Search This Blog

Monday, 17 September 2018

07. அருள் பெற்ற நாதமுனி முதலாம் நம் தேசிகர்


முன்னுரை

கடந்த நான்கு கட்டுரைகளில் ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள்:

தமது குருமார்களின் மீது செலுத்திய பக்தி

தமது குருமார்களின் வியாக்கியானங்கள் மீது வைத்திருந்த பெருமதிப்பு

ஆழ்வார்களின் பாசுர வரிகள் வேதவாக்கென அறிந்து அவற்றை நடைமுறையில் கொண்டுவந்த பாங்கு

பாசுரங்கள் அருளிய ஆழ்வார்கள் மீது செலுத்திய பக்தி

ஆகியவற்றை விண்ணப்பித்தேன்.

ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் செலுத்திய அந்த ஈடு இணையற்ற பக்தியின் பலனாக ஆழ்வார்களும் திருமாலும் அவர்களுக்கு நேரடியாகவே அருள் புரிந்துள்ளனர்.

உபதேசரத்தினமாலையில் இராமாநுசரின் மறு அவதாரமான ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆழ்வார்களின் பாசுரங்கள் குறித்த ஸ்ரீ வைணவ ஆசாரியர்களின் ஞானம் பற்றிப் பேசும்பொழுது அருளிய பாசுரம்:



இதில் “அருள் பெற்ற நாதமுனி முதலாம் நம் தேசிகர்” என்று அருளியுள்ளார். ‘தேசிகன்’ என்ற சொல்லுக்கு ‘ஆசாரியன்’ என்று பொருள். “அருள் பெற்ற நாதமுனி முதலாம் நம் தேசிகரைத் தவிர்த்து வேறு ஒருவருக்கும் ஆழ்வார்களின் பாசுரங்களின் மெய்ப்பொருள் தெரியப்போகுமோ” என்கிறார்.

1. அந்த அருள் எத்தகையது?

2. அந்த அருளுக்கும் ஆழ்வார் பாசுரங்களின் மெய்ப்பொருள் அறிவதற்கும் என்ன தொடர்பு?

இவற்றைச் சில நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி விளக்கவேண்டும் என்பதே இக்கட்டுரையின் குறிக்கோள். நிகழ்வுகளை வருணிக்கும் வரிகள் பெரும்பாலானவற்றை https://guruparamparaitamil.wordpress.com என்ற வலைத்தளத்திலிருந்து எடுத்து அங்கில்லாதத் தகவல்களைச் சேர்த்து வரையப்பட்டதொரு கட்டுரை.

குறிப்பு: ஒரே கட்டுரையில் அனைத்து ஆசாரியர்கள் பெற்ற அருளை விளக்க முற்படுவதால், முன்னமே நாதமுனிகள், நம்பிள்ளை, வடக்குத் திருவீதிப்பிள்ளை, ஈயுண்ணி மாதவப்பெருமாள் ஆகியோரைப் பற்றித் தெரிவித்த உண்மைகளை மறுபடியும் பதிவிடுகின்றேன்.




நாதமுனிகள்

இவர் நம்மாழ்வாரின் சீடர்.

ஆழ்வார்களின் காலத்திற்குப் பின், சில ஆயிரம் ஆண்டுகள் சென்றபின், இப்பூவுலகில் அவதரித்தவர் ஸ்ரீ (ரங்க)நாதமுனிகள் என்ற ஆசாரியர். வடநாட்டில் உள்ள திருமாலின் திருப்பதிகளைத் தொழச் சென்ற இவரை, இவரது ஊரில் (காட்டுமன்னார்கோயில்) உள்ள வீரநாராயணப் பெருமாள், (கனவில்) ஊருக்குத் திரும்பி வரும்படி அழைத்தார்.

சில நாள்கள் சென்றபின், “ஆராவமுதே” என்று தொடங்கும் பத்துப் பாடல்களைச் சிலர் நாதமுனிகள் முன் வீரநாராயணப் பெருமாளை நோக்கிப் பாடினர். அப்பாசுரங்களால் மிகவும் ஈர்க்கப்பட்ட நாதமுனிகள், “'ஓராயிரத்துள் இப்பத்து' என்று கடைசிப் பாசுரத்தில் உள்ளதே! உங்களுக்கு 1000 பாசுரங்களும் தெரியுமோ?” என்ன, அவர்களோ “ஐயா, இப்பத்தே நாங்கள் அறிந்தவை” என்று கூறிச் சென்றனர். வியந்த நாதமுனிகள், “குருகூர்ச் சடகோபன் சொன்ன” என்ற வரியை வைத்துத், திருக்குருகூர் (என்ற ஆழ்வார் திருநகரி) சென்று 'சடகோபன் யார்?' என்று விசாரித்தார்.

அவரது தேடலின் முடிவில், சடகோபன் என்ற நம்மாழ்வாரின் சீடராம் மதுரகவிகளின் சீடர் பரம்பரையில் வந்த பராங்குச தாசர் என்பவரின் அறிவுரைப் படி, நம்மாழ்வாரைக் குறித்து மதுரகவிகள் அருளிய கண்ணிநுண் சிறுத்தாம்பு என்ற பதிகத்தைத் திருப்புளியாழ்வாரின் முன் நீர், உணவு, உறக்கம் ஏதுமின்றி, நம்மாழ்வாரைத் தியானம் செய்தபடி 12000 முறை இடைவிடாமல் அனுசந்தானம் செய்தார்.

