Search This Blog

Friday, 23 September 2022

திருவேங்கடமாமலையின் பெருமை

ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும்
திருவேங்கடமாமலை


Image Source: https://tirupati-balaji.com/


முன்னுரை
 
அண்மையில், “திருவேங்கடமாமலையின் 20 திருநாமங்களை வாயாரச் சொன்னாலே நம் வினைகள் ஓயும்” என்று புராணங்கள் கூறுவதாகப் படித்தேன்.

திருவேங்கடவனைப் பாடிய ஆழ்வார்கள் 10 [ஆண்டாள் உள்பட]. அவர்கள் ஒவ்வொருவரும் எம்பெருமான் உறையும் திருமலையையும் தவறாமல் போற்றியுள்ளனர். அப்பாசுரங்களையும், அப்பாசுரத்தில் முழங்கியுள்ள உண்மைகளைத் தன்னகத்தே கொண்ட திருவேங்கடமாமலையின் திருநாமங்களையும் சுவைத்து மகிழ்வோம், வாரீர்!




பகுதி 1 - திருவேங்கடமாமலையின் அளப்பரிய பெருமை!


ஸ்ரீ பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி - பாசுரம் # 26
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளியதை ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரையில் விளக்குகின்றார்:

“சிலர் இழந்த செல்வத்தையும், சிலர் புதிய செல்வத்தையும் வேண்டுவர். அச்செல்வத்தைப் பெற்றதும் [எம்பெருமானை விட்டு] எழுந்து சென்றுவிடுவர். இவர்களே "எழுவார்".

சிலர் பிறவிக்கடலிலிருந்து மீண்டு வைகுந்தம் ஏகினாலும், மோட்ச உலகமான வைகுந்தத்தில் எம்பெருமானுக்கும் அவன் அடியவருக்கும் தொண்டு செய்யாமல், தங்களின் ஆன்ம மகிழ்ச்சியிலேயே மூழ்க நினைத்து, எம்பெருமானிடம் மீளா விடை கொள்வர். இவர்களே ‘கைவல்யார்த்திகள்’ என்று அழைக்கப்படும் "விடைகொள்வார்".

மற்றையோர் எம்பெருமானையே விரும்பி, அவனைப் பிரியச் சகியாமல், எப்பொழுதும் தண்துழாய் முடியனான அவனைத் தொழுவார்.

இந்த மூன்று வகையினருக்கும் [அவரவர் விரும்புவதைக் கிடைக்கவிடாமல் தடுக்கும்] தீவினைகளை 'வேங்கடம்' போக்கும். 'வேங்கடம்' என்ற சொல்லுக்கு 'பாவங்களை எரிக்கும்' என்று பொருள்.

அத்திருமலை, இவ்வுலகத்தோருக்கு மட்டுமின்றி, எம்பெருமானுடனேயே எப்பொழுதும் வைகுந்தத்தில் வசிக்கும் [நித்தியர்கள் ஆகிய] அடியார்களுக்கும், ‘[அவன் பரம்பொருளாக இருந்தும்] எல்லோருக்கும் கிட்டும் வண்ணம் திருவேங்கடத்தில் நிற்கின்றான்! அவனது இந்த எளிமை முதலான திருக்கல்யாண குணங்களை அனுபவிக்கவேண்டும்!’ என்ற ஆசையை மனத்தில் தூண்டி, அவர்களையும் திருவேங்கடத்திற்கு எழுந்தருளும்படிச் செய்யும்.”

இப்படி “எல்லோருக்கும் வினைகளைப் போக்கும் திருமலை [வைகுந்தத்து அமரர்கள் உள்பட] எல்லோராலும் தொழத்தக்கதாயுள்ளது” என்று ஆழ்வார் முழங்கியுள்ளார்.




ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 3-3-8
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
"இந்திரன் கல்மழை பொழிந்தபொழுது, ஆயர்குலத்தோரையும் ஆநிரைகளையும் ஒரு மலையை எடுத்து காத்தவனும். மகாபலியிடம் மூவடி மண் வேண்டி ஓங்கி உலகளந்து எல்லோரையும் காத்தவனும் ஆகிய பரம்பொருளே விரும்பிச் சென்று சேர்ந்த இடமன்றோ திருவேங்கடமாமலை?

அம்மலையைத் தொழுதாலே [அவன் திருவடிகளை அடையவிடாமல் நம்மைத் தடுக்கும்] நம் வினைகள் யாவும் ஓயும்."




