Search This Blog

Wednesday, 5 October 2022

திருவேங்கடத்தான் பெருமை

ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும்
திருவேங்கடத்தான்


Image Source: https://in.pinterest.com/pin/818951513472726531/


முன்னுரை
 
ஸ்ரீ பெரியாழ்வார் "நீ பிறந்த திருவோணம் இன்று நீ நீராட வேண்டும்!" என்று அருளியபடியே திருப்புரட்டாசி திருவோணம் ஆகிய இன்று திருவவதார உற்சவம் கண்டருளும் திருவேங்கடவன் தீர்த்தவாரி நடத்திக்கொள்கின்றான்.

ஆழ்வார்களும் ஆசாரியர்களும் திருவேங்கடமாமலையை எவ்வாறு பெருமதிப்புடன் போற்றிப் பாடினர் என்பதைத் திருவேங்கடமாமலையின் பெருமை என்ற கட்டுரையில் விண்ணப்பம் செய்திருந்தேன்.

இக்கட்டுரையில் இன்று திருவவதார உற்சவம் கண்டருளும் திருவேங்கடவனை ஆழ்வார்களும் ஆசாரியர்களும் எவ்வாறு உள்ளம் உருக உருகப் பாடியுள்ளனர் என்பதை ஓரளவாகிலும் சுவைத்துத் தேனருவியில் நீராடுவோம், வாரீர்!




அர்ச்சாவதாரத்திற்குப் பொற்கால் பொலியவிட்ட இடம்!


ஸ்ரீ திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான் - பாசுரம் # 1
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
"விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்" என்ற சொற்றொடருக்கு ஆசாரியர் அருளிய உரை:

"விண்ணவர்கோன்" ஆகிய ஸ்ரீ பரமபதநாதன், நம் போன்றவர்களுடனும் கலந்து பழக, திருவுள்ளம் இரங்கி, நம் கண்களுக்குப் புலப்படாத வைகுந்தத்திலிருந்து கீழே இறங்கினான். அப்போது அவனுடைய பொற்காலை முதலில் பதித்த இடம் எதுவெனில் நறுமணம் வீசும் சோலைகள் நிறைந்த திருவேங்கடமாமலை! அதன் பின்பே, திருக்காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் நடுவே திருவரங்கநாதனாகப் பாம்பணையில் பள்ளி கொண்டான்.

எனவே, நாம் எளிதில் கிட்டிப் பழகச் சிலையாய் நின்று அருள் பாலிக்கும் "அர்ச்சாவதாரம்" என்ற நிலைக்குத் திருவேங்கடவனே முன்னோடியாம். ரிக் வேதமும் சங்கத் தமிழும் திருவேங்கடவனைப் போற்றிப் பாடுகின்றன.




திருவேங்கடவனின் பெருமையை உணர்வார் ஆர்?


ஸ்ரீ பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி - பாசுரம் # 68
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளியதை ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரையில் விளக்குகின்றார்:

  • ஊழி தோறும் ஆராய்ந்தாலும், நீ பரம வைகுந்தத்தில் விண்ணகத்தானாக விளங்கும் பெருமையை உணர்வார் யார்?
  • நீ விண்ணகத்தானாக இருந்தும் மண்ணில் வந்து பிறப்பதன் பெருமையை உணர்வார் யார்?
  • இப்படி ஒப்பற்ற பெருமை வாய்ந்தவனாக இருந்தும், விண்ணவரும் மண்ணவரும் தொழலாம் படி நீ திருவேங்கடத்தில் நிற்பதன் பெருமையை உணர்வார் யார்?
  • நீ நால்வேதப் பண்ணகத்தில் [இசைச் சுவரங்களுள்] விளங்குவதின் பெருமையை உணர்வார் யார்?
  • நீ கிடக்கும் திருப்பாற்கடலின் பெருமையை உணர்வார் யார்?