நம்மாழ்வார் பரமபதத்திலிருந்து இறங்கி அருளினார்; நாதமுனிகளுக்குக் காட்சி அளித்தார். “இவை 1000 மட்டும் அல்ல மற்ற ஆழ்வார்கள் பாடியவைகளும் உள்ளன” என்று அருளி, நம்மாழ்வார் நாதமுனிகளுக்கு 4000 பாசுரங்களையும் அவற்றின் பொருள்களையும் இரகசிய மந்திரங்களையும் உபதேசம் செய்துத் தமது நேரடிச் சீடராக ஏற்றுக்கொண்டார்.






உய்யக்கொண்டார்

இவர் நாதமுனிகளின் சீடர்.

அஷ்டாங்க யோகத்தின் மூலம் ஒருவர் உடல் உபாதைகளைப் பற்றி யோசிக்காமல் எந்தத் தடையும் இல்லாமல் எம்பெருமானை அனுபவிக்க முடியும். நாதமுனிகள் உய்யக்கொண்டாரிடம் “உமக்கும் அஷ்டாங்க யோகத்தைக் கற்றுக்கொள்ள ஆசை உண்டோ?” என்று கேட்க, உய்யக்கொண்டார் “பிணம் கிடக்க மணம் புணரலாமோ?” என்று கூறினார். அதாவது “அறியாமையால் பலரும் இந்த பிறவிக்கடலில் இருந்து வாட, அடியேன் மட்டும் எப்படித் தனியாக எம்பெருமானை அனுபவிக்கமுடியும்” என்று கேட்டார்.

இதைக் கேட்ட நாதமுனிகள் மிகவும் மகிழ்ந்து அவருடைய பெருந்தன்மையை “இந்த வையம் உய்யக்கொண்டீரோ?” என்று பாராட்டி அருளிச்செயல் மற்றும் அதனுடைய சகல மெய்ப்பொருள்களையும் அவருக்குக் கற்றுக்கொடுத்தார். அன்றிலிருந்து அவருக்கு “உய்யக்கொண்டார்” என்ற திருநாமம் ஏற்பட்டது.

குறிப்பு: நம்மாழ்வாரின் அருளையும் காட்டுமான்னார்கோயில் ஸ்ரீவீரநாராயணப்பெருமாளின் அருளையும் பெற்றவர் நாதமுனிகள். அப்படிப்பட்டவரின் மனம் மகிழும்படி உய்யக்கொண்டார் நடந்துகொண்டது அவருக்கும் ஆழ்வார் மற்றும் எம்பெருமானின் அருளைப் பெற்றுத் தரும் - இதுவே நாதமுனிகள் போன்றதொரு குருவின் திருவடிகளில் பணிவதன் பெருமை.




மணக்கால் நம்பிகள்

இவர் உய்யக்கொண்டாரின் சீடர்.

மணக்கால் நம்பி அவருடைய ஆசாரியரான உய்யக்கொண்டாருடன் வாழ்ந்து அவருக்குப் பல வருடம் கைங்கரியம் செய்தார். அந்தச் சமயத்தில் உய்யக்கொண்டருடைய தர்மபத்தினி பரமபதித்துவிட்டார். அதனால் மணக்கால் நம்பி அவருடைய ஆசாரியன் திருமாளிகையையும் மற்றும் அவருடைய குழந்தைகளையும் ஒரு நேர்மையான வேலையாளைப் போலக் கவனித்து வந்தார்.

ஒருமுறை அவருடைய ஆசாரியன் பெற்றெடுத்த பெண்பிள்ளைகள் காவேரியிலிருந்து திரும்பி வரும்பொழுது, வழியில் சேற்று நீர் ஒரு பெரிய குட்டை போல் இருக்க, அதைக் கடக்க அவர்கள் தயங்கினார்கள். அப்பொழுது நம்பி சேற்றில் படுத்து, அவர் மேல் அந்தக் குழந்தைகளை நடக்கச் சொல்லி, அந்தச் சேற்றைக் கடக்க வைத்தார்.

உய்யக்கொண்டார் மிகவும் மகிழ்ந்து நம்பிக்கு என்ன வேண்டும் என்று கேட்க, ஆசாரியருக்குச் சேவை புரிவதே விருப்பம் என்று நம்பி கூறினார். இதைக் கேட்ட உய்யக்கொண்டார் சீடனுடைய நடத்தையையும் விருப்பத்தையும் கண்டு மிகவும் மகிழ்ந்து, உடனே மீண்டும் ஒரு முறை துவய மகாமந்திரோபதேசம் செய்தார் (தமது சீடர்களுடைய சேவையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தால், அவர்களுக்கு துவய மகாமந்திரோபதேசம் செய்வது என்பது நமது பூருவாசாரியர்களுடைய பழக்கமாக இருந்தது).




ஆளவந்தார்

இவர் மணக்கால் நம்பிகளின் சீடர்.

மணக்கால் நம்பி ஆளவந்தாரைத் திருத்த வேண்டும் என்று நினைத்து தினமும் தூதுவளைக் கீரையை ஆளவந்தார் அரண்மணையில் உணவு சமைப்பவரிடம் கொடுத்து வந்தார். ஆளவந்தாருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. நம்பி திடீரென்று ஒரு நாள் கீரை கொடுப்பதை நிறுத்திவிட்டார். ஆளவந்தார் சமைப்பவரிடம் “ஏன் கீரை இல்லை?” என்று கேட்க, “ஒரு வயதான ஸ்ரீவைணவர் தினமும் கொடுத்து வந்தார். இப்பொழுது அவர் கொடுப்பதை நிறுத்திவிட்டார்” என்று கூறினார்.

