Search This Blog

Wednesday, 21 December 2022

ஸ்ரீ சீதாராம பக்த அனுமன்


ஸ்ரீ சீதாராம பக்த அனுமன்


Image Source: https://in.pinterest.com/pin/9148005503639887/


முன்னுரை
 
திருமால் திருவடிகளில் சரணாகதியையே நெறியாகக் கொண்ட ஸ்ரீ இராமானுசர் தரிசனத்தில், 'சரணாகதி சாத்திரம்' என்று கொண்டாடப்படும் ஸ்ரீமத் இராமாயணத்திற்கு மிக முக்கியமான இடம் அளிக்கப்பட்டுள்ளது. ஆசாரியர் ஸ்ரீ இராமானுசர், தமது ஆசாரியர் ஸ்ரீ பெரிய திருமலை நம்பிகளிடம், திருவேங்கடத்திற்குச் சென்று, 1 ஆண்டு அங்கு தங்கியிருந்து, ஸ்ரீமத் இராமாயணத்தின் இரகசிய ஆழ்பொருள்களைக் கற்றார்.

ஸ்ரீ இராமானுசரின் புகழ் பாடும் 'ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி' என்ற தலைசிறந்த நூல், "படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம் குடி கொண்ட கோயில் இராமானுசன்" என ஸ்ரீ இராமானுசரைப் போற்றுகின்றது.

ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 37
முன்னர் ஒரு முறை, "ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும் ஸ்ரீ அனுமன்" என்ற கட்டுரையில், ஆழ்வார்களின் பாசுரங்கள், ஆசாரியர்களின் உரைகள் ஆகியவற்றுள் ஸ்ரீ அனுமனின் பெருமை எவ்வாறு போற்றப்பட்டுள்ளது என்பதைச் சில எடுத்துக்காட்டுக்களுடன் விண்ணப்பித்திருந்தேன்.

ஸ்ரீ இராமானுசருடைய திருவடிகளின் இன்னருளால் வாழ்ந்த ஆசாரியர்களான ஸ்ரீ கூரத்தாழ்வான், ஸ்ரீ முதலியாண்டான், ஸ்ரீ பராசர பட்டர், ஸ்ரீ நஞ்சீயர், ஸ்ரீ நம்பிள்ளை, ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை, ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் முதலான ஆசாரியர்கள் யாவரும், தாங்கள் அருளிய உரைகளிலும், சுலோகங்களிலும், இரகசிய கிரந்தங்களிலும், பற்பல இடங்களில் ஸ்ரீமத் இராமாயணத்தின் சிறப்பான ஆழ்பொருள்களை வெளியிட்டருளியுள்ளார்கள். அவற்றுள் ஒரு சில அரும்பொருள்களின் தொகுப்பாகவே இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.

ஸ்ரீ வால்மீகி இராமாயணத்தின் படி, ஸ்ரீ அனுமனின் வாழ்க்கை நிகழ்வுகளை நான்காகப் பிரிக்கலாம்:

  1. ஸ்ரீ இராமபிரானைத் தரிசிக்கும் முன்
  2. ஸ்ரீ இராமபிரானைத் தரிசித்த பின்
  3. அன்னை சீதையின் அருளாசி பெற்ற பின்
  4. ஸ்ரீ இராமபிரானால் பேரன்புடன் அணைக்கப் பெற்ற பின்

இந்த ஒவ்வொரு கட்டத்திலும், ஸ்ரீ சீதாராமனின் திருவருளால், ஸ்ரீ அனுமனின் நிலை ஆன்மீகப் பாதையில் எவ்வாறு போற்றத்தக்க வகையில் முன்னேறியது என்பதைக் காணலாம். ஸ்ரீ அனுமனின் ஸ்ரீ சீதாராம பக்தி எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதையும் காணலாம்.




பாகம் # 1: ஸ்ரீ அனுமன் ஸ்ரீ இராமபிரானைத் தரிசிக்கும் முன்


Image Source: https://in.pinterest.com/pin/326159198017234129/


பலமும், வரமும் பெற்றுத் திகழ்பவர்

ஸ்ரீ அனுமன் வாயுதேவனின் முழு அருளைப் பெற்றுப் பிறந்ததால், தேகபலத்தில் ஒரு குறையும் இல்லை. ஸ்ரீ அனுமன், சிறு குழந்தையாக இருந்தபோது, சூரியனைப் பழம் என எண்ணி, வானில் தாவி ஆதவனை விழுங்க இருந்த நேரம், இந்திரன் வஜ்ராயுதத்தால் ஸ்ரீ அனுமனுடைய தாடையில் அடிக்க, வாயுதேவனின் கோபத்தை ஆற்றுவதற்குத் தேவர்கள் பல அறிய வரங்களை ஸ்ரீ அனுமனுக்கு அருளினர். அதனால், தேக பலத்துடன் வரபலமும் சேர்ந்தது!