ஞானத்திற்கு நீயே புகலிடம் என்றாலும் உன் பெருமையை - அப்பெருமை உன்னுடைய மேன்மையாக இருந்தாலும் சரி அல்லது உன்னுடைய எளிமையாக இருந்தாலும் சரி அல்லது உன்னுடைய கருணையாக இருந்தாலும் சரி - உள்ளபடி உணர்ந்தவர் எவரும் இலர்!




"சரி, இவ்வளவு பெருமை உடையவன் இறங்கி வந்துள்ளான் என்றாலும் நாம் சென்று அவனைக் கிட்டமுடியுமோ?" என்ற வினாவிற்கான விடை ஆழ்வார்களின் பாசுரங்களில் உள்ளது:


ஸ்ரீ பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி - பாசுரம் # 2-9-6
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம்
 
"வேதப் பொருளே! என் வேங்கடவா! வித்தகனே!" என்பதற்கான உரையில் ஆசாரியர் அருளியுள்ளவை:

"வேதப் பொருளாக இருந்தபோதும், 'என் வேங்கடவன்!' என்று உரிமையுடனும், அன்புடனும் நினைக்கும்படி திருவேங்கடமாமலையில் நிற்பவனே! [இந்த அற்புதமான குணத்தினால்] வியக்கத்தக்கவனே!" என்று ஆழ்வார் கொண்டாடுகின்றார்.

இதனால், திருவேங்கடவனின் மேன்மையைக் கண்டு நாம் மிரள வேண்டியதில்லை - அவன் வேதப் பொருளாக இருப்பினும் "என் வேங்கடவன்!" என்று நாம் சொல்லும்படி இருப்பவன், காணீர்!




ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் - நாய்ச்சியார் திருமொழி - பாசுரம் # 1-3
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
"கோவிந்தன் என்பதோர் பேரெழுதி வித்தகன் வேங்கடவாணன் என்னும் விளக்கினில்" என்பதற்கான உரை:

"மன்மதனே! உன்னுடைய மலர்க்கணையில் "ஆநிரை காத்தவனே கோவிந்தா! உன்னை பட்டர்பிரான் கோதை மிக விரும்புகின்றாள்!" என்று எழுதி அவன் நெஞ்சில் அம்மலர்க்கணைகள் தைக்கும் வண்ணம் செய்யவேண்டும். அவனுக்கும் என் மேல் அன்பு பிறந்து, எங்கள் திருமணம் இனிதே நடைபெறவேண்டும். அற்புதனான திருவேங்கடவன் என்ற விளக்கினில் நான் புகவேண்டும்! இதை நீ செய்ய வேண்டும்!"

ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் வேங்கடவாணனை [வேங்கடத்தில் வாழும் எம்பெருமானை] "விளக்கு" என்கிறாள்.

வைகுந்தவாசிகளுக்கு எம்பெருமானுடைய கருணை, எளிமை, குற்றத்தையும் நற்றமாக கொள்ளும் பண்பு போன்ற குணங்கள் தேவையே இல்லை - ஏனெனில், அவர்கள் ஞானத்தில் மிகச்சிறந்து, குற்றமற்றவர்களாய், பிறவி என்ற துன்பத்திற்கு ஆளாகாமல், ஒரு ஜீவாத்மா எங்கு இருக்க வேண்டுமோ அங்கு வாசம் செய்து, எம்பெருமானுக்குத் தொண்டு செய்துகொண்டிருக்கிறார்கள். இதனால், எம்பெருமான் வைகுந்தத்தில் பகலில் ஏற்றிய விளக்காக உள்ளான்.

இருள் சூழ்ந்திருக்கும் இந்த உலகத்திலேயே இப்பெருங்குணங்கள் யாவும் தேவைப்படுகின்றன. இவ்வுலகில் திருவேங்கடவனாக அவன் இருப்பதனால் அவன் அற்புதனாக, குன்றிலிட்ட விளக்காகத் திருவேங்கடமாமலை மீது ஒளி வீசுகின்றான்!




