானைப் பணிவுடன் வணங்குதல்


ஸ்ரீ ஆண்டாள் - ஸ்ரீ நாய்ச்சியார் திருமொழி - பாசுரம் # 10-6
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
மயில்கள் சில கூட்டமாக ஆடியதைக் கண்டு கண்ணனின் நினைவில் தவிக்கும் கோதை கதறுகின்றாள்: "கூட்டமாய் இருக்கின்ற சிறந்த மயில்களே! கண்ணனின் நீல நிறமுடைய நீங்கள் உங்கள் அழகிய ஆட்டத்தைத் தயை கூர்ந்து நிறுத்துங்கள்! உங்கள் திருவடிகளில் விழுந்து வணங்குகின்றேன்!" என்கிறாள்.

இதைக் கேட்ட மயில்கள், "அந்தோ! நீ பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை! உன் திருவடிகளில் அன்றோ நாங்கள் விழுந்து வணங்கவேண்டும். நீ எங்கள் கால்களில் விழலாமோ?" என்று கேட்பதாகக் கொண்டு, பிரிவுத் துன்பத்தில் மேலும் புலம்புகின்றாள்:

"திருவனந்தாழ்வான் ஆகிய ஆயிரம் தலைகள் உடைய ஆதிசேடனைப் பற்பல அடிமைகள் கொண்டு சிறப்பித்த திருவரங்கன் அடியேனை இப்படி ஒரு நிலையில் வைத்திருப்பதால் உங்கள் திருவடிகளில் நான் விழுவதைத் தவிர வேறு உண்டோ?" என்கிறாள்.

நாயகி மனோபாவத்தில் நவ வித பக்தியின் சுவையும் நன்கு சாறு பிழிந்து கொடுக்கப்படும் என்பதற்கு இது ஒரு சான்று!




7. தாஸ்யம் - "அடியேன் எம்பெருமானுக்குத் தொண்டன்" என உணர்ந்து அடிமைகள் புரிதல்


ஸ்ரீ ஆண்டாள் - ஸ்ரீ நாய்ச்சியார் திருமொழி - பாசுரம் # 9-6, 9-7
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
"நறுமணம் கமழும் பொழில்கள் உடைய திருமாலிருஞ்சோலை நம்பிக்கு நூறு தடா அக்காரவடிசில், நூறு தடா வெண்ணெய் அடியேன் [பிரிவாற்றாமையால் என் திருமேனியால் இதைச் செய்யமுடியாவிடினும்] வாயாலே சொல்லிப் படைக்கின்றேன். முன்பு இராமாவதாரத்தில் அத்ரி முனிவர் குடிலின் வாசலில் நின்று 'நான் இராமன், இவள் சீதை, இவன் இலக்குவன்' என்று நின்றான். அது போல, நாள்கள் செல்லச் செல்ல அதிகரிக்கும் செல்வம் உடைய திருமாலிருஞ்சோலை அழகர் இன்று என் குடிலுக்கு வருகை தந்து, இவற்றை அமுது செய்தருளத் திருவுள்ளம் பற்றுவானோ?" என்று வினவுகின்றாள்.

குறிப்பு: கோதையின் இந்த வேண்டுதலைப் பிற்காலத்தில் ஸ்ரீ இராமானுசர் நிறைவேற்றிவைத்தார். ஆதலால், கோதையால் 'நம் கோயில் அண்ணர்' என்று பட்டமும் பெற்றுத் திகழ்கின்றார்.

கோதை மேலும் கூறுகின்றாள்: "தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை அழகர் இவற்றை இன்று, இவ்விடம் எழுந்தருளி, பெற்றுக்கொண்டு, [மறுபடியும் திரும்பிவிடாமல்] என் மனத்தில் நிலைத்து வசிப்பானாகில், அதற்குக் கைம்மாறாக அடியேன் ஒரு தடாவிற்கு நூறாயிரம் தடாக்களாக அவனுக்குப் படைத்து, அதற்கு மேலும் அடிமைகளை அவனுக்குச் செய்வேன்!"