பிறகு மணக்கால் நம்பியை அழைத்து வந்து ஆளவந்தார் அவருக்கு ஒரு இருக்கையைக் கொடுத்து, “ஏதேனும் செல்வம் வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு மணக்கால் நம்பி, “உம்முடைய பாட்டனார் நாதமுனிகள் கொடுத்த உண்மையான செல்வம் என்னிடம் உள்ளது. அதை உம்மிடமே கொடுக்கத்தான் வந்தோம்” என்று கூறினார். இதைக் கேட்ட ஆளவந்தார், அவரது காவலர்களிடம் நம்பி எப்பொழுது வந்தாலும் உள்ளே அனுப்புமாறு கூறினார்.

மணக்கால் நம்பி பகவத்கீதையினுடைய அனைத்து உட்பொருள்களையும் ஆளவந்தாருக்குக் கற்றுக்கொடுத்தார். அதைக் கேட்டதும் ஆளவந்தார் கொஞ்சம் கொஞ்சமாக மாறினார்.

ஆளவந்தார் எம்பெருமானின் அருள் பெறுவதற்குக் கீதையின் சாரமான பொருளை விளக்குமாறு கேட்க, நம்பி சரம சுலோகார்த்தத்தை அவருக்கு விரிவாக உபதேசித்தார்.

பிறகு ஆளவந்தாரைத் திருவரங்கம் அழைத்துச் சென்று பெரிய பெருமாளைச் சேவிக்க வைத்தார். “திருப்பாணாழ்வாருக்குத் திருக்கண்களைக் காட்டியருளியதுபோல ஆளவந்தாருக்கும் காட்டியருளவேண்டும்” என்று பெரிய பெருமாளிடம் மணக்கால் நம்பிகள் விண்ணப்பம் செய்தார். பெரிய பெருமாளுடைய திருக்கண்களின் பேரழகைக் கண்டு மெய்மறந்த ஆளவந்தார், உலகப்பற்று அனைத்தையும் விட்டார். துறவறம் ஏற்று ஸ்ரீ வைணவத்தைக் காத்து வளர்க்கத் தலைப்பட்டார்.

குறிப்பு: மணக்கால் நம்பிகள் ஒரு விண்ணப்பம் செய்தால் அதை எம்பெருமான் உடனேயே செய்கின்றான்!! முந்தைய பகுதியில் மணக்கால் நம்பிகள் அவரது குருவான உய்யக்கொண்டாரின் சிறப்பான அன்புக்குப் பாத்திரமான வகையைப் பார்த்தோம்.

அதனாலேயே பெரிய பெருமாளும் அவர் ஒரே ஒரு விண்ணப்பம் செய்தாலும் அதை உடனேயே நிறைவேற்றுகின்றான் - கண்ட காட்சியில் ஆளவந்தார் துறவறமே மேற்கொண்டுவிட்டார்!

இதன் பின் திருப்பாணாழ்வார் மீது ஆளவந்தார் தமது வாழ்நாள் முழுவதும் மிகவும் அன்பு வைத்திருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதுதான் ஒரு நல்லாசானைப் பணிவதன் சிறப்பு.




பெரிய நம்பிகள்

இவர் ஆளவந்தாரின் சீடர்.

மாறனேரி நம்பிகளுக்குச் செய்யவேண்டிய இறுதிக் கடமைகளை பெரிய நம்பிகள் எவ்வாறு செய்தார் என்றும் ஊர் அவரைத் தண்டித்தது என்றும் ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் தமது குருமார்களின் மீது செலுத்திய பக்தி என்ற கட்டுரையில் பார்த்தோம்.

அதன் பின் திருவரங்கனுக்கு உற்சவம் (தேரோட்டம்) நடக்கும் பொழுது, "பெரிய நம்பிகளின் திருமாளிகையின் (இல்லத்தின்) திருவாசலில் நிறுத்தக்கூடாது" என்று எல்லோரும் முடிவெடுக்க, இதனை அறிந்த பெரிய நம்பிகளின் மகளார் அத்துழாய் அம்மையார் திருவரங்கனை மனத்தால் வேண்டினார். “அரங்கா! அடியேனின் தந்தையார் செய்தது தவறு என்றால் எங்கள் இல்லத்தைத் தாண்டிச் செல். இல்லையேல் எங்கள் இல்லத்தில் நின்று எங்களுக்கு அருள் புரிந்துவிட்டுச் செல்!” என்றார்.

பெரிய நம்பிகளின் இல்லத்தின் திருவாசலில் திருவரங்கன் தேரின் அச்சு முறிந்து, வழக்கத்தைவிடப் பல மணி நேரங்கள் கூடுதலாகத் தேர் அங்கேயே நின்றுவிட்டது! ஊராரும் வெட்கி ஒன்றாகத் திரண்டு பெரிய நம்பிகளிடம் மன்னிப்புக் கோரினர்.




இராமாநுசர்

ஆதிசேடனின் திருவவதாரம். பெரிய நம்பிகளின் சீடர். ஆளவந்தாரின் மானசீகச் சீடர் (இராமாநுசர் ஆளவந்தாரின் உயிரற்றத் திருமேனியில் மடங்கிய மூன்று விரல்களைத் தம் சபதங்களால் நிமிரச் செய்தவர்).