ஸ்ரீ பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி - பாசுரம் # 5-4-1
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உரை - சுருக்கம்
 
ஸ்ரீ பெரியாழ்வார் பாசுரத்தில் திருவேங்கடத்தை [வானத்தை முட்டும் உயர்ந்த சிகரங்கள் உடைய] 'தண் திருவேங்கடம்' என்று விளிக்கின்றார். இங்கே 'தண்' என்ற சொல்லுக்கு ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை "பிறவிக்கடலின் துன்பங்களைத் தணிக்கும் தண்மை" என்று உரை அருளியுள்ளார்!!




ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் - நான்முகன் திருவந்தாதி - பாசுரம் # 40
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
பாசுரத்தின் உரையில் ஆசாரியர் அருளியவை:

"'திருவேங்கடம்' என்று [எவ்விதக் குறிக்கோளும் இல்லாமல்] தற்செயலாக என் வாய் அத்தெய்வமலையின் திருநாமத்தை ஒரே ஒரு முறை உரைத்தது.

அதுவே காரணமாக [எனக்கு வைகுந்தம் கைபுகுந்தது என்பது மட்டுமே அன்றி] மற்றவருக்கும் கூட வீடுபேறு [மோட்சம்] அளிக்கும் வழியாய் நானே நிற்கும் ஆற்றல் பெற்றேன்!

'எப்படி நமக்கு இப்படி ஒரு பேறு அமைந்தது?' என்று ஆராய்ந்தேன். சாத்திரங்களாலே மட்டுமே அறியப்படும் திருமகள் கேள்வனின் திருவடிகள் என்ற வலையில் அகப்பட்டு, வேறு ஒருவருக்கும் ஆளாகாமல் இருந்தேன் காண்! [நெஞ்சே! நீயும் அவனை ஆராய்ந்து அறிவாயாக!]"




ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 1-8-2
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
"பிரான் அவன் பெருகுமிடம்" என்பதற்கான உரையை ஆசாரியர் மிக அருமையாக அருளியுள்ளார்:

"குழந்தை முதலில் படுத்தே இருக்கும். வளர்ச்சி அடைந்த பின்பே நிற்கும் அன்றோ? அதே போல, பூதனையின் முலைப்பாலைப் பருகியபடி அவள் உயிரை உண்ட பிரான் [ஆகிய குழந்தை!] பள்ளி கொள்ளக் கற்றது திருப்பாற்கடலிலும், திருவரங்கத்திலும்; திருவடிகளை ஊன்றி நிற்கக் கற்றது திருவேங்கடத்தில்! எனவே, எம்பெருமானுக்கே வளர்ச்சியைக் கொடுத்த இடம் [பெருகுமிடம்] திருவேங்கடமாமலை!

அம்மலையை ‘யுகங்கள் தோறும் வெண்மை, கருப்பு, மணி என்று பல வண்ணங்களில் காட்சியளிப்பவன் [உறையும் மலை]’ என்று எண்ணித் தெள்ளியார் [ஞானத்தில் தெளிந்தவர்] வணங்குவர். நெஞ்சமே! அத்திருமலையை அடைவாய்!"

ஆக, திருவேங்கடமாமலை நம் போன்றோருக்கு மட்டுமே அன்றி, வைகுந்தவாசிகளுக்கும், ஏன் வைகுந்தநாதனுக்கே கூட வளர்ச்சியை அருளும் பொன்மலையாம்!




பகுதி 2 - திருவின் மணாளன் உறையும் திருவேங்கடமாமலையின் செலவச்செழிப்பு!


ஸ்ரீ திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான் - பாசுரம் # 3
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
"மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்தி செய்ய நின்றான்" என்ற சொற்றொடருக்கு ஆசாரியர் அருளிய உரை:

“தமிழகத்தின் வடக்கு எல்லையாக விளங்கும் திருவேங்கடத்தில் பலாப்பழங்கள் வேரோடு பணையோடு வேறுபாடின்றி எங்கும் பழுத்துக்கிடக்கின்றன. ஆதலால், குரங்குகள் ஒரு பழத்தில் வாய் வைத்து, அவைகளின் இயற்கைக் குணத்தால் மனம் மாறி, வேறொரு தடித்த பழத்தில் வாய் வைக்கத் தாவுகின்றன.

செழுமை நிறைந்த திருவேங்கடம் ஒரு மாமலையாகத் திகழ்கின்றது. வைகுந்தமும், இப்பூவுலகும் சேர்ந்தாலும் இம்மலையின் ஒரு மூலைக்கு ஈடாகாது. வைகுந்த வானவர்களும் அந்திப் பொழுதில் இங்கே வந்து எம்பெருமானைத் தொழுகின்றனர்!