இது மற்ற வானரர்கள் வாழ்வில் நடக்காத ஒரு நிகழ்ச்சி. வாயு புத்திரன் பீமனின் வாழ்விலும் நடக்காத ஒரு நிகழ்ச்சி.

குருவிற்கு அருமையான சீடர்

பின்னர், அதே சூரியன் மற்றும் இந்திரனிடமே ஸ்ரீ அனுமன் கல்வி கற்றார்! ஸ்ரீ மங்களகிரி மாகாத்மியம் என்ற நூல், சூரியன் ஆகாயத்தில், தம் கடமையைச் செய்வதற்காக, நில்லாமல் பயணிக்க, ஸ்ரீ அனுமன் கைகளைக் கூப்பி அவருடன் சென்றுகொண்டே, 24 மணி நேரங்களில் அனைத்தையும் கற்றார் என்று பகர்கின்றது! இந்திரனிடம் இலக்கணம் கற்று, அதில் ஸ்ரீ அனுமன் பண்டிதரும் ஆனார்.

இதனால், குரு பக்தி, சுறுசுறுப்பு, புத்திக்கூர்மை, கல்வியில் கவனம், நினைவாற்றல், கசடறக் கற்றல் ஆகிய பண்புகள் ஸ்ரீ அனுமனிடம் குடியிருந்தன என்பது விளங்கும்.

அறம் பக்கமே நிற்பவர், இடுக்கண் களையும் நண்பர்

ஸ்ரீ சுக்கிரீவரை வாலி துரத்தியபோது, மொத்த வானர சேனையும் பலம் மிக்க வாலி பக்கமே நின்றன. நால்வர் மட்டுமே, ஸ்ரீ சுக்கிரீவர் பக்கம் இருக்கும் அறத்தை எண்ணி, அரண்மனைச் சுகங்களைத் துறந்து, காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து, ஸ்ரீ சுக்கிரீவருடன் சென்றனர். அவர்களுள் ஸ்ரீ அனுமனும் ஒருவர்.

சிறந்த ஆலோசகர்

ஸ்ரீ அனுமனின் புத்திக்கூர்மை, பலம், வேகம், துணிச்சல் ஆகியவற்றை ஸ்ரீ சுக்கிரீவரும், ஸ்ரீ ஜாம்பவானும் மனமாரப் புகழ்கின்றனர்.

வாலியிடமிருந்து தப்பிக்க ரிசியமுக மலைகளில் தங்குவதற்கு ஸ்ரீ சுக்கிரீவருக்கு யோசனை அளித்தவர் ஸ்ரீ அனுமனே. ஸ்ரீ இராமபிரானிடம் ஸ்ரீ சுக்கிரீவர் கொடுத்த வாக்கை ஸ்ரீ சுக்கிரீவருக்கு நினைவூட்டியவரும், கோபத்துடன் தகிக்கும் ஸ்ரீ இலக்குவனைச் சாந்தப்படுத்தக் கைகளைக் கூப்பும்படி ஸ்ரீ சுக்கிரீவருக்கு யோசனை அளித்தவரும் ஸ்ரீ அனுமனே!





சின்னஞ்சிறு வயதில், விளையாடும் பருவத்தில், ஸ்ரீ அனுமன் முனிவர்களிடம் குறும்புகள் செய்ய, "உனது பலம் ஒருவர் நினைவூட்டினால் மட்டுமே உனக்கு நினைவு வரும்!" என முனிவர்கள் மென்மையாகச் சபித்தனர். அதனால், ஸ்ரீ அனுமனுடைய நற்பண்புகள் முதலில் வெளிச்சத்திற்கு வரவில்லை. ஆனால், இறையருள் தேடி வந்தது!

அன்னை சீதையை அரக்கன் இராவணன் கவர்ந்து செல்லும்போது, அவள் தனது மேலாடையில் ஒரு சிறு பகுதியைக் கிழித்துத் தன்னுடைய அணிகலன்களை வீச, அதை ஸ்ரீ சுக்கிரீவர் ஆகியோர் பத்திரப்படுத்தி வைத்தனர். அப்போது, திருமகளாம் அன்னை சீதையின் அருட்பார்வை அவர்கள் மீது படர்ந்தது! இதுவே ஸ்ரீ சுக்கிரீவருக்குப் பிறகு ஸ்ரீ இராமபிரானின் அருளைப் பெற்றுத் தந்தது. ஸ்ரீ அனுமனுக்கு மிகப் பெரிய ஒரு மாற்றம் வருவதற்கு அடிக்கல் நட்டது!



