இரண்டு நாள்களுக்கு முன் ஒருவருடன் ஆண்டாள் நாச்சியார் பற்றி வைரமுத்து அவர்களின் கட்டுரை குறித்து விவாதித்த பொழுது “ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு உரை எழுத எல்லோருக்கும் உரிமை உண்டு. வைணவ ஆசார்யர்களுக்கு மட்டும் அல்ல. பார்ப்பனர் அல்லாதார் எழுதிய உரைகளைப் பார்ப்பனக் குருமார்கள் ஆதரிக்காததால் அவைகள் மறைந்தன” என்று கருத்து தெரிவித்தார். விவரங்கள் இதோ: 'தமிழை ஆண்டாள்' கட்டுரை ஆதரவாளருக்கு வைணவப் பெரியோர்கள் காட்டிய வழியில் பதில்கள். விரிவுக்கு அஞ்சி நான் அவருக்கு இதற்கு மிகச்சுருக்கமாகவே பதில் அளித்தேன். இப்பொழுது இந்தக் கருத்தில் உள்ள தவறுகளைச் சான்றோர்கள் அருளியபடி பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன். பொருளுரை ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு உரை எழுத எல்லோருக்கும் உரிமை உண்டு. ஆனால் எல்லோருக்கும் தகுதி உண்டா? “அவை எல்லாம் தமிழ்ப் பாடல்கள் தானே? தமிழ் தெரிந்தால் போதாதா?” என்ற கேள்வி எழுகின்றது. அந்தத் தமிழ்ப் பாடல்கள் யாவும் தெய்வீகப் பாடல்கள். அதனால் தெய்வீகப் பாடல்களைப் பற்றி உரை எழுத ஆன்மீகத் தகுதிகள் இருப்பது அவசியம். “அவை தெய்வீகப் பாடல்கள் என்று எப்படி கூறுகின்ரீர்? அப்படியே இருந்தாலும் அவைகளுக்கு உரை எழுத சாதி எப்படி ஒரு தடை ஆகும்? ” என்ற கேள்விகள் எழுகின்றன. முதலில் ஒரு உதாரணம் பார்ப்போம். கவிச் சக்கிரவர்த்தி கம்பர் பார்ப்பனர் அல்ல. பக்தியால் "கம்பநாட்டாழ்வார்" என்று ஆன்றோர் யாவரும் (பார்ப்பன வகுப்பைச் சேர்ந்த பெரியோர்கள் உள்பட!) உகக்கும் வண்ணம் உயர்ந்தவர். கம்பர் பெருமான் எழுதிய கம்ப இராமாயணம் என்ற அற்புத பக்திக் காவியத்தைப் பற்றி இதே அலட்சிய எண்ணம் தான் எல்லோருக்கும் முதலில் இருந்தது. “இவற்றை எதற்குத் திருவரங்கத்தில் அரங்கேற்றவேண்டும்?” என்று வினவினர். அவை வெறும் கவிகள் என்று நினைத்தனர். கம்பர் பெருமான் எழுத்து, பேச்சு, கல்வி, புலமை ஆகியவற்றின் தெய்வமான நாமங்கை என்று போற்றப்படும் சரசுவதி தேவியின் பூரண அருள் பெற்றவர். “அவளும் பொய் சொல்லாள்” என்று முழங்கிய அவர் தாம் கவி எழுதுவதாக நினைக்கவில்லை. நாமங்கை தம் நாவில் இருந்து அருளியாதாகவே மனப்பூர்வமாக எண்ணினார். இந்த பக்தி மற்றும் பணிவின் பரிசாக இறைவன் ஒரு திருவிளையாடல் புரிந்தார். பாம்பு தீண்டி இறந்த ஒரு சிறுவனைக் கமபர் பெருமான் தம் காவியத்தில் உள்ள கருடாழ்வார் அருளால் நாக பாசங்கள் விலகும் பகுதியைப் பாடி உயிர்த்து எழச்செய்தார்! அதன் பின்பே அவரது காவியம் அரங்கேற்றப்பட்டது. அப்பொழுதும் சிலர் “உமது இராமாயணம் ஏன் நரசிம்மனைப் பாடுகின்றது?” என்று