ஸ்ரீ பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி - பாசுரம் # 89
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
பாசுரத்தின் உரையில் ஆசாரியர் அருளியவை:

"பழுத்த வயதடைந்த குறவர் இனப்பெரியோர்கள், அவர்களால் இயலாவிட்டாலும், குலத்தொழிலை விடாது செய்வதற்கு, காட்டுப்பன்றிகளைக் கொண்டு திருவேங்கடத்து நிலத்தை உழுது, பசுமையான தினை விதைகள் விதைப்பர்.

அம்மலையில் ஒரு பக்கம் ஒன்றை விதைக்க, மறு பக்கம் இன்னொன்று நன்கு விளைந்து நிற்கும். அப்படித் தடித்த மூங்கில்கள் நன்கு வளர்ந்து விண்ணைப் பிளக்கின்றன.

இத்தகைய செழிப்புடைய திருவேங்கடமே புல்லாங்குழல் ஊதும் எம்பெருமான் உறையும் மலை!"




ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 6-10-1, # 6-10-2, # 6-10-3
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
இப்பாசுர வரிகளுக்கு ஆசாரியர் அருளிய மெய்யுரைகள்:

"திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடத்தெம்பெருமானே!": ஒரு பெண்ணின் முகம் திலகமிட்டால் முழுமை அடையும். அதைப்போல இவ்வுலகம் [நிலமாமகளின் திருமுகமண்டலம்] முழுமை அடைவது திலகம் போன்ற திருவேங்கடமாமலையாலே. அங்கே உறையும் திருவேங்கடத்தெம்பெருமானே!!

"சேறார் சுனைத் தாமரை செந்தீ மலரும் திருவேங்கடத்தானே!": செந்தீயைப் போல ஒளிரும் செந்தாமரைகள், சேறுடைய சுனைகளில் மலர்ந்து, நீர் மேல் எரியும் நெருப்புகளாய் காட்சி அளிக்கின்றன. இந்த நீர் விளக்குகளை ஆழ்வார் வணங்குகின்றார்.

"தெண்ணல் அருவி மணி பொன் முத்தலைக்கும் திருவேங்கடத்தானே!": மணிகள், பொன், முத்துக்கள் ஆகியவற்றைச் சிதறடிக்கும் தெளிந்த நீர் உடைய அழகிய அருவிகள் நிறைந்த திருவேங்கடத்தின் மேல் நிற்பவனே!




பகுதி 3 - திருவேங்கடமாமலையின் மீது வசித்தலின் சீர்மை


ஸ்ரீ பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி - பாசுரம் # 53
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
பாசுரத்தின் உரையில் ஆசாரியர் அருளியவை:

"நீர் வளம் மிக்க திருவேங்கடத்தில் சுனைகளும், அருவிகளும் மலிந்து உள்ளன. இதனால் நிறைய பூங்கொடிகள் வளர்கின்றன.

அப்பூங்கொடிகள், [திருவேங்கடத்திலேயே நெடுநாள் அமர்ந்து, அசையாமல் தவம் செய்ததால்] குழற்கற்றை நீண்டு வளரப்பெற்ற முனிவர்களை 'இவை இளம் குன்றுகள், கொழுகொம்புகள்' என்று எண்ணி அம்முனிவர்கள் மீது படர்கின்றன!

கடுந்தவம் புரிந்த அம்முனிவர்களும் தவம் சித்தித்த பின் வேறு உலகங்கள் போய்விடுவர். ஆனால், யாம் விரும்பும் பயனைக் கடுந்தவமேதுமின்றி இந்த உடலிலேயே அடைந்துவிட்டோம் - இவ்வேங்கடமே யாம் விரும்பி வசிக்கும் மலை!"




ஸ்ரீ குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி - பாசுரம் # 4-10
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
"இந்திரன் அனுபவிக்கும் சுவர்க்க அனுபவங்கள் ஒன்றும் வேண்டாம். பவளவாயன் எம்பெருமான் வசிக்கும் திருவேங்கடம் என்ற அப்பொன்னான திருமலையில் ஏதேனும் ஒன்றாக - [மரமோ அல்லது நெறியோ அல்லது மீனோ அல்லது படியோ] - அங்கே வசிக்கப்பெறுவேனாக!" என்று அறுதியிடுகின்றார்.




ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் - நாய்ச்சியார் திருமொழி - பாசுரம் # 8-9
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
ஆழ்வார் திருமகளார், கருநிற முகில்களைக் கண்டு, "மாமுகில்களே! எங்கிருந்தோ வந்தீர்கள்! உங்களுக்கு எம்பெருமானைத் தொழத் தேவையேதும் இல்லை. ஏனென்றால், நீங்கள் அந்தத் திருவேங்கடத்தையே வாசமாகக் கொண்டு வாழும் பேறு பெற்று, திருவேங்கடத்தானைத் தொழுது தொழுது கறுத்த நிறம் பெற்றீர்கள்!" என்று மேக விடு தூதில் திருவேங்கடமாமலையின் சிகரங்களைத் தொடும் மாமுகில்களைக் கொண்டாடுகின்றார்.