பாகம் # 2: ஸ்ரீ அனுமன் ஸ்ரீ இராமபிரானைத் தரிசித்த பின்

Image Source: https://in.pinterest.com/pin/599752875369616734/


மங்களாசாசனம்

ஸ்ரீ இராமபிரானை முதலில் சந்தித்த ஸ்ரீ அனுமன், "அணிகலன்களால் அலங்கரிக்கப் படவேண்டிய இத்தோள்கள் ஏன் இப்படி ஏதுமின்றி இருக்கின்றன?" என்று வினவுகின்றார். இதற்கு ஸ்ரீவைணவ ஆசாரியர்கள் கூறிய பொருள்: அவரது திண்தோள் வடிவழகிலும் வலிமையிலும் மயங்கி ‘இதற்கு கண்ணெச்சில் படுமே! இவற்றை அணிகலன்களால் மறைக்கவேண்டுமே!’ என்பது ஸ்ரீ அனுமனின் எண்ணம் என்பதாம்!

இராவணனும் கும்பகரணனும் இதே திருத்தோள்களைக் கண்டனர். திருமகளின் அருட்பார்வையைப் பெறாத அவர்களுக்கு இந்த எண்ணம் வரவில்லை.

சொல்லின் செல்வர்!

முதல் சந்திப்பிலேயே, ஸ்ரீ அனுமனின் வேதம், நாதம், இலக்கணம் ஆகியவற்றைப் பற்றிய அறிவு, பேச்சின் இனிமை, மிதமான வேகம், குரலின் ஏற்ற இறக்கங்கள், உடல் அங்கங்களில் காணும் தெளிவு ஆகியவற்றைப் புகழ்ந்து, "இவனைப் போல ஒரு மந்திரி இருப்பவன் வெற்றியை அடைவான்!" என்று ஸ்ரீ இராமபிரானே மகுடம் சூட்டுகின்றார்!

நாயகர்களின் நம்பிக்கை நட்சத்திரம்!

அன்னை சீதையைத் தேட வானரர்கள் புறப்பட்டபோது, ஸ்ரீ அங்கதன், ஸ்ரீ ஜாம்பவான் ஆகியோரையும் விடுத்து, ஸ்ரீ அனுமனுக்கே ஸ்ரீ இராமபிரான் தமது கணையாழியை அளிக்கின்றார்! ஸ்ரீ சுக்கிரீவரும் ஸ்ரீ அனுமனே இச்செயலைச் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையுடன் பேசுகின்றார்.

பெரியோர்களிடம் பணிவும், சக வானரர்களுக்கு உற்சாகமூட்டும் பண்பும்

கடலைத்தாண்ட வானத்தில் தாவும் முன், முதல் செயலாக, வயது சென்ற வானரர்களையும், தமது தந்தையான வாயுதேவனையும் ஸ்ரீ அனுமன் பணிவுடன் வணங்குகின்றார்.

பிறகு, வானரர்களைப் பார்த்து, "நான் இக்காரியத்தை வெற்றியுடன் முடித்தே திரும்புவேன்!" என்று சிம்மநாதம் செய்கின்றார். தற்கொலை எண்ணத்துடன் மனம் சோர்ந்து இருந்த வானரர்களுக்கு, இப்பேச்சு உயிரும், உற்சாகமும் மூட்டுவதாய் அமைந்தது. இதனால், ஸ்ரீ ஜாம்பவானும் இப்பேருதவியைப் பாராட்டுகின்றார்.

தன்னடக்கம்

பிறகு, இதே ஸ்ரீ அனுமன், "தாயே! இது போன்ற செயல்களைச் செய்ய அடியேன் போன்ற சிறியோர்களையே அனுப்புவர். வானர சேனையில் அனைவரும் குறைந்த பட்சம் எனக்குச் சமமானவர் அல்லது என்னைக் காட்டிலும் சிறந்தவர். தாங்கள் கவலையை விடுங்கள்," என்று அன்னை சீதையிடம் பணிவு தோற்றப் பேசுவதையும் காண்கின்றோம். இலங்கையை எரித்துத் திரும்பியபோதும், சக வானரர்களிடம் அவர்களது சிறப்பை மதிப்புடன் பேசி, அவர்களை உற்சாகப்படுத்துவதையும் காண்கின்றோம்.

