ஆழ்வார்களும் ஆசாரியர்களும் போற்றும் நலம் தரும் சொல்லாகிய நாராயண நாமம் |
Image Credit: https://wallpapercave.com/venkateswara-wallpapers |
முன்னுரை | |
ஒரு முறை ஒரு வாடகை வண்டியில் ஏறியபோது, அசதியில் "நாராயணா!" என்றேன். உடனே அந்த ஓட்டுநர் "ஏன் மேடம்? 'ஓம் நமோ நாராயணா[ய]' என்று சொல்லக்கூடாதா?" என்று கேட்டார்!
இக்கேள்வி பலர் மனதிலும் உள்ள ஒரு கேள்வி. இதற்கான விடை என்ன? மந்திரங்கள் ஆசாரிய உபதேசத்தால் மட்டுமே பலிக்கும். அதற்கு என்ன வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளனவோ அவற்றின்படியே மந்திரங்களை ஓத வேண்டும். திருநாமங்கள் அப்படி அல்ல. அவற்றைச் சொல்ல நியமங்கள் ஏதும் இல்லை. ஆயினும் மந்திரங்கள் அளிக்கும் அதே வரங்களை நாமங்கள் அளிக்கும்! "திருநாமங்கள் மிகவும் எளியனவாக இருக்கின்றனவே. வேதங்களை ஓதிய பலன் இவற்றை ஓதினால் வருமோ?" என்ற கேள்விக்கு ஆழ்வார்கள் விடையளித்துள்ளனர். ஒரு எடுத்துக்காட்டு - ஸ்ரீ திருமழிசையாழ்வார் அருளிய நான்முகன் திருவந்தாதி பாசுரம்: பாசுரத்தின் பொருள் சுருக்கம்: [என்] பாசுரங்களுக்கு நிறைந்த பொருளாக விளங்கும் எம்பெருமான் செங்கண்மால் திருநாமங்கள் செவிக்கு இனியன; புவியில் உள்ளோருக்கு அதுவே நிழல். ஆராய்ந்து பார்த்தால் மறைகளின் தேர்ந்த பொருள் இதுவே. இங்கே "செங்கண்மால்" என்றது "நாம் அவன் திருநாமங்களைச் சொல்லும்போது அவன் திருக்கண்கள் மகிழ்ச்சியில் சிவக்கின்றன! ஆதலால் அவன் செங்கண்மால்" என்று ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை அருளியுள்ளார். இதனால் திருநாமங்களைப் பாடுதல் மறைகளின் தேர்ந்த பொருள் மட்டுமே இன்றி எம்பெருமானின் திருவுள்ளத்திற்கும் மிகவும் உகப்பு என்பது தெளிவாகின்றது. கலியுகத்தில் பிறவிக்கடலைத் தாண்ட மிகச் சிறந்த வழியாகத் திருநாமங்களைப் பாடுதல் என்ற நாம சங்கீர்த்தனம் போற்றப்பட்டுள்ளது. ஆழ்வார்களும் அவர்களது அருளிச்செயல்களில் திருநாமங்களைப் பாடுதலைப் போற்றியுள்ளனர். 'நலம் தரும் சொல்' என்று பரம்பொருளாம் 'நாராயண' நாமத்தில் தொடங்கி, 'என் நா இருந்து எம் ஐயன் இராமானுசன் என்று அழைக்கும்' என்று ஆசாரியர்கள் குல திலகராம் 'இராமானுச' திருநாமம் வரை நாம சங்கீர்த்தனத்தின் பெருமைகளைச் சான்றோர்கள் முழங்கியுள்ளனர். இதனை, ஆசாரியர்கள் அருளிய உரைகளை அடியொற்றி, ஆழ்வார் பாசுரங்களைக் கொண்டு சற்று ஆராய்வதே இச்சிறு கட்டுரையின் நோக்கம். |
ஆண்டாள் - நாய்ச்சியார் திருமொழி - பாசுரம் # 2-1 |
ஆசாரியர் ஸ்ரீ பராசர பட்டர் உரை - சுருக்கம் |
"மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று நாமம் பலவும் நவின்றேலோரெம்பாவாய்" என்று நமக்கு அறிவுறுத்திய ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் இங்கே "நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா!" என்று அருளியுள்ளாள்.