எதிர்க்க திருவரங்கம் மேட்டு அழகிய சிங்கர் உரக்கச்சிரித்து கம்பரின் பொன்னான காவியத்தை ஆமோதித்தார்! இதனால்: 1. இறைவனிடம் பக்தி செலுத்தவோ அல்லது ஒரு உன்னத பக்திக் காவியத்தை இயற்றவோ பார்ப்பனராக இருக்க வேண்டிய அவசியமே இல்லை என்பதும் 2. இறைவன் உகந்த பாடல்கள் எல்லாமே சக்தி வாய்ந்தவை, அற்புதங்கள் செய்ய வல்லவை என்பதும் 3. நமது அன்பு மொழிகளை அரங்கேற்றம் செய்ய உலகமே எதிர்த்து நின்றாலும் இறைவனே தக்க வழி வகுப்பான் என்பதும் தெள்ளத்தெளிவாக விளங்குகின்றது அல்லவா? கம்பர் பெருமானின் கரும்புக் காவியம் காலத்தை வென்று பீடு நடை போடுகின்றது! “சரி. ஆழ்வார் பாசுரங்கள் தெய்வீகப் பாடல்கள் என்று எப்படி கூறுகின்ரீர்?” என்ற கேள்வி எழுகின்றது. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம். அனைத்து ஆழ்வார்களின் மொத்த உருவமான நம்மாழ்வாரின் பாடல்களைப் பற்றிப் பேசுவோம். கம்பருக்கு எழுந்த எதிர்ப்பு புதிது அல்ல. மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரின் முதல் சீடர். நம்மாழ்வாரின் முக்திக்குப் பிறகு நம்மாழ்வாரின் அனுமதி பெற்று ஆழ்வாரின் திருமேனி ஒன்றைச் செய்து அதற்கு உற்சவங்கள் நடக்கும் வண்ணம் செய்தார். அவர் தமது அன்பு ஆசானுக்கு “வேதம் தமிழ் செய்த மாறன்” என்பது உள்ளிட்ட பல விருதுகளை உரத்த குரலில் கூறி வந்தார். சங்கப் புலவர்கள் எதிர்த்தனர். “தங்களது ஆழ்வார் பாடல்கள் சங்கப் பலகையில் ஏற்றிய பின்பன்றோ அவற்றின் தரத்தை அறிய முடியும்! விருதுகள் ஓத முடியும்!” என்றனர். மதுரகவி ஆழ்வார் சற்றும் கலங்காமல் நம்மாழ்வாரின் 1296 பாடல்களில் இரண்டே வரிகள் கொண்ட ஒரே ஒரு பாடலை மட்டும் சங்கப் பலகையில் ஏற்றினார்!! மற்ற புலவர்களும் தங்களது பாடல்களை ஏற்றினர். சங்கப் பலகை மற்ற புலவர்களின் அனைத்துப் பாடல்களையும் பொற்றாமரைக் குளத்தில் தள்ளி ஆழ்வாரின் ஒரு பாசுரத்தை மட்டும் ஏந்தி நின்றது! சங்கப் புலவர்கள் ஆழ்வாரை வணங்கினர். ஆழ்வாரைப் புகழ்ந்து கவிகள் உரைத்தனர். பணிவின் எல்லைநிலமான நம்மாழ்வார் தம் நாவில் இருந்து திருமாலே பாடுகின்றான் என்று தாமே அருளியுள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. மதுரகவிகள் ஒரு பார்ப்பனர் மற்றும் நம்மாழ்வார் ஒரு வேளாளர் என்பதும் தற்காலச் சூழ்நிலையில் குறிப்பிடத்தக்கது! பல சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஆழ்வார்கள். பிற்காலத்தில் நம்மாழ்வார் அருளால் ஆழ்வார்களின் பாசுரங்களை மீண்டும் உலகிற்கு வெளிக்கொண்டு வந்தவர் நாதமுனிகள் என்ற பார்ப்பனர்! “ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு உரை எழுதிய