திருவாய்மொழியில் ‘பொலிக பொலிக பொலிக’ பாசுரத்தில் உள்ள ‘கலியும் கெடும் கண்டுக்கொண்மின்’ என்ற வரி இராமானுசரைக் குறிக்கும் என்ற உண்மையை முதன்முதலில் வெளியிட்டவர்; 'எதிர்கால ஆசாரியர்' (பவிஷ்யதாசாரியரின்) திருமேனியை (விக்கிரகத்தை) நாதமுனிகளுக்குப் பிரசாதித்தவர் - வேறு எவரும் அல்ல - நம்மாழ்வார்.

எம்பெருமானும் திருவரங்கம், திருவேங்கடம், திருக்கச்சி, திருநாராயணபுரம், திருக்குறுங்குடி, திருக்கூர்மம் என்ற அனைத்துத் திருத்தலங்களிலும் இராமாநுசருக்கு மிகவும் சிறப்பாக அருள் புரிந்துள்ளார்.




கூரத்தாழ்வான்

இவர் இராமாநுசரின் சீடர்.

இவர் அருளிச்செயல் அனுபவத்தில் மிகவும் மூழ்கி இருந்தார். எப்பொழுது உபன்யாசத்தைத் தொடங்கினாலும் சொல்லப்போகும் பாசுரத்தின் பொருளை நினைத்து மிகவும் உருகி அழுவார்; இல்லையெனில் மூர்சையுற்றுக் கிடப்பார்.

“திருவாய்மொழியின் முதல் பாசுரத்திலேயே ‘உயர்நலம்’ என்று அருளி எம்பெருமானுக்கு நற்குணங்கள் உள்ளன என்பதையும், ‘சுடரடி’ என்று அருளி எம்பெருமானுக்கு அழகிய திருமேனி உள்ளது என்பதையும் இப்படித் தெள்ளத்தெளிவாக விசிட்டாத்துவைத்தக் கருத்தை ஆழ்வார் அருளினார்!’ என்று தினமும் மூர்சையுற்றுக் கிடப்பார். இதனாலேயே இராமாநுசர் அவருக்கு ‘ஆழ்வான்’ என்ற பட்டத்தை அவருக்கு அளித்தார்!!

குறிப்பு: இதனால் ஆழ்வார்களின் பாசுரங்களுக்கு விசிட்டாத்துவைத்தமே சரியான தத்துவக் கருத்து என்பதும் விளங்குகின்றது.




திருக்குருகைப்பிரான் பிள்ளான்

இவர் இராமாநுசரின் சீடர்.

எம்பெருமானார் ஆகிய இராமாநுசர் திருக்குருகைப்பிள்ளானைத் தன் அன்புக்குப் பாத்திரமான மகனாராகக் கருதினார்.

ஒருமுறை எம்பெருமானாரின் (இராமாநுசரின்) சீடர்கள் பிள்ளானை எம்பெருமானரிடம் சென்று திருவாய்மொழிக்கு உரை எழுதும்படி கேட்கச் சொன்னார்கள். பிள்ளானும் எம்பெருமானரிடம் “தேவரீர் ஸ்ரீபாஷ்யம் எழுதியுள்ளீர். எல்லா இடத்திற்கும் யாத்திரை மேற்கொண்டு விசிட்டாத்துவைத்தத்தை நிலைநிறுத்தியுள்ளீர். நாங்கள் இப்பொழுது தேவரீரை ஆழ்வாரின் பாசுரத்திற்கு உரை எழுதி (மற்றவர்கள் அதைத் தவறாகப் பொருள் கொள்ளாமல் இருப்பதற்கு) அதைப் பாதுகாக்கும்படி வேண்டுகின்றோம்” என்று விண்ணப்பித்தார்.

அதற்கு எம்பெருமானார், பிள்ளானின் ஞானம் மற்றும் குரு பக்தி ஆகியவற்றை மனதில் கொண்டு, “இது மிக அவசியமே. இருப்பினும் அதை அடியேன் எழுதினால் வித்வான்கள் அல்லாதவர் ‘ஆழ்வாரின் அருளிசெயல்கள் அவ்வளவே’ என்று கருதலாம். மற்றவர்கள் இதற்கு மேலும் உரை செய்யத் தயங்கலாம். இது ஆழ்ந்த பொருள்கள் பொதிந்த ஆழ்வாரின் சிறந்த அருளியச்செயலுக்குக் குற்றமாகிவிடும். ஏனென்றால் பிற்காலத்தில் அதிகாரப்பூர்வமான பல குருமார்களால் சிறந்த உரைகள் வழங்கப்படும். ஆகையால் திருவாய்மொழியின் முதல் உரையை 6000 சுலோகம் உடைய விஷ்ணு புராணத்திற்கு இணையாக இருக்கும்படியான உரை அருளிச் செய்வதற்கு உமக்கு அனுமதி அளிக்கிறேன்” என்று கூறினார்.




எம்பார்

இவர் இராமாநுசரின் சீடர்.

