ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும் செவிச்செல்வம் |
Image Credit: https://guruparamparaitamil.wordpress.com/2015/09/22/nampillai/ |
முன்னுரை |
அண்மையில், ஒரு சோதிட வல்லுநர், "நம் காதுகள் வழியே என்றும் இறைவனைக் குறித்து நலம் மிக்க நல்லார் சொன்ன சொல் கேட்கவேண்டும். நம் பாவங்களைத் தொலைத்து இம்மை மறுமை இன்பங்கள் பெற இது மிகச் சிறந்த வழி. இதற்கு 'ச்ரவண யஜ்ஞயம்' என்று பெயர்," என்று கூறியதைக் கேட்டேன்.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை என்றார் பொய்யாமொழிப்புலவராம் திருவள்ளுவர். இறைவன் நமக்கு இரண்டு காதுகள் அருளியதை ஆன்றோர் சென்ற நல்வழியில் பயன்படுத்தி எப்படிப் பயன் பெறலாம் என்பதை, ஆசாரியர்களின் திருவாக்குகளைக் கைவிளக்காகக் கொண்டு, ஆழ்வார்கள் பாசுரங்கள் வாயிலாகச் சுவைப்போம் வாரீர்! |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 11-7-2 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
இப்பாசுரத்தில் ஆழ்வார் அருளுவது:
"ஓங்கி உலகளந்த உத்தமனாய் நீள்வதற்கு, ஸ்ரீ வாமனனாய் உருவெடுத்து, மகாபலியின் வேள்விச்சாலைக்கு வந்து நின்று, மூவடி மண் வேண்டியவனும், 'தக்கணை' என்று சொல்லப்படுகின்ற முதல் மரியாதையான அக்ர தாம்பூலத்தைப் பெற மிகச்சிறந்தவனும், ஒளி மழுங்காத நீலமணி போன்றவனும், அடியார்களுக்கு மிகவும் இனிமையானவனுமான எம்பெருமானைப் பற்றிக் கேட்காத காதுகள் காதுகளே அல்ல" என்று பெரியோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறோமே! |
ஸ்ரீ மணவாள மாமுனிகள் - உபதேசரத்தினமாலை - பாசுரம் # 67, 71 |
ஆசாரியர் ஸ்ரீ பிள்ளைலோகம் ஜீயர் உரை - சுருக்கம் |
"'முன்னோர்கள்' என்று கொண்டாடப்படுகின்ற ஆசாரியர்கள் சொல்வதை மட்டுமே கேட்கவேண்டும்.
'அச்சான்றோர்கள் சொன்னதை மட்டுமே நெறி தவறாமல் எடுத்துச் சொல்பவர்கள் யார்?' என அறிந்துகொண்டு, அவர்கள் சொல்லுமவற்றை மட்டுமே கேட்கவேண்டும். மற்றோர்கள் சொல்வதைக் கேட்பது தகாது," என்று மன்னு புகழ் மணவாள மாமுனிகள் அறிவுறுத்தி உள்ளார். இதையே ஸ்ரீ திருமழிசையாழ்வாரும் தாம் செயல்படுத்தியதாக அருளியுள்ளார். அடுத்து அதைக் காண்போம். |
ஸ்ரீ திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி - பாசுரம் # 63 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் |
இப்பாசுரத்தில் 'கேட்டும்' என்ற சொல்லுக்கு உரையாசிரியர் அருளியுள்ள பொருள்: "[ஸ்ரீ ஆதிசேடனுக்கு அந்தர்யாமியாக இருக்கும் உன்னைப்பற்றி] முதலாழ்வார்கள் போன்ற பெரியோர்கள் அருளியவற்றைக் கேட்டு, அவற்றை மற்றவருக்கும் எடுத்துச்சொல்லி, அவர்களையும் கேட்க வைத்து" என்று அருளியுள்ளார்.
