நாம் வாழும் வாழ்க்கையின் முக்கிய ஆன்மீகக் குறிக்கோள் இந்தப் பிறப்பு இறப்புச் சூழலிலிருந்து விடுபட்டு முக்தி அடைவது அன்றோ?
வைணவத்தில் முக்தி என்பது நமது ஆன்மா திருமாலின் உலகமான வைகுந்தம் சென்று சேர்வது. திருமால் அவரது அடியார் மீது சொல்லில் அடங்காத அன்பைப் பொழிபவர். அந்த அடியவர்கள் அருள் இன்றி அவ்வுலகை அடைவது மிக மிகக் கடினம். அன்பின் சிகரங்களான அவர்கள் பலருக்கு மோட்சம் அளித்துள்ளனர்.
அனைத்துச் சாதி அடியாரும் மோட்சம் அருளலாம் என்பதற்கானச் சில உதாரணங்கள் இதோ!
பொருளுரை
முதல் உதாரணம் - நம்பாடுவான்
1. சண்டாளக் குலத்தில் தோன்றிய இந்த அற்புதமான அடியவர், திருமால் உகந்த ஏகாதசி திதி அன்று உணவைத் துறந்து, திருக்குறுங்குடி என்ற பாண்டிய நாட்டுத் திருத்தலத்தில், இரவு முழுவதும் கோயிலுக்கு வெளியிலேயே திருமால் பெருமையை அழகாக மனமுருகப் பாடுவார்.
குறிப்பு:இவருடைய திருநாமத்தைத் திருமால் அருளவில்லை. எனினும் "நம்மைப் பாடுவான்" என்ற பொருளில் இவரை வடமொழியில் குறித்ததால் இதனையே மதிப்பும் கௌரவமும் வெளிப்படும் வண்ணம் "நம்பாடுவான்" என்று பராசர பட்டர் என்ற குரு தமது உரையில் தமிழ்ப்படுத்தினார்.
2. 10 வருடங்கள் தன்னலம் கருதாது இதைச்செய்து வந்த அவரை, ஒரு கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி திதி அன்று, பசியில் வாடிய ஒரு பிரமராட்சதன் வழி மறித்துக் கொல்ல முயன்றது.
குறிப்பு: வடமொழி வேதங்களை முறை தவறி ஓதி கோரமான ராட்சதப் பிறவியை அடைந்த ஒரு அந்தணன் பிரமராட்சதன் எனப்படுகின்றான்!
3. நம்பாடுவான் “நான் திருமாலை உகப்பிக்கப் பாடல்கள் பாடி முடித்த பின் உனக்கு உணவாகின்றேன்” என்று 18 சபதங்கள் செய்து ராட்சதனிடம் விடைபெற்று, திருக்குறுங்குடி நம்பியைப் பாடி வணங்கிவிட்டு, ஒரு வரமும் வேண்டாமல், ராட்சதன் இருக்கும் இடம் நோக்கி விரைந்து சென்றார்!
4. மனிதன் போல் உருவெடுத்து வந்தத் திருக்குறுங்குடி இறைவன் “நீ உயிர் தப்ப வாக்கினைத் தவறுவது குற்றமாகாது” என்று கூறியும் வாய்மையே உருவெடுத்த நம்பாடுவான் ராட்சதனிடம் சென்று தம்மைக் கொன்று உண்ண வேண்டினார்!
5. அதிர்ந்த பிரமராட்சதன் “நீ பாடிய பக்திப் பாடல்களின் நற்பயனை எனக்கு அளித்தால் உன்னை உயிரோடு விடுவேன்” என்று பல முறை நயமாகப் பேசியும் நம்பாடுவான் தாம் செய்த இறைச்சேவையைத் தம் உயிருக்கு விலை பேசவில்லை.
6. பிரமராட்சதன் நம்பாடுவானின் மாசற்ற தரத்தை உணர்ந்து, அவரடி பணிந்து “ஐயனே! என் மீது கருணை கொண்டு இந்தக் கொடிய ராட்சதப் பிறவியிலிருந்து எனக்கு முக்தி அளிப்பீர்” என்று கெஞ்சியது.
7. அதன் கதையைக் கேட்டு நம்பாடுவானும் கருணையுடன் தாம் பாடிய கைசிகப் பண்ணில் அமைந்த பாடலின் நற்பயனைப் பிரமராட்சதனுக்கு அளித்து “இதனால் முக்தி பெறுவாயாக” என்று அபயம் அளித்தார்.
குறிப்பு: நம்பாடுவான் கோயில் உள்ளே ஒரு நாளும் சென்றதில்லை! இருப்பினும் திருமால் தம் மெய்யடியாரின் வாக்கைத் தவறாமல் நிறைவேற்றுவார் என்ற உண்மையில் எவ்வளவு ஞானம்! திருமால் குறித்துப் பாடிய பாடலின் பெருமையில் எவ்வளவு நம்பிக்கை!!