திருவாய்மொழியின் 10-8-3 பாசுரத்தின் விளக்கவுரையில் வியப்பிலாழ்த்தும் நிகழ்வு காட்டப்படுகிறது. திருவாய்மொழியில் ஆழ்ந்து மடத்தில் நடந்து கொண்டிருக்கையில் இராமாநுசர் திடீரென்று திரும்பிப் பார்க்கிறார். இதைக் கதவுகளின் பின்நின்று கண்ட எம்பார் ‘திருவாய்மொழியின் பாசுரத்தில் “மடித்தேன்” என்ற வார்த்தையைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க்கின்றீரா?” என்று கேட்க, எம்பெருமானாரும் வியந்து அதை ஆமோதித்தார். இராமானுசரின் செய்கைகளைக் கொண்டே அவரின் திருவுள்ளத்தில் அவர் அசைபோடும் பாசுர வரியை அறியக்கூடியவர் எம்பார்!!

குறிப்பு: இவர் முதலில் இராமாநுசரின் ஐந்து குருக்களில் ஒருவரான பெரிய திருமலை நம்பியின் சீடராக இருந்தவர். எம்பெருமானாரான இராமாநுசர் தாமே இவரை வேண்டித் தமது சீடராகப் பெற்றார் என்றால் இவரது பெருமை புரிகின்றது அல்லவா?




பராசர பட்டர்

இவர் எம்பாரின் சீடர். கூரத்தாழ்வானின் திருமகனார்.

நம்பெருமாளைக் காட்டிலும் ஸ்ரீரங்கநாயகியார் மீது பெரும் பற்றுடையவராய் பட்டர் எழுந்தருளியிருந்தார்.

ஒரு முறை நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலத்தைச் சாற்றிக்கொண்டு பட்டரிடம், “ரங்கநாயகியைப் போல் இருக்கின்றேனா?” என்று கேட்க, பட்டர் “எல்லாம் பொருத்தமாக உள்ளன. ஆயினும் திருக்கண்களில் தாயார் வெளிப்படுத்தும் கருணையை நும்மிடத்தே காண இயலவில்லை” என்றார்!

குறிப்பு: அர்ச்சை அவதாரமாக எழுந்தருளியிருக்கும் நம்பெருமாளிடம் இவ்வளவு உரிமையுடன் பேசும் பெருமை பெற்றவர் என்றால் பட்டர் பெருமை மொழியைக் கடந்தது என்று சொல்லாமலே விளங்குமன்றோ? ஒரு முறை இராமாநுசர் தமது சீடர்களிடம் ‘பட்டரை நாமாகவே நினைத்து இருங்கள்’ என்றார்; இவரையே தமது வாரிசாகவும் பரமபதம் செல்லும் முன் அறிவித்தார்.




நஞ்சீயர்

இவர் பட்டரின் சீடர்.

ஆசாரியன் சீடனுடைய மடியில் படுத்து உறங்குவது ஒரு பழக்கமாக இருந்தது. ஒரு முறை பட்டர் நஞ்சீயருடைய மடியில் படுத்து வெகு நேரம் உறங்கினார். அத்தனை நேரமும் நஞ்சீயர் கொஞ்சம் கூட அசையாமல் இருந்தார். பட்டர் திருக்கண் மலர்ந்தவுடன் நஞ்சீயரின் குரு பக்தியைப் பார்த்து மிகவும் மகிழ்ந்து இன்னொரு முறை துவய மகாமந்திரத்தின் பொருளைக் கூறினார்.

குறிப்பு: பட்டர் திருவரங்கனின் திருமகனாரென விளங்கிய ஆசாரியர்! அவரது மனத்தில் இடம் பெற்ற நஞ்சீயர் உண்மையிலேயே மிகவும் அருள் பெற்றவர்!




நம்பிள்ளை

இவர் நஞ்சீயரின் சீடர்.

நஞ்சீயர் பட்டரின் ஆணைப்படித் தாம் எழுதிய 9000 படி உரையை அழகாக ஏடுபடுத்தவேண்டும் என்று எண்ண, நம்பூர் வரதராஜர் இதைச் செய்வதற்கு ஏற்றவர் என்று எல்லோரும் கூறினார்கள். நஞ்சீயர் வரதராஜருக்கு உரையை முழுமையாக விளக்கி பின்பு மூல பிரதியைக் கொடுத்தார்.

வரதராஜர் (தம் ஊருக்குச் சென்று எழுதினால் அதில் கவனம் செலுத்த முடியும் என்பதால்) காவிரியைக் கடந்து செல்ல முடிவு செய்தார். காவிரியைக் கடந்து செல்லும் பொழுது, திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்து, அவர் கையில் இருந்த மூல பிரதி நழுவி விழுந்து, அதை வெள்ளம் அடித்துச் சென்றது. மிகவும் வருத்தமுற்ற வரதராஜர் ஊருக்கு வந்தவுடன் உணவைத் துறந்து, பெரும் துன்பத்துடன் தம்மை அறியாமல் உறங்கிவிட்டார்.

கனவில் திருவரங்கன் தோன்றினான். “நஞ்சீயரின் விளக்கங்கள் நேரில் கேட்டுள்ளீரே! தயங்காமல் எழுதும். நாம் முன் நிற்கின்றோம்” என்ன, வரதராஜரும் எழுதினர்.

பின்பு நஞ்சீயர் அவர் எழுதியதைப் படித்துப் பார்த்து, “சில இடங்களில் அடியேன் எழுதியத்தைக் காட்டிலும் அழகான பொருள்கள் உள்ளனவே!” என்று வரதராஜரைக் கேட்க, வரதராஜரும் தயங்கியபடி நஞ்சீயரிடம் உண்மையை விண்ணப்பித்தார்.