"இதை நல்லதொரு பொழுதுபோக்காகச் செய்து வந்தேன்; அதனாலேயே கொடியதான இப்பிறவிக்கடலில் தரித்து இருந்தேன்" என்றும் ஆழ்வார் அருளியுள்ளார். |
சுருக்கமாக, "பெரியவர்களிடமிருந்து எம்பெருமானைப் பற்றி நம் செவியாராக் கேட்டு, பொழுதை நல்லவிதமாக போக்கி, இப்பிறவிக் கடலில் தரித்து இருக்க வேண்டும். இதுவே செவிச்செல்வம் பெற்ற பயன்," என்று ஆழ்வார்களும் ஆசாரியர்களும் அருளியுள்ளார்கள்
இது மட்டுமின்றி, வேறு சில இனிமையான செவிச்செல்வத்து அனுபவங்களையும் ஆழ்வார்கள் பகிர்ந்துகொண்டுள்ளார்கள். அவற்றையும் காண்போம். |
ஸ்ரீ பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி - பாசுரம் # 63 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் |
"ஞானம் மற்றும் பலத்தின் உறைவிடமான ஸ்ரீ ஆதிசேடனைத் தனது திருப்பள்ளியாகக் கொண்டிருக்கும் எம்பெருமானின் இன்மொழிகளை மட்டுமே எனது காதுகள் கேட்டுத் தரித்து இருக்கும். என்னுடைய புலன்கள் மற்ற இன்பங்களை நாணமின்றி நாடாவே!" என்று ஆழ்வார் அருளியுள்ளார்.
இவ்வாழ்வார் எம்பெருமானின் இன்மொழிகளை விரும்பினார். ஸ்ரீ திருமங்கையாழ்வார் இந்த அனுபவத்தை இன்னும் கோடிட்டுக் காட்டுகின்றார். அதையும் சுவைப்போம். |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 9-4-5 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
இப்பாசுரத்தை ஸ்ரீ திருமங்கையாழ்வார் நாயகி மனோபாவத்தில் பாடியுள்ளார். நாயகி மனோபாவத்தில் ஸ்ரீ திருமங்கையாழ்வார் "பரகால நாயகி" என்று போற்றப்படுகின்றார்.
ஸ்ரீ பரகால நாயகியின் நெஞ்சம் திருப்புல்லாணி எம்பெருமான் பின்னே சென்று, மீண்டு வர மறுத்துவிட்டது. அவளது செவிகள் திருப்புல்லாணி எம்பெருமான் "நான் வருவேன்" என்று அருளிய வார்த்தையைக் கேட்டதால், அதையே நம்பி அவனையே எண்ணி எண்ணி, உடலும் உள்ளமும் உருகி, வாடியிருக்கின்றாள். திருப்புல்லாணி எம்பெருமான் இன்னும் வரவில்லை. இப்பொழுது அவளது செவிகள் அவளது தாய்மார்கள் மற்றும் தோழிமார்களின் ஏச்சுகளைக் கேட்கின்றன. "நங்காய்! நாங்கள் சொல்லும் நல்லுபதேசங்களை நீ செவிகொடுத்துக் கேட்கவில்லை. அவன் வரப்போவதில்லை. இப்படிப் பெண்களைப் பரிசழிப்பதே அவனது தொழில் காண். அவன் சொன்ன பொய்யுரையை நீ கேட்டு நம்பியுள்ளாய் காண்!" என்று இவளைக் கண்டிக்கின்றனர். "மற்றவர்கள் சொல்வது மெய்யே ஆனாலும், அதைக் கேட்கமாட்டேன். எம்பெருமான் சொல்வது பொய்யே ஆனாலும், அது எனக்கு இன்மொழியே!" என்று அவனையே எண்ணி உறுதியுடன் இருக்கின்றாள். இதுவே மெய்யடியார்களின் நிலையாம்! |
ஸ்ரீ பெரியாழ்வார் நம்மை "கேளீர்" என்று அழைத்து, மற்றொரு செய்தியைப் பகர்கின்றார்.
"செவியுணா" என்ற சொல்லால் செவிக்குள் ஒரு நாக்கு உள்ளது என்கிறார் இவ்வாழ்வார்! |
ஸ்ரீ பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி - பாசுரம் # 3-6-7, 3-6-8 |
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம் |
"ஸ்ரீ ஆதிசேடனின் மீது பள்ளி கொள்ளும் பரமபுருடன், கோபர்களைப் போலே, திருக்குழல் ஊதுகின்றான்.