8. பிரமராட்சதனும் நற்குடியில் ஒரு அடியாராகப் பிறந்து இறுதியில் முக்தி அடைந்தார். நம்பாடுவானுக்கு இந்திரலோகத்துச் சுகங்களை அளித்து அவரை இன்பமுறச் செய்யத் திருமால் விரும்பியும் நம்பாடுவான் அவற்றைத் துரும்பென மதித்து மோட்சத்த்தையே விரும்பிப் பெற்றார்.
இரண்டாம் உதாரணம் – நம்மாழ்வார்
1. தாமிரபரணி ஆற்றங்கரையில் ஒரு துறவி தவம் செய்து கொண்டிருந்தார். அவர் இருக்கும் இடம் அருகே ஒரு நாயும் வாழ்ந்து வந்தது.
2. அந்த நாய் அன்றாடம் ஆற்றை நீந்திக் கடந்து ஆழ்வார் திருநகரியில் வாழ்பவர் உண்ட எச்சில் இலைகளில் மீந்த உணவை உண்டு மறுபடியும் இக்கரை வந்துவிடும்.
3. ஒரு நாள் எதிர்பாராத ஆற்று வெள்ளத்தில் சிக்கி அந்த நாய் உயிர் துறக்க, ஒரு தெய்வத் திருமேனியை அடைந்து, அங்கு தோன்றிய ஒரு தெய்வ விமானத்தில் ஏறி, மேல்நோக்கிச் சென்றது!
4. இதைக் கண்ட அந்த யோகி தம் யோக மகிமையால் நம்மாழ்வாரின் அருளால் அந்த நாயின் ஆன்மா பரமபதம் அடைந்தது என்று அறிந்து “குருகைப் பிரானே! நீர் பிறந்த மண்ணில் வாழும் பெரியோரின் எச்சிலை உண்ட நாய்க்குப் பேறு அளித்தீர்! இந்தப் பேய்க்கும் அருள்வீர்!” என்று கூவினார்!
5. வேளாளர் சாதியில் தோன்றி, இராமானுசர் உட்பட அனைத்து வைணவர்களுக்கும் குலத் தலைவராகத் திகழ்ந்து, மோட்சம் அருள்பவர் அன்றோ நம்மாழ்வார்! இவரை அன்றோ கோயில்களில் சடாரி என்று சிரத்தில் ஏற்கின்றோம்!
மூன்றாம் உதாரணம் - திருக்கச்சி நம்பிகள்
1. கோயில்களிலும் இல்லங்களிலும் இருக்கும் இறைவனின் நிலை அர்ச்சை எனப்படும். இந்நிலையில் அவன் அசைவதில்லை; பேசுவதும் இல்லை. வைசிய குலத்துதித்த நம் திருக்கச்சி நம்பிகளுக்கு மட்டும் இந்நிலையைக் கடந்து காஞ்சிபுரத்துப் பேரருளாளன் பேசினான்! அவரது பக்தி அப்படிப்பட்டது. இதை ஊரே அறியும்.
2. நம்பிகளின் மீது பெருமதிப்பு கொண்ட ஒருவர், அன்றாடம் நம்பிகள் வரும் வழியில் காத்திருந்து, அவர் அவ்விடத்தைக் கடந்து சென்றபின், நம்பிகள் திருவடி பட்ட மண்ணை எடுத்து தம் தலையில் வைத்து, நம்பிகள் சென்ற திக்கை நோக்கிக் கரம் கூப்பி நம்பிகளை மனத்தால் வணங்கிச் செல்வார். இதை நம்பிகள் அறியார்.
3. ஒரு நாள் திருக்கச்சி நம்பிகள் காஞ்சிபுரத்துப் பேரருளாளனுக்கு எப்பொழுதும் போல் திருவாலவட்டம் வீச, வரதர் “நம்பியே! தினமும் உமது திருவடி தொட்ட மண்ணைத் தலையால் வணங்கி உம்மை வணங்கும் ஒருவன் உண்டு. நாளை நீர் யாம் அவனுக்கு மோட்சம் அருளினோம் என்று அவனுக்குத் தெரிவியும்!” என்ன, மிக்க வியப்படைந்த நம்பிகளும் அவ்வாறே செய்தார்! அந்த அடியார்க்கு அடியாரும் அந்தமில் பேரின்பத்தை அடைந்தார்.
நான்காம் உதாரணம் - துருவப் பேரரசர்
1. அரசர் குலத்தில் தோன்றிய துருவன், தமது ஐந்தாம் வயதில், சிற்றன்னையின் அதட்டலால் தந்தையின் மடி மீது அமர முடியாதுபோக, வருந்திய துருவனை அவரை ஈன்ற அன்னை “குழந்தாய்! திருமாலே நம் அனைவருக்கும் தந்தை” என்று தேற்ற, அவரும் திருமாலே தேடலாகத் தவம் புரியக் கானகம் சென்றார்!