மனம் பூரித்த நஞ்சீயர் “பட்டர் ‘உமது பிள்ளையைப் போல் ஒருத்தன் வருவான்’ என்று அடியேனிடம் அருளினார். பட்டர் சொன்ன நம்பிள்ளையோ நீர்?” என்ன, வரதராஜருக்கு நம்பிள்ளை என்றே பெயர் ஏற்பட்டது.

குறிப்பு:

இப்படி எம்பெருமான் மற்றும் குருவின் அருளைச் சிறப்பாகப் பெற்றவர் நம்பிள்ளை. இவர் கூறும் பொருள்களைத் திருவரங்கனே சந்நிதியைவிட்டு வெளியே வந்து கேட்க முயல்வாராம்!





வடக்குத் திருவீதிப்பிள்ளையும் ஈயுண்ணி மாதவப்பெருமாளும்

இவர்கள் இருவருமே நம்பிள்ளையின் சீடர்கள்.

நம்பிள்ளையின் சீடரான வடக்குத்திருவீதிப்பிள்ளை நம்பிள்ளையிடம் தாம் திருவாய்மொழியைப் பற்றிக் கற்றதை மறவாமல் இருக்க ஏடுபடுத்த, அதைப் படிக்க நேர்ந்த நம்பிள்ளை “வெகு அழகாக உள்ளது! நாம் சொன்னதில் ஒரு எழுத்தும் கூடாமல் குறையாமல் எழுதினீர். ஆனால் குருவின் உத்தரவு இல்லாமல் ஏன் எழுதினீர்?” என்று கூறி அதை மறைத்து வைத்தார்! நம்பிள்ளையின் மற்றொரு சீடரான ஈயுண்ணி மாதவப்பெருமாள் “அந்த அழகிய உரை எல்லோருக்கும் பரவ வேண்டும்” என்றுத் திருவரங்கனை மனமுருக வேண்டினார்! திருவரங்கனும் நம்பிள்ளையின் கனவில் உத்தரவு பிறப்பிக்க, குருவின் உத்தரவால் மாதவப்பெருமாள் அதைப் பரப்பினார்.

பொருள்கள் உரைத்தவர் நம்பிள்ளை! மறவாமல் இருக்க எழுதியவர் வடக்குத்திருவீதிப்பிள்ளை! உலகம் உய்ய பரப்பியவர் ஈயுண்ணி மாதவப்பெருமாள்!

குறிப்பு: வடக்குத் திருவீதிப்பிள்ளை ஓராண்வழி குரு பரம்பரை ஆசாரியர்.

ஈயுண்ணி மாதவர் ஈடு குரு பரம்பரை ஆசாரியர். ஈயுண்ணி பதுமநாபர், நாலூர்ப்பிள்ளை, நாலூர் ஆச்சான் பிள்ளை ஆகியோர் அடுத்து வரும் ஆசாரியர்கள்.

நாலூர் ஆச்சான் பிள்ளை மூலமாகத் திருவாய்மொழிப்பிள்ளை ஈடு பெறுகின்றார்.




பெரியவாச்சான் பிள்ளை

இவர் நம்பிள்ளையின் சீடர்.

பல சீடர்களுள் முதன்மையானவராகத் திகழ்ந்து நம்பிள்ளையிடமிருந்தே எல்லா சாத்திரப் பொருள்களையும் கற்றுக்கொண்டார். நம்பிள்ளையின் அருளால் ஸ்ரீ வைணவத்தில் புகழ் வாய்ந்த குருவாகத் திகழ்கின்றார். நான்காயிரம் பாசுரங்களுக்கு விளக்கவுரை எழுதிய ஒரே ஆசாரியர்.

திருக்கண்ணமங்கை எம்பெருமான் திருமங்கையாழ்வார் பாசுரங்களின் சிறப்பான பொருள்களைக் கலியன் வாயிலாகக் கேட்க விரும்பினார். எனவே அருளிச்செயலின் பொருள்களைக் கற்பதற்காகக் கலியன் நம்பிள்ளையாகவும் எம்பெருமான் பெரியவாச்சான் பிள்ளையாகவும் அவதாரம் செய்ததாகப் பெரியோர்கள் கூறுவர்.




பிள்ளைலோகாசாரியர்

இவர் வடக்குத்திருவீதிப்பிள்ளையின் சீடர்.

மணப்பாக்கத்து நம்பி என்பவருக்குத் தேவப்பெருமாள் மிக உயர்ந்த ஸ்ரீ வைணவக் கருத்துக்களைக் கற்பித்து வந்தார். ஓர் நாள் பாதியிலேயே உபதேசங்களை நிறுத்தி, மணப்பாக்கத்து நம்பியைத் திருவரங்கத்திற்குச் செல்லுமாறும், தாம் அவருக்குத் திருவரங்கத்திலே உபதேசங்களைத் தொடருவதாகவும் தேவப் பெருமாள் கூறினார்.