எம்பெருமானின் திருக்குழல் ஓசையைச் செவிக்குள் உள்ள அந்த நாவால் சுவைத்ததால், பூலோக வாசத்தையும், மனிதர்களின் கானத்தையும் வெறுக்கும் தேவர்களும் கூட, அந்தணர்கள் அளிக்கும் அவிர்பாகத்தையும் மறந்தனர்! கண்ணனைப் பெற்ற ஆநிரை மேய்ப்பவர்கள் வாழும் திருவாய்ப்பாடிக்கு வந்து, கண்ணனை ஒரே ஒரு கணமும் பிரியாது நின்றனர்! இது பூமியில் முன்பு நடவாத அதிசயம் அன்றோ?" என்று ஆழ்வார் பாடியுள்ளார். "கோவிந்தன் என்ற திருநாமம் உடைய எம்பெருமான், ஆநிரைகளைக் காத்த மகிழ்ச்சியினால், தனது திருக்குழலை எடுத்து ஊதியபோது, பறவைகளும் தமது கூடுகளை விட்டு வந்து சூழ்ந்துகொண்டு, கண்ணனின் திருக்குழல் இசையை ரசித்து, பரவசத்தால் மெய் மறந்து நின்றன! எப்போதுமே தமது செவிகளை ஆட்டும் ஆநிரைகள் கூட, "செவிகளை ஆட்டினால் கண்ணனின் திருக்குழலோசையை ஒரு கணம் இழக்க நேரிடுமோ" என்று பயந்து, தமது செவிகளை ஆட்டாமல், பரவசத்தால் தமது கால்களைப் பரப்பி [சிலை போல] நின்றன!" என்றும் ஆழ்வார் அருளியுள்ளார். |
"ஆழ்வார்கள் உயர்ந்த அடியார்கள். ஸ்ரீ கண்ணன் எம்பெருமானின் திருவவதாரத்தைக் கண்டவர்கள் புண்ணியம் செய்தவர்கள். அவனது இன்மொழிகளையும் குழலோசையையும் கேட்டார்கள்.
நம் போன்றோருக்கு இது கூடுமோ?" என்றால், அதற்குண்டான அனுபவங்களையும் ஆழ்வார்கள் அருளியுள்ளார்கள்! |
ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 7-5-3 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் |
மற்றவர்களை வையும் கீழ்மை வசவுகளைக் கேட்கச் சிலர் இருப்பர்! அப்படிப்பட்டவர் கூடத் தமது செவிகளை மூடிக்கொண்டு, அந்த இடத்திலிருந்து நகரும் படிக்குத் தாழ்ந்த வசவுகளைப் பேசுபவன் சிசுபாலன்.
அந்தச் சிசுபாலனையும் கூடத் தனது திருவடிகளில் சேர்த்துக்கொண்ட பெருந்தன்மையும் கருணையும் வாய்ந்தவன் ஸ்ரீ கண்ணன் எம்பெருமான் ஆகிய கேசவன். அக்கேசவனது பெருமைகளைக் கேட்க விரும்புகிறவர்கள் வேறொன்றைக் கேட்பரோ? |
ஆண்டாள் - திருப்பாவை - பாசுரம் # 6, 7 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை உரை - சுருக்கம் |
"கேசவன் கீர்த்தியைக் கேளுங்கள்" என்றார் ஸ்ரீ நம்மாழ்வார் - "[எம்பெருமான் திருக்கல்யாண குணங்களைச் செப்பும்] அவனது திருநாமங்களைக் கேளுங்கள்" என்று எளிய வழி காட்டுகிறாள் ஸ்ரீ ஆண்டாள்.
"காலையில் பெரியோர்கள் 'அரி அரி' என்று சொல்லி எழும் பேரரவத்தைச் செவியாரக் கேட்டு உள்ளமெல்லாம் குளிர்ந்துவிட்டதே! நீ எப்படி இன்னும் உறக்கத்தில் உள்ளாய் பிள்ளாய்?! எழுந்திராய்!" என்கிறாள். "நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடுகின்றோமே! அதைக் கேட்டுமா நீ கிடக்கின்றாய்??!! ஒளி உடையாய்! எழுந்திராய்!" என்கிறாள். |
ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 4-6-2 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் |
இப்பாசுரத்தை ஸ்ரீ நம்மாழ்வார் நாயகி மனோபாவத்தில், தோழி நிலையில் பாடியுள்ளார். நாயகி மனோபாவத்தில் ஸ்ரீ நம்மாழ்வார் "பராங்குச நாயகி" என்று போற்றப்படுகின்றார்.