குருமார்கள் தகுதியானவர்களா?” என்ற அடுத்த கேள்வி எழுகின்றது. ஸ்ரீ வைஷ்ணவம் “குரு அருளால் திருமகள் அருளைப் பெற வேண்டும்; திருவருளால் திருமால் அருளைப் பெற வேண்டும்” என்று ஆணித்தரமாக வலியுறுத்துகின்றது. குரு பக்தியே ஸ்ரீ வைஷ்ணவத்தின் ஆணி வேர். ஒரு சீடனின் குரு பக்தியின் எல்லையைக் கொண்டே அவர் உரை எழுதத் தகுதியானவரா என்பதை குருமார்கள் முடிவு செய்தனர். குருமார்கள் பலர்! அதனால் மறுபடியும் "ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்" வழி செல்வோம். நம்பிள்ளை என்ற ஆசார்யர் குரு பக்தியில் சிறந்து விளங்கியவர். இதை எடுத்தியம்பும் பல நிகழ்வுகள் உள்ள போதும் என் மனத்தைக் கொள்ளை கொண்ட ஒன்றைப் பதிவு செய்கின்றேன்: ஒருவர் நம்பிள்ளையின் குருவான நஞ்சீயரிடம் “நான் நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியின் பொருள் கற்க விரும்புகின்றேன். ஆனால் பொருள் சொல்பவர் மேலே அமர நான் கீழே அமர்வது மனதுக்கு இசையவில்லை” என்று கூறினார்! மறு கணம் நஞ்சீயர் நம்பிள்ளையை அழைத்து “நீர் தரையில் அமர்ந்து இவர் மேட்டில் அமர நீர் இவருக்குத் திருவாய்மொழி அர்த்தங்களைத் தெரிவிப்பீர்” என்று கட்டளை இட்டார். இதைச் சிரமேற்கொண்டு நம்பிள்ளை நாளும் செய்து வந்தார்! ஒரு நாள் அந்த மனிதர் மனம் திருந்தி நம்பிள்ளையிடம் “இனிமேல் அடியேன் தரையில் அமர்கின்றேன்! நீரே மேலே அமர வேண்டியவர் என்று ஆழ்வார் அருளால் உணர்ந்தேன்!” என்ன நம்பிள்ளையோ “ஆசார்யர் நஞ்சீயர் அடியேனைத் தரையில் அமர்ந்தே அர்த்தங்களைத் தெரிவிக்கச் சொன்னார். குருவின் கட்டளையை மீற முடியாது!” என்றாராம்! அதாவது தான் போதிப்பதாக நினைக்காது, அதை ஒரு குரு சேவையாகவே செய்து, ஒரு முறை கூட இதை ஒரு தாழ்வாக நினையாது, கேட்பவரையும் மட்டமாக எண்ணாமல்…. எப்படி வாழ்ந்து இருக்கின்றனர்!!! அவர்கள் தரம் எங்கே, நம் தரம் எங்கே!!! இந்த நம்பிள்ளையின் அணுக்கத் தொண்டரான குரு பக்தி மிக்க பெரியவாச்சான்பிள்ளை தான் 4000 பாசுரங்களுக்கு உரை எழுதினார். “ஏன் பார்ப்பனர் அல்லாத ஒரு சீடர் கூடவா குரு பக்தியில் சிறந்து இல்லை? அவர்கள் ஏன் ஆழ்வார் பாசுரங்களுக்கு உரை எழுதவில்லை?” என்ற அடுத்த கேள்வி எழுகின்றது. ஆழ்வார் பாசுரங்களுக்குப் பார்ப்பனர் அல்லாதார் உரை எழுதியதாக எங்கும் காணக் கிடைக்கவில்லை. இருப்பினும் ஆழ்வார் பாசுரங்களுக்கு விளக்கம் அளித்தவர்கள் பல இடங்களில் தனுர்தாசர் போன்ற பார்ப்பனர் அல்லாத அடியார்களின் பெருமையைக் கொண்டு பாசுரப்பொருளை விளக்கி உள்ளனர். உதாரணம் இதோ. இறையருளால் பாசுரத்தின் சரியான பொருள் சொல்வது பெருமையே. ஆனால் பாசுரத்தின் பொருளாகவே வாழ்வது அதைவிடச் சிறந்த பெருமை அன்றோ?