மணப்பாக்கத்து நம்பி திருவரங்கம் நோக்கிப் பயணித்துக் காட்டழகிய சிங்கர் சன்னிதிக்கு வந்து சேர, அங்கே பிள்ளைலோகாசாரியரைச் சீடர்களுடன் கண்டார். ஒரு தூணின் பின்னே நின்று பிள்ளை லோகாசாரியரின் உபதேசங்களைக் கேட்ட மணப்பாக்கத்து நம்பி, அவை தேவாதிராஜன் தமக்கு அளித்தவையாகவும் அவற்றின் தொடர்ச்சியாகவும் இருப்பதைக் கண்டு வியப்புற்று, மறைந்திருந்த இடத்திலிருந்தும் வெளியே வந்து, பிள்ளைலோகாசாரியரின் திருவடிகளில் பணிந்து “அவரோ நீர்” என்று கேட்க, பிள்ளைலோகாசாரியர் “ஆம். வேண்டியது என்ன?” என்றார்.

இதிலிருந்து நாம் உணர வேண்டியது யாதெனில் தேவாதிராஜனே பிள்ளைலோகாசாரியர் என்பதாம்.




அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்

இவர் வடக்குத்திருவீதிப்பிள்ளை மற்றும் பிள்ளைலோகாசாரியாரின் சீடர்.

நாயனாரின் படைப்புகளிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்தது “ஆசாரிய ஹ்ருதயம்” என்னும் நூல் - இந்நூலில் நம்மாழ்வார் திருவாய்மொழி அருளியபோது அவருக்கிருந்த மனநிலையையும் திருவாய்மொழி மூலமாக ஆழ்வார் எடுத்துரைத்துள்ளதையும் ஆழ்வாரின் மனநிலையைக்கொண்டே தெளிவுபடுத்தியுள்ளார்.

இந்நூலைத் திருவரங்கன் முன் அரங்கேற்றம் செய்த பொழுது, நம்பெருமாளும் தம்முடைய மாலைகளை இவருக்கு அளித்து, அந்நூலை அங்கீகரித்தார்.

குறிப்பு: பெரியோர்கள் நூல்கள் எழுதியவுடன் எம்பெருமானின் முன் அதனை அரங்கேற்றம் செய்து திருமாலின் அங்கீகாரம் பெற்றனர்.

எம்பெருமானின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்குப் பராசர பட்டர் எழுதிய விளக்கவுரையைத் திருவரங்கன் முன் இராமாநுசர் அரங்கேற்றம் செய்தார் என்ற செய்தி அவரது நேர் சீடரான வடுக நம்பிகள் எழுதிய 'யதிராச வைபவம்' என்ற நூலில் உள்ளது.

இதே போலக் கம்பரும் தமது இராமாயணத்தைத் திருவரங்கன் முன் அரங்கேற்றினார்.




திருவாய்மொழிப்பிள்ளை

இவர் பிள்ளைலோகாசாரியாரின் சீடர்.

முகலாயர்களின் படையெடுப்பில் ஏற்பட்ட ஆபத்துக் காலத்தில், நம்மாழ்வார் அழ்வார் திருநகரியிலிருந்து சென்ற உடன், அந்த ஊரே காடாக மாறியதைத் திருமலையாழ்வார் என்ற ஸ்ரீ வைணவர் கண்டார். அவர் அந்த ஊரைத் திருத்த, ஆழ்வார்திருநகரி மீண்டும் பழையபடியே அழகாக மாறியது.

பிறகு அவர் நம்மாழ்வாரைத் திருக்கணாம்பியிலிருந்து மறுபடியும் ஆழ்வார்திருநகரியில் எழுந்தருளப்பண்ணிக் கோயிலைச் சீர் செய்தார். எம்பெருமானாருக்காக (நம்மாழ்வாரால் பல வருடங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட பவிஷ்யதாசாரியன் திருமேனி) ஒரு கோயிலை அமைத்தார். அந்த சன்னிதியைச் சுற்றி சதுர்வேதி மங்கலம் (கோயிலைச் சுற்றி நான்கு வீதிகளை அமைத்தார்) அமைத்து மற்றும் குடும்பங்களை நியமித்தார்.

இதனால் மிகவும் மனமுவந்த நம்மாழ்வார் அவருக்குச் “சடகோப தாசர்” என்ற திருநாமம் பிரசாதித்தார். எப்பொழுதுமே நம்மாழ்வாருடைய பெருமையையே கூறிகொண்டு அவர் மீது ஈடுபாட்டுடன் இருப்பதாலும் எப்பொழுதுமே திருவாய்மொழியைக் கற்றுக் கொடுப்பதாலும் அவருக்குத் 'திருவாய்மொழிப்பிள்ளை' என்ற திருநாமமே மிகவும் பிரசித்தமாக இன்றளவும் உள்ளது!




மணவாள மாமுனிகள்

இவர் திருவாய்மொழிப்பிள்ளையின் சீடர். இராமாநுசரின் மறு அவதாரம்.

ஒரு நாள் திருவரங்கத்தில் பெரிய பெருமாளிடம் திருவாலவட்டம் வீசித் தொண்டாற்றிவந்த உத்தம நம்பி என்பார் ஒருவர், மணவாள மாமுனிகள் திருவரங்கனுக்குப் பல்லாண்டு பாட வந்த வேளையிலே, கடுமையான தோரணையில் அவரை விரைவாகக் கிளம்பச் சொல்ல, மணவாள மாமுனிகளும் உத்தம நம்பியைப் பணிவுடன் வணங்கி அவ்வாறே செய்தார்.