ஸ்ரீ பெரியாழ்வார் எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடி, தமது திருமகளாரை எம்பெருமானுக்குத் திருமணம் செய்து கொடுத்து, அவனுக்கு மாமனாரானவர்.

ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் எம்பெருமானின் இனிய மணவாட்டி. அவள் சூடிக்கொடுத்த மாலையை அவன் சூடிக்கொள்வான்.

இவர்கள் இருவரும் எம்பெருமானை மிக எளிதாக அடைய முடியும். நம் போன்றவர்கள் அப்படிச் செய்ய இயலுமோ?" என்ற கேள்விக்கும் ஆழ்வார்களின் பாசுரங்கள் விடை அளிக்கின்றன.


ஸ்ரீ பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி - பாசுரம் # 72
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
பாசுரத்தின் உரையில் ஆசாரியர் அருளியவை:

"வைகுந்தவாசிகள் திருவேங்கடவனைத் தொழுகின்றார்கள். அதே போல, திருவேங்கடமாமலையில் வாழும் குரங்குகளும் எம்பெருமானைத் தொழுகின்றன!

அக்குரங்குகள், முனிவர்களைப் போல அதிகாலையில் எழுந்து, குளிரைப் பொருட்படுத்தாமல் அங்குள்ள சுனைகளில் நீராடி, அப்போது அலர்ந்த மலர்களைப் பறித்து, திருவேங்கடவனின் திருவடிகளில் அவற்றை இட்டுத் தொழுகின்றன!

என் உள்ளமே! திருவேங்கடவனின் இந்த எளிமையைக் கொண்டாடி, அக்குரங்குகளைப் போலவே நீயும் திருவேங்கடவனின் திருவடிகளில், அவனது திருநாமங்களைப் பாடிக்கொண்டே, தூமலர்களைத் தூவித் தொழுவாயாக!"




ஸ்ரீ பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி - பாசுரம் # 70
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
பாசுரத்தின் உரையில் ஆசாரியர் அருளியவை:

அன்று, கஜேந்திரன் என்ற ஒரு யானையின் காலை முதலை பற்ற, யானையின் கூக்குரலைக் கேட்டு, அரை குலைய தலை குலைய வந்து, யானை அளித்த ஒரு தூய தாமரை மலரைப் பெற்றுக்கொண்டான்.

அதே போல, திருவேங்கடமாமலையில் வாழும் யானைகளும் தன்னை வணங்குமாறு ஞானத்தை அளிக்க வல்லவன் திருவேங்கடவன்.

திருவேங்கடமாமலையில் வாழும் யானையானது, தனது தலையில் பெருகும் மத நீரால் வாயைக் கொப்பளிக்கும். கீழே தேங்கி இருக்கும் மத நீரில் கால்களைக் கழுவும். செருக்குடன் பொய்கைக்குச் சென்று, மலர்களைக் கொய்து, அவற்றைத் திருவேங்கடவனுக்கு அளித்து வணங்கும்.

குலப்பிறப்பு, செயல்கள், தன்மை ஆகியவை எம்பெருமானுக்கு ஒரு பொருட்டல்ல என்பதை உணர இது போதாதோ?




"அறிந்தே பாவங்கள் செய்யாதவை என்பதால் நம்மைக் காட்டிலும் விலங்குகள் தூய மனங்கள் உடையவை. அதிலும், ஆழ்வார்களுடைய பாசுரங்களில் பேசப்படும் இவ்விலங்குகள் திருவேங்கடமாமலை மீது வாழும் பேறு பெற்றவை!

நமக்கோ மனத்தில் ஓர் தூய்மை இல்லை. வாயில் ஓர் இன்சொல் இல்லை. திருவேங்கடமாமலை மீது வாழும் பேறும் நாம் பெறவில்லை. இப்படி இருக்கையில், நாம் எவ்வாறு திருவேங்கடவனைப் பற்றமுடியும்?" என்ற கேள்விக்கும் ஆழ்வார்களின் பாசுரங்களில் விடைகள் உள்ளன!


ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 3-3-5
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம்
 
"தகதகவென மின்னும் உருக்கிய பொன்னின் ஒளியைப் [சோதியைப்] போன்றவன்; வேதம் அறிந்தவர்கள் கொண்டாடும் நான்மறைகளால் 'ஆராவமுதன்' என்று போற்றப்படுபவன்; அனைத்துக்கும் காரணமான முழுமுதற்கடவுளாம் ஆதிமூர்த்தி; இன்னார் இனையார் என்ற வேறுபாடின்றி எல்லோராலும் தொழப்படுபவன்," என்பதோ எம்பெருமானுக்குப் பெருமை? "தீது இல் சீர்த் திருவேங்கடத்தான்" என்பதன்றோ அவன் பெருமை!

"தீதில் சீர்த் திருவேங்கடத்தான்" என்பதற்கான உரையில் இப்பாசுரத்தின் ஆழ்பொருள்களை ஆசாரியர் சொல்லொணா அழகுடன் வெளியிட்டருளியுள்ளார்:

ஸ்ரீ நம்மாழ்வார் அருளுவது: "திருவேங்கடத்தான் தனது அருளைப் வெள்ளமெனப் பொழிவதற்கு இந்தப் பிரபஞ்சத்திலேயே மிகவும் குணக்கேடனைத் தேடி, 'நீசனேன் நிறைவு ஒன்றும் இலேன்' ஆகிய அடியேனைக் கண்டுபிடித்து, அடியேனுக்கு அருள் புரிந்தான். இதுவே அவனுடைய சீர்.

எனினும், அடியேனுடன் அவனது தேடலை நிறுத்திக்கொண்டால், அது அவனுடைய சீர்மைக்குத் தீது! அவன் பட்டினி கிடந்தது, தவமிருந்து அடியேனைக் காட்டிலும் நீசனைத் தேடிக்கொண்டிருக்கின்றான். அருள் புரிவதற்குக் காத்திருக்கின்றான். எனவே தான், அவன் தீதில் சீர்த் திருவேங்கடத்தான்! அவனது இந்தப் பெருமைக்கு முன் "அவன் எல்லா உலகும் தொழும் ஆதி மூர்த்தி" என்ற பெருமை நிற்காது காணீர்!"

குறிப்பு: தாய்ப்பசுவிற்கு அன்று ஈன்ற கன்றின் அழுக்கு விருந்தும் மருந்தும் ஆகும்! ஆசையுடன் கன்றுக்குட்டியை நக்கிக் கொடுக்கும். குற்றத்தைக் நற்றமாகக் கொள்ளும் இந்தக் குணமே "வாத்சல்யம்" என்று போற்றப்படுகின்றது. திருவேங்கடத்தானுடைய திருக்கல்யாண குணங்களிலேயே மிகச் சிறந்தது "வாத்சல்யம்" என்பதை இப்பாசுரத்தால் ஆழ்வார் வெளியிட்டு அருளியுள்ளார் என்பதை ஆசாரியர் நமக்கும் புரியும் வண்ணம் உரை அருளியுள்ளார்! இது திருவேங்கடவனின் வாத்சல்யத்தைக் காட்டிலும் பெரிய வாத்சல்யம்!!




திருவேங்கடவனின் வாத்சல்யத்தைப் பற்றிக் கேட்டும் நம்பிக்கை வராதவர்களுக்கு, இந்த இரகசியத்தின் இரகசியத்தை நன்கு புரியும்படி ஸ்ரீ திருமங்கையாழ்வார் மேலும் வெளிப்படையாக அருளியுள்ளார்! ஆசாரியர்கள் அருளால் அது நம்மிடம் வந்தடைந்துள்ளது. என்னவென்று காண்போம்:


ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 1-9-9
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
“பாவமே செய்து பாவியானேன்” என்பதற்கும் "எங்கள் மாதவனே" என்பதற்கும் உள்ள உரை மிகவும் போற்றத்தக்க உரை.