இதிலிருந்தே, மிக்க திறமைசாலியாக இருந்தபோதும், ஸ்ரீ அனுமன் தற்புகழ்ச்சி பேசுபவர் அல்ல என்பது விளங்கும்.

எவரிடம், எப்போது, எங்கே, எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதில் தெளிவு!

மாகடலைத் தாண்டும்போது எழுந்த மூன்று தடைகளை ஸ்ரீ அனுமன் தகர்த்த விதமே அலாதியானது! மைனாக மலையிடம் மனங்கவரும் அன்புப் பேச்சு, சுரசையிடம் வியத்தகு புத்திக்கூர்மை, சிம்மிகையிடம் பெரும் ஆற்றல் - ஸ்ரீ சுந்தர காண்டம் படிப்போரின் உள்ளங்களைக் கொள்ளைகொள்கின்றார்! அன்னை சீதையைத் தேட எது சரியான நேரம், எது சரியான உருவம் என்பதை அலசி ஆராயும் முறை நமக்கு ஒரு நல்ல படிப்பினை. இலங்கைக்குக் காவல் தெய்வத்தை அலட்சியமாக வெல்வது நமக்கு ஒரு உற்சாகமூட்டும் கட்டம்.

புலனடக்கம் அணி செய்யும் பேராண்மை

இராவணனின் மனைவிகளான அழகிய பெண்கள் தம்மை மறந்து உறங்கும் போது கண்டார். ஆனால், அவரது பிரம்மசரிய விரதம் நெருப்பென மின்ன, அவரது மனம் சற்றேனும் சலனம் அடையவில்லை. அன்னை சீதையைத் தேடுவதொன்றே அவரது உயர்ந்த நோக்கம்.

தியாக மனப்பான்மையும், சுய உற்சாகத்தைப் பெருக்கும் திறனும்

பெருமுயற்சி செய்தும் அன்னை சீதையைக் காணவில்லை என்றதும், "திரும்பச் சென்று, செய்தியைச் சொல்லி, மற்றவரின் உயிர்களைப் பறிப்பதற்குப் பதிலாக, நாமே இறக்கலாம்!" என்று தியாக மனப்பான்மையுடன் எண்ணுகின்றார். பிறகு, தம்மைத் தாமே அற்புதமாக ஊக்கப்படுத்திக்கொள்கின்றார். நமக்கு ஒரு நல்ல படிப்பினை!

தெய்வ நம்பிக்கை

அப்போது, அவருக்கு ஒரு தெய்வீக எண்ணம் உதிக்கின்றது. ‘நான் தேடுகின்றேன்’ என்ற எண்ணத்தை விட்டு, ஸ்ரீ இராமபிரானையும், ஸ்ரீ இலக்குவனையும் வணங்குகின்றார். அன்னை சீதையையும், "தேவீ! உமது திருத்தகப்பனார் ஜனகருக்கு, அவர் செய்த வேள்வியின் போது, உம்மை வெளிப்படுத்தியது போல, நீர் இருக்கும் இடத்தை அடியேனுக்கும் வெளிப்படுத்துவீர்!" என்ற பொருளில் ‘தேவி ஜனகாத்மஜா’ என்ற திருநாமத்தால் வணங்குகின்றார். அடுத்த கணமே அசோக வனத்தைக் கண்டார்!





அசோக வனத்துள் நுழைந்த ஸ்ரீ அனுமன், கூர்ந்து கவனிக்கின்றார். சிம்சுபா மரத்தின் அடியில் ஒரு பெண்மணி அமர்ந்திருப்பதைப் பார்த்து, ஸ்ரீ இராமபிரான் தம்மிடம் தெரிவித்தது போலவே உள்ள அவளது தோற்றம், இவர் அவளைக் கண்டபோது அவளது ஆடையின் வண்ணம், அன்று அவள் மேலிருந்து விட்டெறிந்த அணிகலன்கள் இங்கே இல்லாதிருப்பது ஆகிய காரணங்களால், அவளே சீதை என முடிவு செய்கின்றார்!



