தெய்வ நம்பிக்கை இல்லாதவர் ஆண்டாளின் பிறப்பைப் பற்றியும் அவள் இப்பூவுலகை வாழ்க்கையை முடித்துக் கொண்ட முறையைப் பற்றியும் ஆராயவேண்டிய அவசியம் என்ன? இது எப்படி ஆண்டாளையோ தமிழையோ உயர்த்தும்?? பெரியாழ்வாரால் துளசி வனத்தில் கண்டெடுக்கப்பட்ட நிலமகளின் அம்சமான பெண் குழந்தை ஆண்டாள் என்று எல்லோரும் அறிவர்! இதைக் கேலி செய்கின்றாரா நாத்திகரான வைரமுத்து??
"இந்தக் கட்டுரையில் 'தேவதாசி' என்ற சொல்லைத் தவிர மற்றவை எல்லாம் ஆண்டாளை ஏற்றுகின்றன" என்ற ஒரு தவறான கருத்து உள்ளது. வைரமுத்து அவர்களின் தமிழ் அலங்காரமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் இருப்பதால் அவர் செய்யும் பிழைகளை எளிதில் பொதுமக்களால் புரிந்துகொள்ளமுடியாத வண்ணம் அவரது கட்டுரைகள் அமைகின்றன. நூல் ஆசிரியரின் கருத்தையும் உரை ஆசிரியரின் கருத்தையும் மதிக்காமல் தன் கைச்சரக்கை நுழைப்பார் வைரமுத்து.
திருப்பாவைமற்றும் நாச்சியார் திருமொழி ஆகிய இரண்டும் தமிழ் நூல்கள் மட்டும் அல்ல - திருமாலை முழுமுதற்கடவுள் என்று அறிவிக்கும் வைணவ நூல்கள். ஆழ்வார்கள் தமிழ்ப் புலமையை வெளிப்பப்டுத்த மட்டும் பாடல்கள் பாடவில்லை. தாங்கள் வணங்கும் திருமாலைப் பாடுவதுதான் முக்கிய நோக்கம். ‘கொடுமையில் கடுவிசை அரக்கன் திருவினைப் பிரித்து’ என்று ஆழ்வார் பாசுரம். அது போல் தமிழையும் ஆன்மீகத்தையும் பிரிக்க முயல்கிறார் வைரமுத்து. நாத்திகரான இவர் திருமாலைத் துதிக்கும் திருப்பாவையில் என்ன தேடுகின்றார்??
வைரமுத்து அவர்களை விட பல கோடி மடங்கு பன்மொழிப் புலமையும் தத்துவ ஞானமும் உள்ளவர்கள் ஸ்ரீவைணவ உரை ஆசிரியர்கள். அனைத்து உயிர்கள் மீது அன்பு கொண்ட அந்த மாதகவோரின் மாசற்ற உரையைத் தொடுவதற்கும் “தூயோமாய் வந்து” என்றத் தகுதி வேண்டும். நாயகி பாவம் (உணர்வு) என்பது மானுடக் காதல் அல்ல! “ஞானத்தில் தன் பேச்சு பிரேமத்தில் பெண் பேச்சு” என்று ஆசார்ய ஹ்ருதயம் என்ற உயர்ந்த நூல் இதை ஆணித்தரமாக விளக்கும். நம்மாழ்வாருக்கும் திருமங்கை ஆழ்வாருக்கும் கூட நாயகி பாவம் உண்டு.
“நல்ல கணவனை அடைவதற்குத்தான் திருப்பாவை நோன்பு” என்றால்:
1. “மற்றை நம் காமங்கள் மாற்று” என்று இறைஞ்சும் 29-ஆம் பாசுரத்தின் பொருள் என்ன?
2. திருப்பாவையில் எங்கே கணவன் தேடல் நடக்கின்றது?? கண்ணன் தேடல் தானே!
3. மானுடக் காதல் என்றால் ஏன் குழுவாக, ஆயர்குல மகளிராக பாவித்துக் கண்ணனைத் தேடினர்??
4. இவர் கூறும் “ஆண்டாள் பாட்டில் உள்ள விடுதலைக் குரல்” ஆழ்வார்கள் பாட்டிலும் உண்டே! இவர் கூறும் “ஆழ்வார்கள் பாட்டில் உள்ள அடிமையே ஆனந்தம்” என்னும் எண்ணம் ஆண்டாள் பாட்டிலும் உண்டே! அதற்கு இவரது பதில்??
5. “குத்துவிளக்கு” பாசுரம் உலகியல் காமம் என்று தீர்ப்பளிக்க வைரமுத்து என்பவர் யார்? பின்பு ஏன் அந்தப் பாடல்களைக் கோயில்களில் உரக்கப் பாட ஏற்பாடு செய்தார் நாதமுனிகள்??
உரை ஆசிரியரின் கருத்தை மதிக்காமல் இவர் மற்ற ஆழ்வார்களைப் பற்றி எழுதி இருப்பதும் தப்பும் தவறுமாக உள்ளது. இப்படி வரிக்கு வரி அபத்தம் மேல் அபத்தம். இதன் உச்சக்கட்டம் தான் “வெளிநாட்டு ஆராய்ச்சி” ஒன்றை மேற்கோள் காண்பித்தது. அதை எழுதியவர் “இது என் யூகம் மட்டுமே - எந்த ஆதாரமும் இல்லை” என்று மறுத்துவிட்டார்! தமிழில் உரை எழுதியவர்களை உதறிவிட்டு ஏன் அமெரிக்கா வரை சென்றார் வைரமுத்து??
ஆண்டாள் தமிழ்க்கவிஞர் மட்டும் அல்ல. தெய்வக்கவிஞர். அவள் திருமாலின் இடதுபுறம் நின்று நூற்றுக்கணக்கான திருத்தலங்களில் எல்லோருக்கும் அருள் பாலிக்கின்றாள். அவளது தெய்வத் தமிழை உங்கள் எல்லைக்குட்பட்ட அறிவால் கொச்சைப்படுத்த வேண்டாம். உங்கள் பணமும் புகழும் செல்வாக்கும் உங்களைக் காக்கட்டும். ஆண்டாளின் திருப்பாவையைப் பாடாமல் காலை உணவை உட்கொள்ளாத வைணவர்களின் மனங்களைப் புண்படுத்தாதீர்.
பிப்ரவரி 2018 இதழில் - இந்தக் கண்டனத்தின் தொடர்ச்சி
No comments:
Post a Comment