“பாவமே செய்து பாவியானேன்”:

"திருவேங்கடவா! நான் புண்ணியம் எதுவும் செய்யவில்லை. நான் செய்த பாவங்களும் உன்னைப் பொருட்டுச் செய்திருந்தால் அவை புண்ணியங்கள் ஆகியிருக்கும். எடுத்துக்காட்டு: கண்ணணை விரட்டி ஓடிக்கொண்டிருந்த யசோதை, ததிபாண்டன் என்பவரிடம், "கண்ணன் இங்கே வந்தானோ?" என்று வினவ, கண்ணனைப் தம்முடைய பானைக்குள் ஒளித்துவைத்திருந்த ததிபாண்டன், ஒரு கணமும் தயங்காமல், "இல்லை" என்று யசோதையிடம் பொய் சொல்லி, தமக்கும் தம் பானைக்கும் வைகுந்தம் பெற்றார்! பொய் சொல்வது பாவம். எனினும், கண்ணனைக் காக்கப் பாவம் செய்து புண்ணியவானாகி வைகுந்தம் சென்றார். நான் அப்படி எதுவும் செய்யவில்லை. பாவமே செய்து பாவியானேன்.

இருப்பினும், அணுவளவும் அச்சமின்றி உன் முன்னால் வந்து நிற்கின்றேன்! ஏனென்றால், நீ எங்கள் மாதவன்!"

வடமொழியில் “மா” என்றால் திருமகள். "தவ:" என்றால் கணவன். “மாதவன்” என்றால் திருமாமகள் கேள்வன். “பாவமே செய்து பாவியாகியும் உன் திருவடிகளை அடைய இவ்வளவு துணிச்சலுடன் வந்தேன்! ஏனெனில் நீ யார்? எங்களுக்காக உன்னிடம் பரிந்துரை செய்யும் திருமாமகளின் கேள்வன் அன்றோ?” என்று ஆழ்வார் அருளுகின்றார்.

"திருவேங்கடவா! புகல் அடைந்தவர்களுக்கு மட்டுமே புகல் அளிக்கும் உனது வாத்சல்யத்தைக் காட்டிலும் புகல் அடையாதவர்களுக்கும் புகல் அளிக்கும் திருமாமகளின் வாத்சல்யம் மொழியைக் கடக்கும் பெரும் புகழ் வாய்ந்ததன்றோ?

"இவ்வுலகத்திற்கே தாயானவளும், எல்லையற்ற கருணையின் அழகுருவமாகத் திகழ்பவளும் ஆகிய எங்கள் திருமாமகளான அலர்மேல் மங்கை 'அகலகில்லேன் இறையும்' என்று அறுதியிட்டு உன் திருமார்பில் எப்போதும் பிரியாது வீற்றிருக்க, நாங்கள் எங்கள் பாவங்களை எண்ணி மனம் தளரத் தேவையே இல்லை! எங்களுக்காக அவள் உன்னிடம் பரிந்துரை செய்வாள். உன்னை எங்களுக்கு அருள் புரியும்படிச் செய்வாள். ஆதலால், அற்றேன் வந்தடைந்தேன்! அடியேனை ஆட்கொண்டருளே!" என்கிறார் ஆழ்வார்.




ஆழ்வார்களும் ஆசாரியர்களும் திருவேங்கடமுடையானின் அடியார்கள் மற்றும் அடியார்க்கு அடியார்களின் பெருஞ்சிறப்பையும் வெளியிட்டருளியுள்ளனர்!