பாகம் # 3: ஸ்ரீ அனுமன் அன்னை சீதையின் அருளாசி பெற்ற பின்

Image Source: https://in.pinterest.com/pin/599752875369616734/


அன்னை சீதையின் ஆசிகள் பெரும் முன் அன்னை சீதையின் ஆசிகள் பெற்ற பின்
“ஸ்ரீ இராமபிரான் மாபெரும் வீரராக இருந்தும், ஒரு பெண்பிள்ளையை இழந்து இவ்வளவு வாடுகின்றாரே!” என எண்ணியிருந்தார். அன்னை சீதையைக் கண்டவுடன், “இப்படி ஒரு சிறப்பு வாய்ந்த பெண்மணியைப் பிரிந்து ஸ்ரீ இராமபிரான் இன்னும் உயிர் வாழ்கின்றார் என்றால், அது மாபெரும் சாதனை! இவளுக்காக மூன்று உலகங்களையும் தலைகீழாக மாற்றினாலும் தகும்!” என்கின்றார். இந்த மனமாற்றமே ஸ்ரீ அனுமனின் மேன்மைக்கு முதல் படியாம்.

இதன் பிறகு, அன்னை சீதையைப் பற்றி பேசத் தொடங்கும் போதெல்லாம், அவள் இருக்கும் திக்கு நோக்கி வணங்கிய பின்னரே பேசுகின்றார் என்பதை ஸ்ரீமத் இராமாயணத்தைப் படிக்கும்போது காணலாம்.

அனுதினமும் இராவணனும் அரக்கியரும் அன்னையைப் பார்த்துக்கொண்டிருந்தனர் - ஒருவருக்காவது இந்த நற்பண்பு ஏற்பட்டதா?
அன்னை சீதையிடம் தம்மை ‘இராமதூதன்’ என அறிமுகம் செய்துகொண்டார். ஸ்ரீ அனுமன் அசோக வனத்தை அழிக்கும்போது அவரை எதிர்க்க வந்த அரக்கரிடம் தம்மை ‘இராமதாசன்’ என்று அறிமுகம் செய்துகொண்டார். ஸ்ரீ அனுமன் ஸ்ரீ இராமபிரானின் அடியார்களில் ஒருவர் என்பதைப் பறைசாற்றும் தருணம் இது!
ஸ்ரீ ஜாம்பவானின் தூண்டுதலாலேயே தமது ஆற்றல் நினைவுக்கு வர, மாகடலைத் தாண்டினார். இராவணன் சேனையில் மாபெரும் பலம் படைத்த அரக்கரிடம், எவரது தூண்டுதலுமின்றி, அசோக வனத்தில் தாமே பொருதார். திருமகளாம் அன்னை சீதையின் அருட்பார்வையால், அவரது சிறு வயது சாபமும் நீங்கியது!
இராவணன் அசோக வனத்தில் அன்னை சீதையுடன் பேச வந்தபோது, அவனது ஒளியைத் தாங்க முடியாமல், இலைகள் பின் ஒளிந்துகொண்டார். எதிரிகளால் சூழப்பட்டபோதும், எவ்விதத் தயக்கமுமின்றி, இராவணன் முன்னே துணிவுடன் நின்று, அவன் கேட்க விரும்பாத உண்மைகளை, அமைதியாகவும், தெளிவாகவும் உரைத்தார்!
அன்னை சீதையைத் தேடியபோது, எந்த வேண்டுதலும் இல்லாமல் செய்து, இலங்கை முழுவதும் தேடி, அதன் பிறகு பிரார்த்தனை செய்தார். அவரது வாலில் நெருப்பு வைத்தபோது, அது சுடவில்லை என்றதும், "இது அன்னை சீதையின் இன்னருள்! ஸ்ரீ இராமபிரானின் கருணை! தந்தையார் வாயுதேவன் மீது அக்னி தேவன் வைத்திருக்கும் அன்பு,” என்று உணர்கின்றார்!
இலங்கையின் செல்வத்தைக் கண்டு வியந்தார். அன்னை சீதையின் துயர் எனும் நெருப்பையே கொண்டு, அவரது தந்தையான வாயுவும் செய்யத் துணியாததைச் செய்தார் - இலங்கையை எரித்தார். அவரை வீதிகளில் அரக்கர்கள் இழுத்துச் சென்றபோதே, இலங்கையில் உள்ளவற்றை வேவு பார்த்து, மனதில் தேக்கிவைத்து, ஸ்ரீ இராமபிரானிடமும் பிறகு தெரிவித்தார்.
இலங்கையை நோக்கி பயணத்தைத் தொடங்கியபோது, பற்பல தெய்வங்களை வழிபட்டார். கடலைத் தாண்டும் முன் அன்னை சீதையை வணங்கி, ஸ்ரீ இராமபிரானையே தம் நினைவில் நிறுத்திப் புறப்படுகின்றார்! அவர்கள் இருவருமே அவருக்குக் கண்கண்ட தெய்வங்கள் ஆகிவிட்டனர்!