8. ஸக்யம் - எம்பெருமானிடம் இதயப்பூர்வமான பூரண அன்பைச் செலுத்துதல்


ஸ்ரீ ஆண்டாள் - ஸ்ரீ நாய்ச்சியார் திருமொழி - பாசுரம் # 2-5
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
ஆயர்ச் சிறுமியர்கள் வெள்ளை மணல் கொண்டுவந்து மணல் வீடு கட்டி [வீதியில் கோலமிட்டு என்றும் சொல்வர்] விளையாடுகிறார்கள். சிற்றிலிழைத்தல் என்று இதற்குப் பெயர்.

"நம்மைக் காட்டிலும் இவர்களுக்கு இச்சிற்றில மேல் அன்பு அதிகமோ?" என்று கண்ணனுக்குக் கோபம். ஆதலால், அச்சிற்றில்களை இவர்கள் பாடுபட்டு கட்டி முடிக்கும் வரைக் காத்திருந்து, அதன் பின் அவன் திருவடிகளால் அவற்றை எட்டி உதைத்து அவற்றைச் சிதைக்கின்றான். அவர்கள் "கண்ணா! வேண்டாம்!" என்று கெஞ்சுகின்றனர்.

இச்சிறுமியர்களுள் ஒருத்தியாக ஆண்டாள் பாடும் பதிகத்துள் ஒரு பாசுரம் இது.

"கள்வனே! மாதவா! கேசவா! நாங்கள் வெள்ளை மணல் கொண்டு வந்து, எல்லோரும் வியக்கும் வண்ணம் தெளிந்து கட்டிய சிற்றிலின் கோலத்தை நீ அழிக்கின்றாய். எனினும், எங்களுக்கு உன் மேல் துளியும் கோபம் [உரோடம் - ரோஷம்] எழவில்லை காண். மாறாக, எங்கள் உள்ளங்கள் உடைந்து உனக்காக மேலும் உருகுகின்றன காண். நீ உன் திருமுகத்துத் திருக்கண்களால் இச்சிற்றிலைகளை ஆசையுடன் நோக்கவேண்டாவோ?" என்று மரங்களும் உருகும் வண்ணம் கேட்கின்றாள்.

இதைவிடவோ எம்பெருமானிடம் ஒருவர் நட்பு பாராட்டமுடியும்?




9. ஆத்ம நிவேதனம் - "அடியேனது ஆன்மா உட்பட அவன் சொத்து" என்றறிந்து முழுமையாகத் தன்னை எம்பெருமானுக்கு ஒப்படைத்தல்


ஸ்ரீ ஆண்டாள் - ஸ்ரீ நாய்ச்சியார் திருமொழி - பாசுரம் # 6-6, 6-8
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
திருமால் கோதையைத் திருமணம் செய்துகொள்ளும் காட்சியைக் கனவாகக் கண்ட கோதை, அதைத் தோழியிடம் உரைக்கும் மிகப் பிரபலமான பதிகம். பரமாத்மா மற்றும் ஜீவாத்மாவின் ஆன்ம விவாகமாகப் போற்றப்படும் பதிகம்.

'மதுசூதன்' என்ற திருநாமத்திற்கு 'மது முதலிய எதிரிகளை அழித்தவன்' என்று பொருள். இங்கே, 6-ம் பாட்டில், "மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக் கைத்தலம் பற்றி" என்ற சொல்லப்பட்டதன் கருத்து என்னவென்று உரை ஆசிரியர் விளக்குகின்றார்: "வேறு எவரேனும் 'நானும் ஒரு மைத்துனன்' என்று முறை பேசி, கைப்பிடிக்கப் பார்த்தாலும், 'இவள் என்னவள்' என்று அறுதியிட்டு, அவர்களை அழித்து, தானே வந்து என் கைப்பிடிக்க வல்லவன்" என்பதாம். உருப்பிணியைத் [ருக்மிணி] திருமணம் முடித்ததும் இவ்வாறே அன்றோ?