பகுதி 4 - ஸ்ரீ இராமானுசருடைய திருவடிகளின் ஏற்றம்!


ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 76
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம்
 
"நிலைத்து நிற்கும் வண்மையான புகழும், செழுமையான நீர்வளமும் மிக்க வேங்கடம் என்னும் பொற்குன்றம்" என்று திருவேங்கடத்தைப் போற்றியுள்ளார். "உன்தனுக்கு எத்தனை இன்பம் தரும்" என்றதால் ஸ்ரீ இராமானுசர் மிக விரும்பிய வெற்பு திருவேங்கடம் என்பதும் தெளிவு.

முடிவில், "இராமானுசா! எம் ஐயனே! உமது திருவுள்ளத்திற்குத் திருவேங்கடம் எவ்வளவு இன்பத்தைப் பயக்குமோ, அதே போல அடியேனது மனத்திற்கு உமது திருவடிகள் இன்பத்தைப் பயக்கும். அருள் கூர்ந்து அவற்றை அடியேனுக்கு ஈந்தருளவேண்டும்!" என்று வேண்டுகின்றார்.




பகுதி 5 - திருவேங்கடமாமலையின் திருநாமங்களில் ஆழ்வார்களுடைய திருவாக்குகளின் எதிரொலி
 
திருவேங்கடமாமலையின் 20 திருநாமங்கள் ஆழ்வார்கள் அருளிய மெய்ப்பொருள்களை எதிரொலிக்கின்றன என்பதையும் காணலாம்!

திருமகளுக்கும் நிலமகளுக்கும் நாதனான எம்பெருமான் உறைவதால்:

1. ஸ்ரீநிவாஸாத்ரி
2. ஸ்ரீசைலம் [திரு + மலை = ஸ்ரீ + சைலம்]
3. வராஹாத்ரி

வைகுந்தத்து அமரர்கள் உள்ளிட்ட அடியார்கள் வந்து வணங்குவதால்:

4. சேஷாத்ரி
5. கருடாத்ரி
6. அஞ்சனாத்ரி
7. நீலாத்ரி
8. நாராயணாத்ரி

[நீலா, நாராயண என்பவை இப்பூவுலகில் வாழ்ந்த அடியார்களைக் குறிக்கும் என்று படித்ததாக நினைவு]

ஞானிகளால் வணங்கப்படுவதால் + வணங்குவோருக்கு ஞானம் அளிப்பதால்:

9. ஞானாத்ரி

[வ்ருஷபன் என்ற] தானவனை எம்பெருமான் கொன்றதால் [வ்ருஷபன் வேண்டியபடியே]:

10. வ்ருஷபாத்ரி

'பொன்மலை' என்று போற்றும்படியுள்ளதால்:

11. கனகாத்ரி
12. சுமேரு சிகராத்ரி

எல்லோருக்கும் தீவினைகளை அறுத்து, அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை அருளி, இன்பம் பயப்பதால்:

13. வேங்கடாத்ரி
14. வ்ருஷாத்ரி
15. சிந்தாமணி கிரி
16. வைகுண்டாத்ரி
17. ஆனந்தாத்ரி

சிங்கங்கள் [முதலான மலைவாழ் காட்டு மிருகங்கள்] சீராக வாழ்வதால்:

18. சிம்ஹாத்ரி

அருவிகள் மற்றும் செந்தாமரைச் சுனைகள் நிறைந்ததால்:

19. தீர்த்தாத்ரி
20. புஷ்கராத்ரி




முடிவுரை
 
இப்படி ஆழ்வார்களும் ஆசாரியர்களும் திருவேங்கடவனை மட்டுமே பாடாமல் திருவேங்கடமாமலையையும் [திருவேங்கடவனை விட ஒரு படி மேலாகவே வைத்துப்] போற்றியுள்ளனர்.

நாமும் திருவேங்கடமாமலையின் பெருமைகளையும், திருநாமங்களையும் பாடுவோம். மற்றவருக்கும் பகிர்ந்தளிப்போம். திலதம் உலகுக்காய் நின்ற திருவேங்கடமாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே!!

எல்லோரும் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புற ஸ்ரீ பட்டர்பிரான் கோதை இன்னருள் புரிவாள்!

வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!
மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!




நன்றிகள் பல!
 
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!

பொலிக! பொலிக! பொலிக!




No comments:

Post a Comment