2. 36000 படி என்ற மற்றொரு உரை பிறந்த வரலாறு: நம்பிள்ளையின் சீடரான வடக்குத்திருவீதிப்பிள்ளை நம்பிள்ளையிடம் தாம் திருவாய்மொழியைப் பற்றிக் கற்றதை மறவாமல் இருக்க ஏடுபடுத்த, அதைப் படிக்க நேர்ந்த நம்பிள்ளை “குருவின் உத்தரவு இல்லாமல் ஏன் எழுதினீர்?” என்று கூறி அதை மறைத்து வைத்தார்! நம்பிள்ளையின் மற்றொரு சீடரான ஈயுண்ணி மாதவப்பெருமாள் “அந்த அழகிய உரை எல்லோருக்கும் பரவ வேண்டும்” என்றுத் திருவரங்கனை மனமுருக வேண்டினார்! திருவரங்கனும் நம்பிள்ளையின் கனவில் உத்தரவு பிறப்பிக்க, குருவின் உத்தரவால் மாதவப்பெருமாள் அதைப் பரப்பினார். பொருள்கள் உரைத்தவர் நம்பிள்ளை! மறவாமல் இருக்க எழுதியவர் வடக்குத்திருவீதிப்பிள்ளை! உலகம் உய்ய பரப்பியவர் ஈயுண்ணி மாதவப்பெருமாள்!
“எப்படியும் பார்ப்பனர் அல்லாத சீடர்கள் உரை எழுதவில்லை அல்லவா?” என்ற கேள்வி இப்போதும் இருக்க வாய்ப்பு உண்டு. பார்ப்பனர் அல்லாத சீடர்கள் பலரது வாழ்க்கைமுறையின் மேன்மையை உரைகளில் உதாரணமாக எடுத்துக்கூறியதாலும் அவர்கள் (பார்ப்பன வகுப்பையும் சேர்ந்த) மற்றவர்களின் ஆன்மீகக் கேள்விகளுக்கு எப்படி பதில்கள் அளித்து நல்வழிகாட்டினர் என்பதை எடுத்துக்கூறியதாலும் ஆழ்வார் பாசுரங்களுக்கு அவர்கள் உரை எழுதவில்லை என்பதை வெறும் சாதி பாரபட்சத்தின் விளைவே என்று கூறுவது பிசகு. அப்படிப் பார்த்தால் ஆழ்வார்களின் பாடல்களையும் சேர்த்தே இருட்டடிப்பு செய்து இருக்கலாமே! தமிழ் மறை என்று ஏன் கொண்டாட வேண்டும்? வடமொழி மறை மட்டுமே நிலைபெறச் செய்து இருக்கலாமே!
தவிர பார்ப்பனர் அல்லாத சாதியில் குஹப் பெருமாள், சபரி அம்மையார், விதுரர், சாண்டிலினி அம்மையார், பிள்ளை உறங்காவில்லி தாசர், அவரது தேவியார் பொன்னாச்சியார், திருக்கச்சி நம்பிகள், மாறனேரி நம்பிகள், நம்பாடுவான், விளாஞ்சோலைப்பிள்ளை என்று எத்தனை எத்தனை மாணிக்கங்கள்! மனிதர் அல்லாத சாதியில் சடாயு (பெரிய உடையார்), அனுமன், கஜேந்திரன், விபீடணன், பிரகலாதன் என்று எத்தனை எத்தனை நல்முத்துக்கள்! இவர்களின் பெருமைகளை மறவாமல் அன்புடன் ஏடுபடுத்திய பார்ப்பன அடியார்கள் தான் எத்தனை! இன்றும் அவர்கள் புகழை அனைவரும் பாடுகின்றோம்!
இயல்சாத்து என்ற மணவாள மாமுனிகள் தொகுத்து அருளிய சிறிய நன்னூலில் தனுர்தாசரின் பாசுரமும் இடம் பெற்றுள்ளதைக் காணலாம். ஆழ்வார் பாசுரங்களுக்கு உரை எழுதவில்லை என்பதால் பார்ப்பனர் அல்லாத சீடர்கள் எவரும் உரையே எழுதவில்லை என்பதும் தவறு! உதாரணம் இதோ.
No comments:
Post a Comment