8-ம் பாசுரத்தில், "நம்மை உடையவன் நாராயணன் நம்பி" என்கிறாள். அனைத்து உயிர்களிலும் வசிப்பவனும், அனைத்து உயிர்களுக்கும் வழியாய் இருப்பவனுமே நாராயணன் எனப்படுகின்றான். இதனாலேயே 'நம்மை உடையவன் நாராயணன்' - அதாவது நம் ஆன்மாவின் சொந்தக்காரனாகிய நாராயணன் - என்கின்றாள். அவன் வந்து நம்மைக் [நம் ஆன்மாவைக்] கைகொண்டபின், அவன் 'சுவாமி' என்ற எண்ணத்தையும் மறந்து, அன்புப் பரிமாற்றத்தில், அவனே வந்து நம் தாள் பற்றுவான் என்று பொருளாம். இதைத் தன்னிடம் செய்தமையைப் பூரிப்புடன் கோதை வெளியிடுகின்றாள்.




முடிவுரை
 
ஸ்ரீ இராமானுசர் நாய்ச்சியார் திருமொழியின் பெருமையை வெளியிடும்போது, "இவை ஆண்டாள் மட்டுமே பாடவேண்டிய பதிகங்கள், ஆண்டாள் மட்டுமே கேட்கவேண்டிய பதிகங்கள். வேறு எவருக்கும் அத்தகுதி இல்லை!" என்பாராம்.

அத்தகைய பெருஞ்சிறப்பு வாய்ந்த நாய்ச்சியார் திருமொழியின் வாயிலாக 'நவ வித பக்தி' வெளிப்படுவதையும், நாயகி மனோபாவத்தால் அவை சுவை கூடி விளங்குவதையும் அனுபவித்தோம்.

ஆண்டாள் உடனுறை திருவரங்கன் திருவடிகளுக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு!!!




நன்றிகள் பல!
 
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!

பொலிக! பொலிக! பொலிக!




10 comments:

  1. Stupendous. I enjoyed the pasurams once again in the context of nava vidha bhakti. An enriching experience. Dhanyosmi. Adiyen Godha dasi

    ReplyDelete
    Replies
    1. Dhanyosmi for sharing your great joy, Ma. Bhagyam. Adiyen Ramanujadasi.

      Delete
  2. श्रवणं कीर्तनं विष्णोः स्मरणं पादसेवनम् l
    अर्चनं वन्दनं दास्यं सख्यं आत्मनिवेदनम् ll

    ஆண்டாள் திருவடிகளே போற்றி 🙏

    ReplyDelete
    Replies
    1. ஆண்டாள் திருவடிகளே போற்றி போற்றி போற்றி!

      Delete
  3. This time around Devareer has churned Sri Andal's Nacchiyaar Thirumozhi and given us Akkaravadisal with lots of honey dripping from it. A beautiful song of Thyagaraja comes to mind in which he describes how he worships Sri Rama.
    परिपालय परिपालय परिपालय रघु नाथ
    तनुवे नीकनुवैन सदनमौरा रघु नाथ
    स्थिर चित्तमु वर चामीकर पीठमु रघु नाथ
    सु-पद ध्यानमु गंगा जलमौरा रघु नाथ
    इभ पालक अभिमानमु शुभ चेलमु रघु नाथ
    घन कीर्तिनि पल्कु वासन गन्धमु रघु नाथ
    हरि नाम स्मरणमुलु विरुलौरा रघु नाथ
    तॊलि दुष्कृत फलमॆल्ल गुग्गुलु धूपमु रघु नाथ
    नी पाद भक्तिय्ए प्रॊद्दु दीपम्बगु रघु नाथ
    ने जेयु सु-पूजा फलमु भोजनमवु रघु नाथ
    ऎड-बायनि नायॆड कल्गु सुखमु विडॆमौरा रघु नाथ
    निन्नु जूचुटे घन दीपाराधनमौरा रघु नाथ
    पूजा विधि नैज त्यागराज कृतमु रघु नाथ

    श्री आण्डाळ् तिरुवडिगळे शरणम्!!
    🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. Thank you very much for sharing Sri Thyagaraja Krithi, Swami. Glad Devareer relished the nectar Sri Andal blessed us with.

      Delete
  4. நாய்ச்சியார் திருமொழியில் நவவித பக்தியும் விளங்குவது பற்றிய அருமையான கட்டுரை. பாசுரங்களும் விளக்கங்களும் மிக அழகு.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி, ஸ்ரீராம் ஜி.

      Delete