Search This Blog

Saturday, 13 November 2021

திருத்துழாய் பெருமை


ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும்
திருத்துழாய்


Image Credit: https://www.pinterest.com/srimathey/thulasi/


முன்னுரை
 
நம் பாரதத் திருநாட்டில் ஸ்ரீ துலசீ வழிபாடு இல்லம் தோறும் அனுதினமும் செய்யப்பட்டு வந்தது. இன்றும், "பெருமாள் கோயில்" என்றாலே ஸ்ரீ துலசீ மாலையை வாங்கிச் செல்வர்.

'ஸ்ரீ எம்பெருமானார் தரிசனம்' என்று கொண்டாடப்படும் ஸ்ரீவைஷ்ணவத்தில் திருமகள் கேள்வன் மிக விரும்பும் ஸ்ரீ துலசீயை எப்படிப் போற்றுகின்றனர்?

ஆசாரியர்கள் உரைகளைத் திருவிளக்காகக் கொண்டு, ஆழ்வார் பாசுரங்கள் வழியாகக் கற்போம் வாரீர்!




"தண்மையான திருத்துழாய் ஆனது எம்பெருமானே பரம்பொருள் என்பதன் அடையாளம்" என்று ஆழ்வார்களும் ஆசாரியர்களும் அருளியுள்ளார்கள். அதனைக் காண்போம்.


ஸ்ரீ திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி - பாசுரம் # 11
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
"தண்மலரால் சூழ்த்த துழாய் மன்னு நீள்முடி" என்ற வரிக்கு உரை:

"எம்பெருமானுடைய மென்மையான திருமேனிக்குத் தக்கவாறு திருத்துழாய் மலர்கள் தண்மையாக உள்ளன. அவனுடைய நீளமான திருமுடியைச் [மகுடத்தைச்] சூழ்ந்து அழகாக விளங்குகின்றன. அவனது நீளமான மகுடமும், அதனைச் சூழ்ந்து இருக்கும் திருத்துழாய் மாலையும் அவனே பரம்பொருள் என்பதைக் காட்டிக் கொடுக்கின்றன," என்று ஆழ்வார் அருள்கின்றார்.




ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 5-5-4
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
மேற்கூறிய அதே கருத்தையே, மேலும் மெருகூட்டி, இங்கே ஸ்ரீ நம்மாழ்வாரும் முழங்குகிறார்.

"பூந்தண் மாலைத் தண்துழாயும் பொன்முடியும் வடிவும்" என்பதற்கு உரை:

"எம்பெருமானே வைகுந்தம் என்ற செல்வத்திற்கும், பூவுலகம் என்ற செல்வத்திற்கும் தலைவன். இதை அவன் அணிந்திருப்பதும், அன்றலர்ந்ததும், மிகவும் அழகானதும், தண்மையானதும் ஆகிய திருத்துழாய் மாலை காட்டிக் கொடுக்கின்றது.

எம்பெருமானே இந்த இரண்டு உலகங்களையும் நடத்த வல்லவன் என்பதை அவனுடைய நீளமான திருமுடி என்கிற மகுடம் காட்டுகின்றது.

இந்தத் திருத்துழாய் மாலையையும், இந்த நீள் முடியையும் அணியத் தக்கவன் இவன் ஒருவனே என்பதை அவனுடைய திவ்ய மங்களத் திருமேனி காட்டிக் கொடுக்கின்றது."




திருத்துழாயின் நறுமணத்தின் சிறப்பைப் போற்றும் ஆழ்வார் பாசுரங்கள்


ஸ்ரீ திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான் - பாசுரம் # 7
 
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளையின் உரை - சுருக்கம்
 
"துளப விரையார் கமழ்" என்பதற்கு உரை:

"திருவரங்கன் சாற்றிக் கொண்டிருக்கும் திருத்துழாய் மாலை மிகவும் நல்ல நறுமணத்தை உடையதாகத் திகழ்கின்றது.

"ஸர்வகந்த:" என்று நறுமணத்திற்கெல்லாம் இருப்பிடமாகக் கொண்டாடப்படும் திருவரங்கனுக்கே நறுமணத்தை ஊட்டக்கூடியதான பெருமை மிக்கதாக விளங்குகின்றது!"




ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 8-4-5
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
இப்பாசுரம் நாயகி மனோபாவத்தில் பாடப்பட்டுள்ளது. நாயகி மனோபாவத்தில் ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் "பரகால நாயகி" என்று அழைக்கப்படுகின்றார்.