ஸ்ரீ திருமழிசை ஆழ்வார் - நான்முகன் திருவந்தாதி - பாசுரம் # 41, # 90
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
முதல் பாசுரத்தின் உரையில் ஆசாரியர் அருளியவை:

திருவேங்கடவா! உனக்கு இரண்டு மாபெரும் செல்வங்கள். அவை:

1. முத்துக்களை உதிர்க்கும் குளிர் அருவிகள் நிறைந்த திருவேங்கடமாமலை

2. திருவோணத் திருவிழாவில் உன் திருநாமங்களைப் பாடி, ஆடி, உனக்குப் பல்லாண்டு உரைக்கும் உன் அடியார்களின் முழக்கங்கள்

அவற்றையும் விட்டு, நீ என் உள்ளத்தில் புகுகின்றாய்! இப்படிப்பட்ட உன்னை, உன் மாபெரும் செல்வங்களுடன் நீ வீற்றிருக்கும் திருவேங்கடத்திலேயே நான் வந்து காண விழைகின்றேன்.

இரண்டாம் பாசுரத்தின் உரையில் ஆசாரியர் அருளியவை:

வீற்றிருந்து வைகுந்தத்தை ஆள விரும்புபவர்கள், திருவேங்கடத்தான் திருவடிகளில் பல விதமான மலர்களை அளிப்பவரே ஆவர்.

"அவர்களைக் காட்டிலும் சிறப்பாக வாழ்பவர்கள் எவர்?" எனில், எம்பெருமான் திருவுள்ளத்தை நன்கு அறிந்து அவனுக்கே அடிமைப்பட்டிருக்கும் அடியவர்களின் அடியவர்களே!




ஸ்ரீ குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி - பாசுரம் # 4-9
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம்
 
"திருமகளின் மீது மையல் கொண்டிருக்கும் திருவேங்கடவா! செடி போல அடர்ந்திருக்கும் வல்வினைகளை [உன்னை அடைந்தவர்க்குத்] தீர்ப்பவனே! உனது திருக்கோயிலுடைய கருவறையின் வாசலில் அடியார்கள், மற்ற வானவர்கள், அப்சரப் பெண்டிர் என்று பலரும் உன்னைக் காணக் கூடுவர். [திருவேங்கடவனின் அருளைப் பெற அவர்கள் வந்ததுவே காரணமாக] அக்குழாங்களுடன் இருக்கும் வண்ணம், உனது திருக்கோயிலுடைய கருவறையின் ஒரு படியாகிய ஜடப்பொருளாய் அடியேன் இருக்க அருள் புரிவாய்! அந்த ஞானமற்ற அஃறிணை நிலையிலும் ஒரே ஒரு ஞானம் மட்டும் அடியேனுக்கு இருக்கவேண்டும் - உன் பவள வாயைக் காணும் அருள் வேண்டும், பெரியோனே!"

குறிப்பு: இன்றும், திருமாலின் திருக்கோயில்களில் உள்ள கருவறை வாசற்படிகள் யாவும் "குலசேகரப் படி" என்றே அழைக்கப்படுகின்றனர்.




தீதில் சீர்த் திருவேங்கடத்தானின் அருளையும் விஞ்சும் ஸ்ரீ இராமானுசரின் பேரருள்!


ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 106
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம்
 
"திருமால் வசிக்கும் இடம் வைகுந்தம், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை என்று ஞானிகளான நல்லோர்கள் கூறுவர். திருமால் மீதும் திருமால் உறையும் திருத்தலங்களின் மீதும் எல்லையற்ற அன்பு உடைய ஸ்ரீ இராமானுசரின் தூய பெரும் திருவுள்ளத்தைத் திருமால் மிக விரும்புகின்றான். ஸ்ரீ இராமானுசர் மிக விரும்பும் அந்தத் திருத்தலங்களுடன் சேர்ந்தே ஸ்ரீ இராமானுசரின் ஒப்பற்ற திருவுள்ளத்தில் திருமால் வசிக்கின்றான்!