ஸ்ரீ பராங்குச நாயகி எம்பெருமானை எண்ணி எண்ணி மயங்கி விழுந்துவிட்டாள். "இவளுக்கு என் ஆயிற்று??" என்று தாய்மார்கள் பதறி, அவளை மறுபடியும் இயல்பு நிலைக்கு மீட்டு வர, சில இளம் தெய்வங்களுக்கு உண்டான பூசைகளைச் செய்ய முயல்கின்றனர். அப்போது, ஸ்ரீ பராங்குச நாயகியின் தோழிகள், "அம்மைமார்களே! நீங்கள் கலங்கியுள்ளீர்கள். நீங்கள் செய்யும் இப்பூசைகள் அவளது நிலைக்குச் சேராது. அவள் விரும்புவது மிக்க பெருந்தெய்வமாம் பரம்பொருளாகிய திருமால். அதனால், அவளைத் தேற்றி நிலைபெறச் செய்வதற்கு, நீங்கள் "சங்கு சக்கரம்" என்று திருமாலின் அடையாளச் சின்னங்களை உரக்க, நன்றாகக் கூறுங்கள். அதைக் கேட்டு எழுந்துவிடுவாள்!" என்று அறிவுறுத்துகின்றனர். |
ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 6-5-10 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் |
இப்பாசுரத்தையும் ஸ்ரீ நம்மாழ்வார் நாயகி மனோபாவத்தில், தோழி நிலையில் பாடியுள்ளார்.
தோழி கூறுவதாவது: "‘திருமாமகள், நிலமாமகள், ஆயர்மாமகள் [நப்பின்னை] ஆகியோரே வந்து பிறந்தனரோ?’ என்று எண்ணும் அளவிற்கு ஸ்ரீ பராங்குச நாயகி ‘நெடுமால்’ என்றே ஏங்கி ஏங்கிக் கூவுகின்றாள். அவளுக்கு அருள் செய்யத் திருத்தொலைவில்லிமங்கலம் எம்பெருமான் முன்னமே வந்து அத்திருத்தலத்தில் உறைகின்றான். அவனை நினைத்து இளைத்திருக்கும் ஸ்ரீ பராங்குச நாயகி, தளர்ச்சியால் கைகளைக் கூடக் கூப்பமுடியாமல், திருத்தொலைவில்லிமங்கலத்தைத் தலையால் வணங்குகின்றாள். ‘திருத்தொலைவில்லிமங்கலம்’ என்ற அந்த ஊரின் திருநாமத்தையே கேட்கவேண்டும் என்று கருத்தாய் இருக்கின்றாள்." தோழி "திருத்தொலைவில்லிமங்கலம்" என்று ஒரு முறை மட்டுமே சொல்லி, மறு முறை "அவ்வூர்" என்று கூறியதன் காரணம் உரையில் மிகவும் அழகாக விளக்கப்பட்டுள்ளது: தோழி முதல் முறை "திருத்தொலைவில்லிமங்கலம்" என்று கூறியபோது அது ஸ்ரீ பராங்குச நாயகி "திருத்தொலைவில்லிமங்கலம்" என்று சொல்லும் போது கேட்பதற்கு மிக அழகாக இருப்பது போல தான் சொல்வது இல்லை என்று உணர்ந்தனளாம். அதனால், மறு முறை குறிப்பிடும்போது "அவ்வூர்" என்று மட்டுமே கூறினாள் என்று உரை. |
இப்படி, அடியார்கள் எம்பெருமானின் கீர்த்தி, எம்பெருமானின் திருநாமங்கள், எம்பெருமானின் திருச்சின்னங்கள் மற்றும் எம்பெருமானின் திருத்தலங்களின் திருநாமங்கள் ஆகியவற்றைக் கேட்டுக் கேட்டு மகிழ்வர்.