இதனைத் தொடர்ந்து உத்தமநம்பி சற்றே கண் அயர்ந்த வேளையிலே பெரிய பெருமாள் அவரது கனவில் தோன்றித் "திருவனந்தாழ்வானும் மணவாள மாமுனிகளும் வேறல்ல" என்பதை உணர்த்தத் தான் செய்த அபசாரத்தைப் பொறுத்தருளும்படி உத்தம நம்பி மணவாள மாமுனிகளாம் பெரிய ஜீயரை வேண்டினார்.

மணவாள மாமுனிகள் முக்கியமான சீடர்களுள் தலையானவர் பொன்னடிக்கால் ஜீயர். இவரை “வானமாமலை திவ்வியதேசத்திற்கே அனுப்பி வையுங்கள்” என்று வானமாமலையிலிருந்துத் தெய்வ ஆணையின்படி ஒரு கடிதம் மணவாள மாமுனிகளுக்கு அனுப்பப்பட்டது.

திருவரங்கத்தில் அன்று திருமங்கை ஆழ்வார் அருளிய பெரிய திருமொழியின் இறுதிப் பதிகத்தை ஓதும் நாளாக அமைந்திருந்தது. மணவாள மாமுனிகளும் பொன்னடிக்கால் ஜீயர் முதலான சீடர்களுடன் அப்பாசுரங்களை ஓத, அப்பொழுது “அணியார் பொழில் சூழ் அரங்கநகரப்பா” என்ற வரியைப் பாட, அங்கே சன்னதியில் ஒரு சிறிய விக்கிரக வடிவில் எழுந்தருளியிருந்த ‘அரங்கநகரப்பன்’ என்ற பெருமாள் (அர்ச்சகர் மேல் ஆவேசித்து) ‘மணவாள மாமுனிகளுக்காக நாமும் பொன்னடிக்கால் ஜீயருடன் வானமாமலை செல்கிறோம்’ என்றார்! இன்றும் இவரை வானமாமலையில் வணங்கி மகிழலாம்.

அப்பொழுது பொன்னடிக்கால் ஜீயர் கூறிய வார்த்தை யாதெனின் ‘பெரியோருக்கு ஆட்பட்டால் இது போன்ற பெரும்பேறுகள் அமையும்’ என்பதே. அதாவது ‘உயர்ந்த ஆசாரியர்களை அடிபணிந்தால் இறைவனின் சிறப்பான பேரருளை எளிதில் பெறலாம்’ என்று பொருள். அனைவரும் எப்பொழுதும் மனதில் எழுதிவைத்து நினைவில் கொள்ளவேண்டிய பொன்னடிக்கால் ஜீயரின் பொன்னான சொற்கள்!




முடிவுரை

ஆழ்வார் பாசுரங்களுக்குப் பொருள் கூறுவோர் மிகவும் உயர்ந்த நிலையில் இருக்கவேண்டும். அருள் பெற்றவராய் இருத்தல் வேண்டும்.

உயர உயரப் பறந்து ஊர்க்குருவியும் பருந்தாகக் கூடுமோ என்னமோ - ஆனால் ஆயிரம் புத்தகங்களைப் படித்தாலும் கோடி பேச்சுரைகளைக் கேட்டாலும் நம்மால் ஸ்ரீ வைணவ ஆசாரியர்களின் நிலையை மனத்தாலும் எண்ணமுடியாது.

ஸ்ரீ வைணவ ஆசாரியர்கள் வியாக்கியானங்கள் வெறும் தனி நபர்களின் கண்ணோட்டங்கள் அல்ல. அவை அனைத்த்தும் தெய்வ அருளால் வெளிவந்தவை. அவை அனைத்தும் மெய்ப்பொருள்கள். அவற்றைச் சரியாகக் கற்காமல் அவற்றை எதிர்த்து நம் மனம் போன போக்கில் “கருத்து” கூறுவதோ பாசுரங்களுக்குப் பொருள் எழுதுவதோ குற்றமற்ற ஆசாரியர்களுக்கும் (அதனால் இறைவனுக்கும்) செய்யும் அவமரியாதை ஆகும்.

இதனாலேயே பூருவாசாரியர்களின் வழியில் பொருள் செல்லாதோரின் சொற்களைக் கேட்டுக் குழம்பாமல் அவற்றைப் புறக்கணிக்கவேண்டும் என்று மணவாள மாமுனிகளும் அருளினார்:



தற்காலத்தில் இந்தத் தவறைச் சிலர் தெரிந்தே செய்கின்றனர். அவர்கள் இறைவனிடம் பதில் சொல்லவேண்டியவர்கள்.

இந்தத் தவறைச் சிலர் தெரியாமல் செய்கின்றனர்; சிலர் உண்மைகளை எடுத்துச் சொன்னாலும் புறக்கணிக்கின்றனர். இது மிக மிக வருந்தத்தக்கது. அப்படிப்பட்டவருக்கு (அவர் யாராக இருப்பினும்) மணவாள மாமுனிகள் அருளிய உண்மைகளை எடுத்துச் சொல்லவேண்டும்; அவர்கள் அதனைப் புறக்கணித்தால் அவருடைய தவறான செயலுக்கு எவ்வகையிலும் துணை போகாமல் இருக்கவேண்டும்.

மணவாள மாமுனிகள் அருளிய வண்ணம் நம் அனைவருக்கும் ஆசாரியர்கள் சொற்களைப் பொருள் மாற்றாமல் கூறுவோரின் நல்ல சேர்க்கையே எந்தை எதிராசர் இன்னருளால் கிட்டட்டும்.




No comments:

Post a Comment