திருக்கண்ணபுரத்து எம்பெருமானைப் பிரிந்து வாடும் ஸ்ரீ பரகால நாயகி தும்பியைப் பார்த்துக் கேட்கின்றாள்:

"கோல் தும்பி! வெறும் நிறத்தினால் மட்டுமே அழகாய் இருக்கின்ற மலர்களைக் கண்டு நீ மலைத்துப் போகாதே!

பாரில் உள்ளோர் எல்லாம் வணங்கும்படி, முன்பு பெரிய ஆமையாக திருவவதாரம் செய்த, திருக்கண்ணபுரத்து எம்பெருமானின் மாலையில், பொருந்திய, நறுமணம் மிக்கதான, திருத்துழாய் மலரில் தாழ்ந்து ஊதுவாய்.

அந்தத் தெய்வீக நறுமணத்தை கொண்டு வந்து எனக்குத் தருவாய்! நானும் உய்யப்பெறுவேன்!"




திருத்துழாயின் இனிமையின் சிறப்பைப் போற்றும் ஆழ்வார் பாசுரங்கள்


ஸ்ரீ பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி - பாசுரம் # 100
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
"தண் துழாய் மாலை சேர் மாயவனையே" என்பதற்கு உரை:

"என் நெஞ்சே! திருத்துழாய் மாலையை அவன் அணிந்து இருப்பதனால் அவன் மிகவும் இனிமையானவன் என்பது புலப்படுகின்றது அல்லவா? அவன் திருவடிகளை அடைவதற்கு இந்த ஒரு காரணம் போதுமே!"




ஸ்ரீ பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி - பாசுரம் # 33
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
"துழாய் அலங்கல் அங்கம்" என்பதற்கு உரை:

"திருவேங்கடவன் தெய்வத் திருமேனியில் துழாய் அலங்கல் ஆகிய திருத்துழாய் மாலை இருப்பதால், அவனது பேரெழிலுக்கு மயங்கிய எனது உள்ளம் அவனது பெயரைச் சிந்தை செய்ய உறுதி பூண்டது. எனது நாவும் அவனது பெயரைச் சொல்லும் உறுதியை அடைந்தது!"




எம்பெருமானின் திருமார்பு - திருத்துழாயின் இயற்கையான விளைவிடம்


ஸ்ரீ பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி - பாசுரம் # 23
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
விண்ணையும் மண்ணையும் அளந்த எம்பெருமான் திருமார்பில் திருத்துழாய் மாலை சாற்றியிருக்கின்றது. அழகிய சிறகுகளை உடைய பெண் வண்டும் ஆண் வண்டும், அந்து திருத்துழாய் மாலையில் உள்ள தேனைஉண்ட மகிழ்வில் பித்தேறி உள்ளன.

அதனால், அப்பொழுதலர்நத திருத்துழாய் மலர்கள் 'நாம் எங்கு உள்ளோம்?' என்று பார்த்து, 'திருமாலவன் திருமார்பில் உள்ளோம்' என உணர்ந்த பின், 'இது நமக்கு இயற்கையான விளைவிடம்' என குதூகலித்து, எப்பொழுதும் வாடாமல் உள்ளன.

அந்தத் திருத்துழாய் மாலையைக் கண்ட என் மனமும், அந்த வண்டுகள் போலவே பித்தேறி, விண்ணளந்தானின் பொற்கழலை அடைய நாடி வரும்!"

எம்பெருமானுக்கு ஏற்ற தண்மை உடையதாகத் திருத்துழாய் மாலை உள்ளது. திருத்துழாய் எப்பொழுதும் பசுமையாக இருப்பதற்கு ஏற்ற நிலமாக எம்பெருமான் திருமார்பு உள்ளது.




எம்பெருமான் சூடிக் களைந்த திருத்துழாய் மாலையின் ஏற்றதை போற்றும் பாசுரங்கள்


ஸ்ரீ பெரியாழ்வார் - திருப்பல்லாண்டு - பாசுரம் # 9
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உரை - சுருக்கம்
 
"தொடுத்த துழாய் மலர் சூடிக்களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்" என்பதற்கு உரை:

"அழகாகத் தொடுக்கப்பட்டதும், உன் திருமுடியில் நீ சூடிக் களைந்ததுமாகிய திருத்துழாய் மலர்களைச் சூடும் தொண்டர்கள் ஆகிய நாங்கள்" என்று ஆழ்வார் அருள்கின்றார்.