ஸ்ரீ திருமழிசையாழ்வார் அவரது பாசுரத்தில் தாமும் கேட்டு, மற்றவரையும் கேட்பிக்கவேண்டுமென அருளினார். அப்படி மற்றவரைக் கேட்க வைத்ததைப் பாடும் பாசுரங்களும் ஆழ்வார்கள் அருளியுள்ளனர். அவற்றைச் சுவைப்போம். |
ஸ்ரீ பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி - பாசுரம் # 3-10-4 |
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம் |
ஸ்ரீ பெரிய பிராட்டியாரது மிகச்சிறந்த திருநாமமான "ஸ்ரீ" என்ற திருநாமத்திற்குப் பெரியோர்கள் 6 பொருள்களை அருளியுள்ளனர். அவற்றுள்:
1. நம் விண்ணப்பங்களைச் செவிகொடுத்துக் கேட்பவள் 2. நம் விண்ணப்பங்களை எம்பெருமானையும் கேட்கச் செய்பவள் என்பவை இரண்டு. இப்படிப்பட்ட ஸ்ரீ பெரிய பிராட்டியாருக்கே அவள் உயிரைக் காப்பாற்றக்கூடிய சொற்களைச் சொல்லிக் காப்பாற்றிக் கொடுத்தவர் நம் எல்லோர் அன்பையும் பெற்ற ஸ்ரீ அனுமன்! ஸ்ரீமத் ராமாயணத்தில் முக்கியமான கட்டமான இந்தப் பகுதியை ஸ்ரீ பெரியாழ்வார் ஒரு பதிகமாகவே பாடியுள்ளார். இது ஸ்ரீ குகப் பெருமாள் எம்பெருமானையும் பிராட்டியையும் ஸ்ரீ இலக்குவனையும் கங்கை ஆற்றைக் கடக்க உதவியதைப் பேசும் பாசுரம். இதனை ஸ்ரீ அனுமன் ஒரு அடையாளமாக அன்னை சீதையிடம் "கேட்டருளாய்" என்று விண்ணப்பம் செய்கின்றார். ஸ்ரீ இராமனின் திருநாமம், சரித்திரம், செய்தி, அன்னை சீதையின் நம்பிக்கைக்கும் மனமகிழ்ச்சிக்கும் தேவையான முக்கிய ஆறுதல் மொழிகள் இவற்றையெல்லாம் சொல்லி, பிராட்டியை உயிர் பிழைக்கச் செய்தார். ஸ்ரீ இராமன் வெற்றி பெற்றதையும் பிராட்டியைக் கேட்கச் செய்தார். ஸ்ரீ அங்கதன் தலைமையில் உள்ள வானரர்கள் கேட்கும் வண்ணம், வானில் இருந்தபடியே வெற்றி முழக்கம் [ஜய த்வனி] செய்து அன்னை சீதையைக் கண்ட வெற்றிச் செய்தியைச் சொல்லி, அவர்களுக்கு ஒரு மறுபிறப்பை அளித்தார். அன்னை சீதையைப் பற்றி ஸ்ரீ ராமனுக்கு "கண்டேன் சீதையை" என்று சொல்லிப் பெருமாளையும் உயிர் பிழைக்கச் செய்தார். "ஸ்ரீ ராமன் நாடு திரும்புகிறார்" என்ற அற்புதச் செய்தியை ஸ்ரீ பரதாழ்வானுக்குச் சொல்லி அவரையும் உயிர் தரிக்கச் செய்தார். பெருமாள், பிராட்டி, அடியார்கள் ஆகியோரின் செவிச்செல்வம் உய்யும்படிச் செய்த இந்தச் சொல்லின் செல்வன், நம் போன்றோர் ஸ்ரீ இராமனின் புகழைப் பற்றிப் பேசினால், அங்கும் வந்து அமர்ந்து, அவரது செவிச்செல்வத்தால் அதையும் ஆர்வமாகக் கேட்கிறார்!! என்னே ஒரு கைங்கர்யச் செல்வர் இவர்!!! |
ஸ்ரீ குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி - பாசுரம் # 10-8 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
அனுதினமும் ஸ்ரீமத் இராமாயணத்தைக் கேட்டுத் தமது பொழுதைப் போக்கிய ஸ்ரீ குலசேகர ஆழ்வார், இப்பாசுரத்தில் "ஸ்ரீமத் இராமாயணத்தைச் செவியாலும் [மனக்]கண்ணாலும் பருகுவோம். இதைச் செய்த நாங்கள் இன்னமுதத்தை மதிக்க மாட்டோம்," என்று முழங்கியுள்ளார். "செவியுணா" என்று இவரும் காட்டுகின்றார்!