ஆசாரியர் ஸ்ரீ முதலியாண்டான் அருளியது:

"ஸ்ரீ அனுமன் அன்னை சீதையிடம் ஸ்ரீ இராமபிரானின் கணையாழியைக் கொண்டு சேர்ப்பது ஒரு மிகப் பெரிய ஆன்மீகத் தத்துவத்தையும் குறிக்கின்றது.

அன்னை சீதையைப் பரமாத்மாவைப் பிரிந்து வாடும் ஜீவாத்மாவாக உருவகப்படுத்தவேண்டும். ஸ்ரீ இராமபிரானே ஜீவாத்மாவை அடையத் துடிக்கும் பரமாத்மா. ஸ்ரீ இராமபிரானின் திருநாமத்தைக் கொண்ட கணையாழியே அட்டாட்சரத் திருமந்திரம்.

ஸ்ரீ அனுமனையே ஆசாரியனாக உருவகப்படுத்தவேண்டும்.

ஆக, ஆசாரியனே அட்டாட்சரத் திருமந்திரத்தை ஜீவாத்மாவிடம் அளித்து, பரமாத்மாவிடமும் ஜீவாத்மாவைப் பற்றி எடுத்துச் சொல்லி, ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் சேர்த்துவைப்பவர்."

இதனாலேயே, ஸ்ரீமத் இராமாயணத்தில் நடுநாயகமாகத் திகழும் ஸ்ரீமத் சுந்தர காண்டத்தில், ஸ்ரீ அனுமன் அன்னை சீதையிடம் ஸ்ரீ இராமபிரானின் கணையாழியைச் சேர்ப்பிக்கும் பகுதியே நடுநாயகமாகத் திகழ்கின்றது.







திருமகளாம் அன்னை சீதையின் பேரருட்பார்வையும் கருணையும் பெற்ற பின்னர், ஸ்ரீ அனுமனுக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு ஸ்ரீ இராமபிரானால் ‘உத்தம சேவகன்’ என்று கொண்டாடப்பட்டு, அவரது திருமேனியால் பேரன்புடன் அணைக்கப்பட்டதே!



பாகம் # 4: ஸ்ரீ அனுமன் ஸ்ரீ இராமபிரானால் பேரன்புடன் அணைக்கப் பெற்ற பின்


Image Source: https://in.pinterest.com/pin/599752875369616734/


ஸ்ரீ இராமபிரானின் திருவுள்ளம் அறிந்த உத்தம சேவகர்

ஸ்ரீ அனுமன் மட்டுமே ஸ்ரீ விபீடணரின் குற்றமற்ற பேச்சு, முக பாவனை ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, "அவரை நம்மில் ஒருவராக ஏற்பது சரி," என்று தம் கருத்தை [ஸ்ரீ இராமபிரான் கேட்டதால்] தெரிவிக்கின்றார். இது சரண் அடைந்தோரைத் தவறாமல் காக்கும் ஸ்ரீ இராமபிரானுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது!

நற்குணக்கடலின் நன்மையையே நோக்கும் நற்பண்பாளர்

போர்க்களத்தில் ஸ்ரீ ஜாம்பவான், "நீ ஒருவனே நம் சேனையைக் காக்கக்கூடியவன்," என்று ஸ்ரீ அனுமனைப் புகழ்ந்து, சஞ்சீவனி மூலிகையை எடுத்து வரச்சொல்ல, புகழ்ச்சியிலும் மயங்காமல் பணிவே உருவான ஸ்ரீ அனுமன், ஸ்ரீ ஜாம்பவானின் திருவடிகளைத் தொட்டு வணங்கி, இமயத்தை நோக்கிப் பயணம் செய்கின்றார்.

அங்கே, அம்மூலிகைகள் இவர் வந்திருப்பதை அறிந்து தம்மை மறைத்துக்கொள்ள, "நற்குணக்கடலான ஸ்ரீ இராமபிரானுக்கு உதவ மறுப்பாரும் உளரே!" என்று வெறுத்து, ஸ்ரீ அனுமன் அம்மூலிகை மலையையே பெயர்த்து வருகின்றார்! அப்போதும், ஸ்ரீ இராமபிரானின் நன்மையிலேயே நோக்கம்.

ஸ்ரீ இராமபிரானின் மெய்யடியாருக்கும் மெய்யடியார்

ஸ்ரீ இலக்குவன் போரில் மயங்கி விழுந்தபோது, இராவணன் அவரைத் தூக்கிச் செல்ல முயல, அவ்வரக்கனால் அவரை எள்ளளவும் நகர்த்த முடியாமல், தனது இல்லம் திரும்பினான். ஸ்ரீ அனுமனோ ஸ்ரீ இலக்குவனை ஒரு பறவையின் சிறகை தூக்குவது போலத் தூக்கிவிட்டார். ஸ்ரீ அனுமன் மெய்யடியார் அன்றோ?