நாராயண நாமம் எம்பெருமானுக்கு மட்டுமே இருக்கும் தனிச் சிறப்பு வாய்ந்த திருநாமம். இந்தத் திருநாமமே அஷ்டாக்ஷரம் என்கிற திருமந்திரத்திலும், மந்த்ர ரத்னம் என்று கொண்டாடப்படும் துவய மந்திரத்திலும் இடம் பெறுகின்றது. இந்தத் திருநாமத்தைச் சொன்னால் உதடுகள் ஒட்டாது என்பதால் இதை நாம் சொல்கிறோம் என்று ஒருவர் அறியாமலே இதை மெல்லச் சொல்லிக்கொண்டிருக்க முடியும்! ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு ஸ்ரீ பராசர பட்டர் அருளியுள்ள "ஸ்ரீ பகவத் குண தர்பணம்" என்ற உரையில், "நாராயண" நாமத்திற்கு அருளியுள்ள உரை: "இந்தத் திருநாமமே எம்பெருமானின் அனைத்துத் திருநாமங்களுக்கும் அரசன். ஒரு படையில் அரசன் நடுவே வீற்றிருப்பான். அவனுக்கு முன்னும் பின்னும் படைவீரர்கள் செல்வர். அது போலவே இங்கேயும் 'நாராயண' நாமம் நடுவே கொலு வீற்றிருக்க, மற்ற திருநாமங்கள் முன்னும் பின்னும் வீரநடை போடுகின்றன!" என்று அருளியுள்ளார். ஆதலால் மேல்வரும் பகுதிகளில் ஆழ்வார்கள் யாவரும் "நாராயணனின் நாமங்களைச் சொல்லுவோம்" என்று முழங்கும் பாசுரங்களைச் சுவைப்போம். |
ஸ்ரீ திருமங்கையாழ்வார் - பெரிய திருமொழி - பாசுரம் # 1-1-9 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
மிகவும் புகழ் வாய்ந்த இப்பாசுரத்தில் "நாராயண" நாமம் அனைத்தையும் அருள வல்லது என்று ஆழ்வார் முழங்குகின்றார். அவையாவன:
எம்பெருமான் திருநாமங்களைச் சொன்னாலே நாம் 'தொண்டர் குலம்' என்ற உயர்ந்த குலத்தைச் சார்ந்தவர் ஆகின்றோம். ஒருவர் உயர்ந்தவரா தாழ்ந்தவரா என்பதை நிர்ணயிப்பது எம்பெருமானின் தொடர்பேயாம். ஸ்ரீவைஷ்ணவம் என்ற உயர்ந்த செல்வமும் தரும். உலகியல் செல்வங்களும் தரும். போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தரைமட்டமாகிவிடும். அடியார்களின் துயர்கள் யாவும் விலகும். மோட்சமும் தரும். எம்பெருமானின் அருளைப் பெற்றுத் தரும். மோட்சத்திலும் எம்பெருமானுக்கும் அவன் அடியார்களுக்கும் தொண்டு செய்திருக்கும் பெரும் பேற்றைத் தரும். மற்றவருக்கும் கூட மோட்சம் அளிக்கும் வல்லமையைத் தரும்! ஈரைந்து மாதங்கள் சுமந்து பெற்றவள் செய்யும் நன்மைகளைக் காட்டிலும் பெருபெருத்த நன்மைகளைச் செய்யும். |
முதலாழ்வார்கள் - முதல், இரண்டாம், மூன்றாம் திருவந்தாதிகள் - பாசுரம் # 95, 20, 8 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் |
எம்பெருமான் அருளால் நம் வாயிலேயே நாக்கும் உள்ளது. அதை வைத்து ஓயாமல் உரைக்க அனைத்து வரங்களையும் தர வல்ல 'நமோ நாராயணாய' என்ற மிக எளிமையான திருமந்திரமும் உள்ளது. இதனால் திரும்பி வருதல் என்ற குற்றமில்லாத வைகுந்தம் போகும் வழியும் உள்ளாதாகின்றது. இப்படிக் குறை ஏதும் இல்லை என்றபோதும் சிலர் அழிவைத் தரும் வழிகளில் சென்று, பிறவிக்கடல் என்கிற நரகத்தை ஏன் அடைகின்றனர்?