எம்பெருமான் மற்றும் அவனது அடியார்களின் சரிதையைக் கேட்பதில் அடியார்களுக்கு ஊற்றம். "தொண்டர்க்கு அமுதுண்ண சொன்ன சொல் மாலை" என்றன்றோ ஸ்ரீ நம்மாழ்வாரும் தமது பாசுரங்களை விவரித்தது? ஸ்ரீமத் ராமாயணத்தைப் பாராயணம் செய்து, எல்லோரையும் கேட்கச் செய்து, எல்லோரும் நன்னெறியைப் பின்பற்றும்படிச் செய்ததால் ஸ்ரீ இலவ குசர்கள் "உலகுய்யத் திருவயிறு வாய்த்த மக்கள்" என்று போற்றப்படுகின்றனர் என்று உரையாசிரியர் அருளியுள்ளார். அவர்கள் பாடிய ஸ்ரீமத் இராமாயணத்தை ஸ்ரீ இராமபிரானே மிக்க ஆவலுடன் கேட்டு அருளினார். மற்றவர்களையும் கேட்கச் செய்தார். ஆயிரம் பேருடைய எம்பெருமானுக்கு "சுசிஸ்ரவா:" என்று ஒரு திருநாமம் உண்டு. "நல்வார்த்தைகளைக் கேட்பவன்" என்று பொருள். "சீதாயாம் சரிதம் மஹத்" என்று அசோகவனத்தில் சிறையிருந்த அன்னை சீதையின் ஏற்றதைப் பேசும் ஸ்ரீமத் இராமாயணத்தை ஸ்ரீ இராமபிரான் ஆவலுடன் கேட்டது வியப்பில்லை. அடியார்களின் திருவாக்குகளையும் பெருமைகளையும் கேட்பதில் எம்பெருமானுக்கு ஊற்றம். ஸ்ரீ நம்மாழ்வார் முதலான ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களைப் பேராவலுடன் கேட்டான். ஒரு நாள், திருவீதிப் புறப்பாட்டின் சமயம், மேள தாளங்களை நிறுத்தச் சொல்லி, ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதியைக் பொங்கும் மகிழ்ச்சியுடன் கேட்டான். ஸ்ரீ மணவாள மாமுனிகள் செய்த திருவாய்மொழி காலட்சேபத்தை, ஏறக்குறைய ஒரு வருடம் தனது உற்சவங்கள் யாவற்றையும் நிறுத்தி, புன்சிரிப்பும் பூரிப்பும் பொங்கக் கேட்டு, அவருக்குச் சீடனாகவே ஆனான். |
முடிவுரை |
1. நம் செவிச்செல்வத்தால் என்ன என்ன கேட்க வேண்டும் என்பதையும்
2. எம்பெருமான் மற்றும் அவனது அடியார்களின் திருச்செவிகளுக்கு நாம் என்ன என்ன அமுதத்தை ஊட்டவேண்டும் என்பதையும் ஆழ்வார்கள், ஆசாரியர்கள் அருளால் புரிந்து கொண்டோம். ஸ்ரீ பிரகலாதாழ்வானும் நவ வித பக்தியைச் சொல்லும்போது முதன்முதலில் "சிரவணம்" என்றே அருளினார். தாயின் கர்ப்பத்தில் வசித்தபோது ஸ்ரீ நாரத பகவானின் பொன்மொழிகளைக் கேட்டே பக்தியின் சிகரத்தைத் தொட்டவர் அன்றோ? ஆழ்வார்களின் அருளிச்செயல்கள் என்ற பெருங்கடலில் மேலோட்டமாக மூழ்கியெடுத்த முத்துக்கள் இவை! இன்னும் பலவும் இருக்கும். பெரியோர்களிடம் கேட்க வேண்டுகின்றேன். நாம் எல்லோரும் அடியார்களின் பெருமைகளையும், ஆசாரியர்களின் நல்லுபதேசங்களையும், ஆழ்வார்களின் பாசுரங்களையும், எம்பெருமான் திருநாமங்களையும் சரிதைகளையும் நாள்தோறும் கேட்டு, தீவினைகள் போக்கி, நல்லருள் பெற்று, நீங்காத செல்வம் நிறைந்து விளங்குவோமாக! |
நன்றிகள் பல! |
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!
|
Beautifully written blog🙏
ReplyDeleteOne must continue to hearing(shravanam) contemplating (mananam) and keep meditating (nidhidhyasanam)on paramAtma's divine attributes to stay firm and not drift away from the path of dharma.
Thanks a lot for enjoying and sharing your knowledge, Sir! 🙏💐☺
Delete