இதிலிருந்து, அடியார்கள் தமது திருமுடியில் எம்பெருமான் சூடிக்களைந்த துழாய் மலர்களை மிக்க அன்புடன் சூடுவர் என்பது புலப்படுகின்றது. ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் தன்னுடைய பிரிவாற்றாமையைத் தணிக்க இதே சூடிக்களைந்த துழாய்மலர் சூட வேண்டும் என்கின்றாள். அதையும் காண்போம்.




ஆண்டாள் - நாய்ச்சியார் திருமொழி - பாசுரம் # 13-2
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உரை - சுருக்கம்
 
"நீலார் தண்ணந்துழாய் கொண்டு என் நெறிமென் குழல் மேல் சூட்டீரே" என்பதன் உரை:

"தாய்மார்களே! நீங்கள் 'கண்ணனை மற!' என்று கொடுமையான சொற்களால் என் மீது வேலாயுதத்தைப் பாய்ச்சுகிறீர்கள். நான் அவனுக்கே அற்று தீர்ந்துவிட்டேன். எனக்கு ஏதேனும் நன்மை செய்ய நீங்கள் விரும்பினால், அவன் சூடிக்களைந்ததும், பசுமையானதும், தண்மையாக இருப்பதும், அழகாக இருப்பதும் ஆகிய துழாய் மலர்களை எனது நெறிமென் குழல் மேல் சூட்டுவீர்களாக. இது எனக்கு ஆறுதலை கொடுக்கும்!"

ஆண்டாள் பிறந்ததே திருத்துழாய் வனத்தில் - "மாதா சே துலசி" என்று திருத்துழாய் ஆண்டாளின் அன்னையாகக் கொண்டாடப்படுகின்றாள். திருத்துழாய் பூமியிலிருந்து தோன்றும். அந்தப் பூமித்தாய் ஆண்டாளாகத் திருத்துழாய் மடியில் அவதரிக்கின்றாள். இப்படி ஆண்டாளுக்கும் திருத்துழாய்க்கும் ஒரு சிறப்புத் தொடர்பு உண்டு.




இது வரை திருத்துழாய் மாலையை அணிந்த எம்பெருமானின் திருவடிகளை அடையத் துடிக்கும் ஆழ்வார்களின் பாசுரங்களைக் கண்டோம். எம்பெருமான் சூடிக் களைந்த திருத்துழாய் மாலையை அணியத் துடிக்கும் ஆழ்வார்களின் பாசுரங்களையும் கண்டோம்.

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் அப்படிப்பட்ட அடியார்களின் திருவடிகளை அடையவேண்டும் என்று பாடுகின்றார்.


ஸ்ரீ குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி - பாசுரம் # 2-8
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
"வண்டு கிண்டு நறுந்துழாய் மாலையுற்ற வரைப் பெருந்திருமார்வனை" என்பதன் உரை:

"[தேனுக்காக] வண்டுகள் குடைகின்ற திருத்துழாய் மாலையை அணிந்திருப்பதும், திருமகள் உறையப்பெற்றிருப்பதும் ஆகிய மலை போல பெருமை உடைய திருமார்பு உடையவன்" என எம்பெருமானைப் போற்றுகின்றார்.

"அந்த எம்பெருமான் குறித்து 'மாலை உற்றிடும் தொண்டர்' [அவன் மீது பேரன்பால் மையல் கொண்டுள்ள தொண்டர்] உளர். அவர்களது பெருமையைக் குறித்து என் நெஞ்சம் 'மாலை உற்றது' [பேரன்பால் மையல் கொண்டுள்ளது]," என்று முழங்குகிறார் இவ்வாழ்வார்.




திருத்துழாய் அணிந்த எம்பெருமானின் தொண்டர்களைக் கண்டோம்.

திருத்துழாய் அணிந்த எம்பெருமானின் தொண்டர்களின் தொண்டரையும் கண்டோம்.

இப்பொழுது திருத்துழாயின் தொண்டரைக் காண்போம்.


ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை, திருப்பள்ளியெழுச்சி - பாசுரம் # 45, 12
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
இங்கே "துளபத் தொண்டாய தொல் சீர் தொண்டரடிப்பொடி" என்பதன் உரை மிகவும் அழகாக அமைந்துள்ளது:

எம்பெருமானுக்குத் தொண்டு புரிவதை விட, எம்பெருமானின் அடியார்களுக்குத் தொண்டு புரிவது மிகவும் சிறப்பு. ஆதலால், "தொண்டரடிப்பொடி" என்ற தமது திருநாமத்தால் விளங்குகின்ற ஸ்ரீ தொண்டரடிப்பொடி ஆழ்வார், தன்னைத் திருத்துழாய் ஆழ்வாரின் தொண்டனாக அடையாளப்படுத்திக்கொள்கிறார். இங்கே திருத்துழாய் ஒரு ஆழ்வாராகவே போற்றப்படுகின்றார்!

'திருத்துழாய்' என்று சொல்லும்போது இங்கே அனைத்து அடியார்களையும் குறிக்கும். திருத்துழாய் ஆழ்வாருக்குத் தொண்டு புரிந்தால், அனைத்து அடியார்களுக்கும் தொண்டு புரிந்ததாகும்.

மற்ற அடியார்களுக்குத் தொண்டு புரியும் போது ஏதேனும் குற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆனால், திருத்துழாய் ஆழ்வாருக்குத் தொண்டு புரியும்போது எக்குற்றமும் ஏற்பட வாய்ப்பில்லை."

இதே ஆழ்வார் தன்னுடைய இன்னொரு அருளிச்செயலான திருப்பள்ளியெழுச்சியில் "தொடை ஒத்த துளவமும் கூடையும் பொலிந்து தோன்றிய தோள் தொண்டரடிப்பொடி" என்று மறுபடியும் தன்னைத் திருத்துழாய் ஆழ்வாரின் தொண்டனாகவே அடையாளப்படுத்திக்கொள்கிறார்.

ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வாருக்கு "துலசீ ப்ருத்யர்" என்றே திருநாமம் ஏற்பட்டுள்ளது - அதாவது "திருத்துழாய் ஆழ்வாரின் தொண்டர்" என்று பொருள்.

ஸ்ரீ இராமானுஜ நூற்றந்தாதியிலும் இந்த ஆழ்வார் திருத்துழாய் ஆழ்வாரின் தொண்டராகவே அழைக்கப்படுகின்றார். அதையும் மேலே காண்போம்.




ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 13
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம்
 
"செய்யும் பசுந்துளவத் தொழில் மாலையும்" என்ற சொற்றொடருக்கு உரை:

"[திருவரங்கனுக்காக] அழகான, பசுமையான திருத்துழாய் மலர்களை மிகவும் அழகாக [கலைநயத்துடன்] தொடுப்பவர்" என்று ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் இங்கும் போற்றப்படுகின்றார்.

"தொண்டு செய்து துளபத்தால் துலங்கினான் வாழியே" என்று [ஸ்ரீ அப்பிள்ளை அருளிய] ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வாருடைய வாழித் திருநாமமும் இதைப் பறைசாற்றுகின்றது.




முடிவுரை
 
'ஸ்ரீ எம்பெருமானார் தரிசனம்' என்று கொண்டாடப்படும் ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆழ்வார்களும், ஆசாரியர்களும் திருத்துழாயை எவ்வாறு போற்றியுள்ளனர் என்பதை ஓரளவு சுவைத்தோம்.

ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்கள் துலசீ மணி மாலைகள் மற்றும் தாமரை மணி மாலைகள் அணிந்திருப்பர். "ஸ்ரீ துலசீ மாலிகாஞ்சித:" ["திருத்துழாய் மணி மாலையை அணிந்திருப்பவர்"] என்பது ஸ்ரீ மணவாள மாமுனிகளின் திருநாமங்களுள் ஒன்று.

கார்த்திகை மாதப் பௌர்ணமி ஸ்ரீ துலசீயின் திருவவதார நன்னாளாகக் கொண்டாடப்படுகின்றது. கார்த்திகை வளர்பிறை துவாதசி ஸ்ரீ துலசீ தாமோதர திருக்கல்யாணமாகக் கொண்டாடுகின்றனர்.

வரப்போகும் கார்த்திகை மாதத்திலிருந்து, நாமும் ஸ்ரீ திருத்துழாய் ஆழ்வாரின் திருவடிகளில் கோலம் வரைந்து, தீபம் ஏற்றி, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்து, தொண்டு செய்து துளபத்தால் துலங்குவோம். செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவோம்.