தாயாரின் துயர் பொறாத தனயன்

ஸ்ரீ இராமபிரானின் வெற்றிச் செய்தியை அன்னை சீதையிடம் கொண்டு சென்றதும் ஸ்ரீ அனுமனே! அதைக் கேட்ட அன்னை சீதை, உவகை வெள்ளத்தில் மூழ்கி, ஸ்ரீ அனுமனைப் புகழும் வார்த்தைகள் யாவும் ஒவ்வொரு ஸ்ரீ அனுமன் அடியாருக்கும் தேன்வெள்ளமென இனிக்கும்!

ஸ்ரீ அனுமனோ, "தாயே! தங்களது இந்த அன்பு வார்த்தைகளே தாங்கள் அடியேனுக்கு அளித்த பரிசாம். தாங்கள் அடியேனுக்கு ஏதேனும் தரவேண்டும் என எண்ணினால், தங்களைத் துன்புறுத்திய இவ்வரக்கிகளை உதைக்க அனுமதி அளிப்பீர்!” என்று ஒரு நல்ல தனயனுக்கே உரிய அன்புடனும், தாயின் துயர் கண்டு பொறாத கோபத்துடனும் பேசுகின்றார். அப்போதும், தமக்கென எதுவுமே வேண்டவில்லை. “அம்மையும் அப்பனும் நலமாக இருத்தல் வேண்டும்,” என்பதே அவரது குறிக்கோள்.

உயர்ந்தோரை உயிர்ப்பித்த உவமையிலா உத்தமர்

  1. அன்னை சீதையை முதலில் சந்திக்கும் முன், ஸ்ரீ இராமபிரான் பெருமைகளை மறைந்திருந்து பேசி, அவளைக் கேட்கச் செய்துவிட்டு, அவளைச் சந்தித்தார்.
  2. அன்னை சீதையைக் கண்டுவிட்டதை வானத்திலிருந்தே தமது சிம்மநாதத்தால் மனம் நொந்திருந்த வானரர்களுக்குத் தெரிவித்து, அவர்களைப் புத்துணர்வு பெறச் செய்தார்.
  3. ‘கண்டேன் சீதையை’ என்று வினைச்சொல்லை முதலில் சொல்லி, ஸ்ரீ இராமபிரானை உயிர்ப்பித்தார்.
  4. ஸ்ரீ இலக்குவனை உயிர்ப்பிக்கச் சஞ்சீவனி மலையையே பெயர்த்தெடுத்து வந்தார்.
  5. ஸ்ரீ இராமபிரான் 14 ஆண்டுகள் முடிந்து இன்னும் வரவில்லை என்பதால், தீயில் குதிக்க ஸ்ரீ பரதாழ்வான் தயாரானபோது, "ஸ்ரீ இராமபிரான் திருவயோத்தி திரும்பிவிட்டார்," என்ற செய்தியை ஸ்ரீ பரதாழ்வானுக்கு ஸ்ரீ அனுமன் மெதுமெதுவே எடுத்துச் சொன்னாராம்! ஏனெனில், அவ்வளவு மகிழ்ச்சி தரும் செய்தியைப் பட்டென்று உடைத்தால், ஏங்கியிருக்கும் ஸ்ரீ பரதாழ்வான் உயிரையே விட்டிருப்பாராம். அதற்கேற்ப, ஸ்ரீ அனுமன் மெதுமெதுவே தெரிவித்ததற்கே ஸ்ரீ பரதாழ்வான் மூர்ச்சை ஆகிவிடுகின்றார்.
ஸ்ரீ அனுமனுக்கு இணை ஸ்ரீ அனுமனே!

முத்தான மெய்யடியாருக்கு முத்துமாலை!

ஸ்ரீ இராமபிரானின் பட்டாபிஷேகம் அன்று, அன்னை சீதையும், ஸ்ரீ இராமபிரானும் ஸ்ரீ அனுமனுக்கென்றே ஒரு முத்து ஆரத்தை அணிவிக்கின்றனர். அவரிடமே புத்திக்கூர்மையும், செயல்திறனும், நற்புகழும், பணிவும் குடிகொண்டிருப்பதாக அவர்கள் ஸ்ரீ அனுமனைப் பாராட்டுகின்றனர்! இதைவிடச் சிறப்பும் உண்டோ?