ஸ்ரீ இராமானுசரோ கருணையில் திருமாலைக் காட்டிலும் அறப்பெரியவர் என்பதால் வறண்டதும், பொலிவற்றதும், குற்றமுள்ளதும் ஆகிய அடியேன் மனத்திலும் இன்புற்று எழுந்தருளுகின்றார்!" என்று ஸ்ரீ இராமானுசரின் திருநாமங்களைச் சொல்வதிலேயே ஊற்றமுடைய திருவரங்கத்தமுதனார் உள்ளம் உருகிப் பூரிக்கின்றார்.




திருவேங்கடவனைப் போற்றும் துதிகள் - சில தகவல்கள்
 
ஸ்ரீ மணவாள மாமுனிகளின் 8 முக்கிய சீடர்களுள் ஒருவரான ஸ்ரீ பிரதிவாதி பயங்கரம் அண்ணா, தமது அற்புதமான படைப்பான "ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாதம், ஸ்தோத்திரம், பிரபத்தி, மங்களம்" என்ற துதிகளின் தொகுப்பில், ஆழ்வார்களும் ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்களும் மொழிந்த இரகிசயங்களையே அனைவரும் பயன்பெறும் வண்ணம் சுலோக வடிவில் அருளியுள்ளார். இந்த அருமையான துதியைத் தினமும் படிப்பவர்கள் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் அருளிய இரகசியங்களைக் கொண்டே 20 நிமிடங்களில் திருவேங்கடவனைத் துதிக்கும் மிகப் பெரிய பேற்றைப் பெறுகிறார்கள்.

திருவேங்கடவனின் திருநாமங்களில் ஈடுபாடு உடையவர்களுக்கு:

  • திருவேங்கடவனுக்கு என்று குறிப்பிட்ட 1000 திருநாமங்கள் உண்டு. "ஸ்ரீ வேங்கடேச சகஸ்ரநாமம்" என்று ஸ்ரீ நாரத முனிவர் ஸ்ரீ வசிட்ட முனிவருக்கு உபதேசித்துள்ளார். மிக அருமையான இத்திருநாமங்களுள் சிலவற்றை ஸ்ரீ இராமானுசரும் "திருவேங்கடத்தில் உறைபவன் திருமாலே" என்பதை எடுத்துரைக்க மேற்கோள் காட்டியருளியதை "ஸ்ரீ வேங்கடேச இதிகாச மாலா" என்ற நூலில் ஸ்ரீ திருமலை அனந்தாண்பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
  • "ஸ்ரீ வேங்கடேச சகஸ்ரநாமம்" துதியைத் தினமும் கேட்க விரும்புபவர்கள் இக்காணொளியைப் பயன்படுத்தலாம். இதனைத் தினமும் படிக்க விரும்புபவர்கள் தமிழில் அல்லது வடமொழியில் அல்லது ஆங்கிலத்தில் படித்துப் பயன்பெறலாம்.
  • "ஸ்ரீ வேங்கடேச சகஸ்ரநாமம்" துதியைத் முடியாதவர்கள், "திருவேங்கடவா! திருமகள் கேள்வா! கோவிந்தா!" என்று தினமும் 1008 முறை சொல்லி வரலாம்.




  • முடிவுரை
     
    கொடிய கல்நெஞ்சும் கரையும் வண்ணம் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் திருவேங்கடவனைப் போற்றியுள்ளனர் என்பதை ஓரளவு சுவைக்கப் பெற்றோம்!

    நாமும் திருவேங்கடவனின் பெருமைகளையும், திருநாமங்களையும் பாடுவோம். மற்றவருக்கும் இச்சுவையைப் பகிர்ந்தளிப்போம்.

    எல்லோரும் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புற ஸ்ரீ பட்டர்பிரான் கோதை இன்னருள் புரிவாள்!

    வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!
    மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!




    நன்றிகள் பல!
     
    பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!

    பொலிக! பொலிக! பொலிக!




    No comments:

    Post a Comment