2. நாராயண நாமமே எப்பொழுதும் ஓதும் நாரத முனிவரும் அக்குழந்தையைத் தடுக்க முயன்றார். ஆனால் துருவன் “பெருந்தகையீர்! திருமாலைக் காணும் வழி அருள்வீர்!” என்றே வேண்ட, முனிவரும் மகிழ்ந்து மந்திரமும் தவ நெறியும் போதித்தார்.
3. ஐந்து மாதங்கள் உணவையும் உறக்கத்தையும் படிப்படியாகத் துறந்து, கடுந்தவம் இயற்றிய சிறுவனுக்குத் திருமாலும் காட்சியளித்து “அப்பனே! உனக்குப் பிரமனுக்கும் மேலான துருவ நட்சத்திரப் பதவியை அளித்தேன். இவ்வுலகில் நீ சீரும் சிறப்புமாய் வாழ்ந்து, துருவ நட்சத்திரமாக மின்னி, முடிவில் என்னுடைய உலகத்தை அடைவாய்” என்று அருளினார்.
4. துருவனும் தம் குடும்பத்தார் அனைவரும் உகக்க ஊர் திரும்பி, அனைத்துச் செல்வங்களும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்து, திருவதரியில் தவம் இயற்ற, ஒரு நாள் ஒரு பேரொளி வீசும் தங்க விமானத்தில் அவரை ஏற்றிச் செல்லத் திருமால் அன்பர் வந்தனர்.
5. துருவனும் அதில் ஏறும் முன் “அடியேனது அன்னை எங்கே?” என்று அவர்களைப் பணிவுடன் வினவ, அந்த வைகுந்தத்து அடியவர்கள் “அவர்கள் தங்களுக்கு அன்னை என்ற பெரும்பேறு பெற்றதால் முன்னமே உயர்கதி அடைந்தார்” என்றனர்! இன்றும் தாயும் தனயனும் வான் மண்டலத்தில் மின்னுவதைக் கண்டு மகிழலாம்.
ஐந்தாம் உதாரணம் - மணவாள மாமுனிகள்
1. தமிழ் வேதங்களான ஆழ்வார்களின் அருளிச்செயல்களின் பெருமையையும் ஒரு சீடன் வாழவேண்டிய முறையையும் வெளியிட இராமானுசர் மறுபடியும் மணவாள மாமுனிகளாக அந்தணர் குலத்தில் திருவவதரித்தார்.
2. திருப்புல்லாணி என்ற பாண்டிய நாட்டுத் திருத்தலத்தில், எம்பெருமானைத் தொழுது வாழ்த்திய பின், ஊர் திரும்பும் வழியில், மணவாள மாமுனிகளும் அவரது அடியார்களும் ஒரு பசுமையான புளிய மரத்தின் கீழ் சற்று இளைப்பாறினர்.
3. அங்கிருந்து செல்லும்பொழுது, “குருநாதரே! நமது இளைப்பைத் தீர்த்த இந்தப் புளிய மரத்திற்கு அருள் செய்ய வேண்டும்” என்று சீடர்கள் வேண்ட, மணவாள மாமுனிகளும் அந்த மரத்தைத் திருக்கைகளால் தொட்டு “நாம் பெற்ற பேற்றை நீயும் பெறக் கடவாய்” என்ன, உடனேயே அம்மரத்தில் இருந்த ஆன்மா வைகுந்தம் சேர்ந்ததால் அந்த மரம் உலர்ந்தது!
முடிவுரை
திருமாலடியார்கள் அனைவரும் ஒரே குலம் - தொண்டர் குலம். “அவர்கள் எமது கண்ணான செல்வங்கள்” என்று திருமாலே அருளுகின்றார்.
திருமாலடியார்களது சாதியையும் குலத்தையும் ஆராயாமல் அவர்களது ஒப்புயர்வற்றப் பண்புகளையும் அவர்கள் அருளிய வார்த்தைகளின் ஏற்றத்தையும் அன்புடன் ஆராய்ந்து அந்த உத்தமர்களைப் போற்றிப் பணிந்தால் நாம் கோயிலுக்குள் செல்லாவிடிலும் கோயில் கருவறையில் இருக்கும் இறைவன் அருள் தாமே நம்மைத் தேடி வரும்!
நமது ஆன்மா எந்த உடலில் இருந்தாலும் - தாவரமோ விலங்கோ மனிதவுடலோ பேயோ எதுவோ - திருமாலடியார்களது நல்லுறவு இருப்பின் முக்தி நிச்சயம்.
நம் அனைவரது இம்மை மறுமை வாழ்வு திருமாலடியார் அருளால் ஒளி வீசித் திகழட்டும்!
No comments:
Post a Comment