Image Source: https://in.pinterest.com/pin/4714774599458302/





ஏன் ஸ்ரீ அனுமனுக்கு மட்டும் இப்பேரருள் கிட்டியது?


Image Source: https://in.pinterest.com/pin/476537204333288463/


மற்ற வானரர்களும் ஸ்ரீ இராமபிரானுக்குத் தொண்டுகள் செய்தனர். ஏன் ஸ்ரீ அனுமனுக்கு மட்டும் இவ்வளவு கௌரவம்? இதற்கு ஸ்ரீ இராமானுசர் தரிசனத்தில் ஆசாரியர்கள் மிக மிக நுட்பமான ஒரு உண்மையைத் தெரிவிக்கின்றனர்:

கிஷ்கிந்தா காண்டத்தில், சர்க்கம் எட்டில், ஒரு கட்டத்தில், ஸ்ரீ சுக்கிரீவர் ஸ்ரீ இராமபிரான் அமர ஒரு மரக்கிளையை முறித்துப் போடுகின்றார். தாமும் அதில் அமர்கின்றார். ஆனால், ஸ்ரீ இலக்குவனுக்கு அவர் எந்த ஆசனமும் அளிக்கவில்லை. ஆனால், ஸ்ரீ அனுமனோ ஸ்ரீ இராமபிரான் அமர்ந்த அதே மரக்கிளையில் ஸ்ரீ இலக்குவனும் சரிசமமாக அமரமாட்டார் என அறிந்து, அவர் ஸ்ரீ இலக்குவனுக்குத் தனியே ஒரு மரக்கிளையை முறித்துப் போடுகின்றார்!

ஸ்ரீ இலக்குவன் அன்னை சீதைக்கும் ஸ்ரீ இராமபிரானுக்கும் தொண்டு புரிவதையே தமது உயிராகக் கொண்டவர். அப்படிப்பட்ட அடியவரைத் தக்கபடி மதித்ததே ஸ்ரீ அனுமனை ஸ்ரீ இராமபிரானின் திருவுள்ளத்தில் உயர்த்தியது. இன்று ஸ்ரீ இராமபிரானுக்கும் இல்லாத புகழ் ஸ்ரீ அனுமனுக்கு இருப்பதற்கு ஸ்ரீ இராமபிரானின் இந்த மகிழ்ச்சியே காரணம்.

திருமாலடியாரைப் பூசிப்பவர்கள் செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்!




முடிவுரை


ஸ்ரீ கருடாழ்வாரைப் போல, ஸ்ரீ அனுமனும் ஸ்ரீ இராமபிரானைத் தோள்களில் தூக்கியதால், ஸ்ரீ இராமானுசர் தரிசனத்தில் ஸ்ரீ அனுமனைத் “திருவடி” என்றே போற்றுவர்.

இன்றளவும், ஸ்ரீ அனுமன் ஸ்ரீ இராமபிரானின் மகிமையிலேயே மயங்கி, ஸ்ரீ வைகுந்தமும் வேண்டாமென்று, இப்பூவுலகில் எங்கெல்லாம் ஸ்ரீ இராமனின் திருநாமம் பாடப்படுகின்றதோ, எங்கெல்லாம் ஸ்ரீமத் இராமாயணம் படிக்கப்படுகின்றதோ, எங்கெல்லாம் ஸ்ரீ இராமபிரானின் திருக்கல்யாண குணங்கள் போற்றப்படுகின்றதோ, அங்கெல்லாம் சிரத்தின் மேல் கூப்பிய கரங்களுடனும், ஆனந்தக் கண்ணீர் பொழியும் திருக்கண்ங்களுடனும் எழுந்தருளுகின்றார்!

Image Source: https://in.pinterest.com/pin/94012710958049750/


அந்த ஸ்ரீ அனுமனின் திருவடிகளுக்கும், ஸ்ரீ அனுமனின் அடியார்களின் திருவடிகளுக்கும் "போற்றி! போற்றி! போற்றி!" என்று காப்பிடுவோம்.

வாழி எதிராசன்! வாழி எதிராசன்! வாழி எதிராசன்!
மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!




நன்றிகள் பல!
 
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!

பொலிக! பொலிக! பொலிக!




2 comments:

  1. மிகச்சிறந்த பதிவு, ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் 🙏

    ReplyDelete
    Replies
    1. தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி. ஸ்ரீ ராம ஜெயம். அஞ்சனை மைந்தன் திருவடிகள் வாழி வாழி வாழியே!

      Delete