கண்டும் கேட்டும் களிக்க: திருவரங்கம் ஸ்ரீமான் டிரஸ்ட் ஸ்ரீ துலசீ பூஜை

ஸ்ரீமதே ராமாநுஜாய நம:




பின்குறிப்பு
 
இக்கட்டுரையை வாசித்த சில அன்பர்கள், "நீங்கள் 'துலசீ' என்று பதிவு செய்துள்ளீரே. 'துளசி' என்பதல்லவோ சரி?" என்று வினவினார்கள். அதைப் பற்றி ஒரு சிறு விளக்கம்:

பேச்சுத்தமிழில் "துளசி" என உச்சரிப்பதே நடக்கின்றது. பலரும் திருத்துழாய் குறித்த வடமொழி துதிகளைப் பாராயணம் செய்யும்போதும் "துலஸீ" என்பதை "துளசி" என்றே உச்சரிக்கின்றனர். "துலஸீ" ['ஸீ' என்ற வடசொல்லைத் தவிர்த்தால் 'துலசீ'] என்பதே சரியான வடமொழி உச்சரிப்பு.

"துலா" என்ற சொல் "சமம்", "சரிக்குச் சரி" என்ற பொருள் உடையது. "எடைக்கு எடை சமமா?" என்று சரி பார்க்கும் கருவியான தராசையும் குறிக்கும். துலாபாரம், துலா ராசி என்பவை இதிலிருந்து வந்த சொற்களே.

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் எம்பெருமானுக்கு "அதுல:" என்ற திருநாமம் ஓதப்பட்டுள்ளது. அதாவது, அ + துல: = அவனுக்குச் சமமாக ஒருவரும் இல்லாதவன். ஸ்ரீ ஒப்பிலாவப்பன்.

"துல்யம்" என்ற வடசொல்லும் இதே போல "சமம்" என்ற பொருளில் பயன்படுத்தப்படும். அதே ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில், "ஸஹஸ்ரநாம தத் துல்யம் ராம நாம வரானனே" - "அழகிய முகம் உடையவளே! ராம நாமம் [ஸ்ரீ விஷ்ணுவின்] 1000 நாமங்களுக்குச் சமம்" என்று சிவபெருமான் பார்வதி தேவியின் கேள்விக்கு அருள்கின்றார்.

தமிழ் மொழியில் "துலை" என்ற சொல் தராசைக் குறிக்கப் பயன்படுத்தப்படுள்ளது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான "திருத்துலைவில்லிமங்கலம்" தலபுராணத்தில் தராசு சம்பந்தம் உள்ளதைக் காணலாம்.

ஸ்ரீ துலஸீ தேவி "இவளுக்குச் சமமானவர் எவரும் இல்லை" என்பதால் வடமொழியில் 'துலஸீ' என்று அழைக்கப்படுகின்றாள். செந்தமிழ் மொழியில் "துளபம்" மற்றும் "துழாய்" [திருத்துழாய்] என்று அழைக்கப்படுகின்றாள்.

Image Credit: Screen Grab from https://www.youtube.com/watch?v=5DnGitR2MdA


நன்றிகள் பல!
 
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!

பொலிக! பொலிக! பொலிக!




3 comments:

  1. நீங்கள் இதைச் சுவைத்ததில் மிக்க மகிழ்ச்சி, ஐயா.

    ReplyDelete
  2. மிகவும் அருமை. உங்கள் நற்பணி தொடர ப்ரார்த்திப்போம்.இதன் தொடர்ச்சியாக துளசி மகாத்யமும், ஸ்தோத்ரமும் தாங்கள் பதிய ஒர் சிறு வேண்டிகோள்.
    மாதவன்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கனிவான அன்புக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி.

      நீங்கள் Sriman.D.A.Joseph Ramanujadasar அவர்களது சொற்பொழிவுகளைக் கேட்பவர் என்றால், நீங்கள் கேட்ட இரண்டு தலைப்புகளிலும் அவர் சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். வேறு யாரும் செய்ததாகத் தெரியவில்லை.

      Sri Thulasi Mahimai:
      https://youtu.be/HRrqTo19yGo


      Sri Thulasi Sthothram:

      1. https://youtu.be/7UGWuHSVPko
      2. https://greenmesg.org/stotras/tulasi/tulasi_stotram.php

      இவை உங்களுக்கு உதவியாக இருக்கும் என நம்புகின்றேன்.

      Delete