1. அயலார் சுமத்தும் பழிகள் மற்றும் நம் குற்றங்களால் வரும் பாவங்கள் ஆகிய இரண்டையும் விலக்கி, எப்போதும் சாத்திரங்கள் சொன்ன வழியில் உன்னை வழிபட்டு அடைவோர்களும் 2. பெற்ற தாயைச் சொல்வது போல 'நாராயண' நாமங்களை நன்கு உணர்ந்து துதிப்பதற்கான பக்தி, விருப்பம் ஆகிய காரணங்களை உடையவர்களும் மகிழ்ந்து வாழப் பெறுவார்கள். நல்ல நெஞ்சே! வாராய்! நாரங்களைத் தனக்கு அயனமாகக் [இருப்பிடமாகக்] கொண்டவன் நாராயணன். பிரளய காலங்களில் இவ்வுலகை உண்டு உமிழ்ந்தவன். அவனோடு நமக்கு உள்ள மாறாத உறவை அறிந்துகொண்டு, அவனுடைய முக்கியமான 'நாராயண' திருநாமத்தையும் மற்றும் பல திருநாமங்களையும் நம் வாக்கு முதலான புலன்களால் அனுபவிப்போம். அஞ்சலி முத்திரை செய்த கைகளால் அவனைத் தொழுவோம். நம் கண்கள் எப்போதும் வண்டுகள் மொய்க்கும் திருத்துழாய் மாலை சூடிய கண்ணனையே காணட்டும். |
ஸ்ரீ திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி - பாசுரம் # 64 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் |
பொன் மகரநெடுங்குழைக்காதனும், இவ்வுலகுக்குக் காரணனும், எல்லோருக்கும் நாதனும், அடியார்களிடம் அன்பு உடையவனும், நாராயணன் என்ற பெயர் உடையவனும், நம் பிறவித் தொடரைத் தகர்க்கவல்ல பெயர்களை உடையவனும் ஆகிய எம்பெருமானைத் தூமலர் தூவித் தொழுது ஏத்துங்கள்.
அவன் திருநாமங்கள் அவனது குணங்களையே பறைசாற்றுகின்றன [அதுவே மறைகளின் பொருளாம்]. அக்குணங்களை அறியாவிடிலும், அவன் திருநாமங்களைச் சொன்னாலே போதும். அவன் திருநாமங்களைச் சொல்லுவதே நமக்குத் தகுதியாம்! |
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை - பாசுரம் # 12 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
முற்கலன் என்பான் ஒருவன், பல தீமைகள் செய்த பின், அதை நினைத்து வருந்தி, எள்ளால் ஆன பசுவைத் தானம் செய்து 'க்ருக்ஷ்ணார்ப்பணம்' என்றான்.
அவன் இறந்த போது யம தூதர்கள் அவனை நரகத்திற்கு இழுத்துச் சென்றனர். ஆனால் யமனோ அவனிடம் மிகவும் தண்மையாக நடந்துகொண்டான். இதைக் கண்டு வியந்த முற்கலனுக்கு, அவன் சொன்ன 'க்ருக்ஷ்ணார்ப்பணம்' என்ற சொல்லை நினைவூட்டிய யமன், எம்பெருமான் திருநாமங்களின் மகிமையைப் பற்றிக் கூறும்போதே நரகில் உள்ளார்கள் அவற்றைக் கேட்டுத் துன்பத்திலிருந்து நீங்கினர்!! "இப்படி அருளும் திருநாமங்கள் இருந்தும் துன்பத்தில் துவளலாமா?" என்று ஆழ்வார் வருந்துகின்றார். இங்கே "நம்பி" [நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன்] என்ற சொல்லின் உரையில் "நாராயண" நாமமே எடுக்கப்பட்டுள்ளது! "நம்மை உடையவன் நாராயணன் நம்பி" என்று ஆண்டாளும் 'வாரணமாயிரம்' பதிகத்தில் அருளினாள் அன்றோ? "சங்கீர்த்ய நாராயண சப்த மாத்ரம் விமுக்த துக்கா: சுகினோ பவந்து" [நாராயண என்ற சப்தத்தைக் கேட்டாலே [ / சொன்னாலே] துன்பம் நீங்கி இன்புறுவர்] என்று ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் முழங்குவதை ஆசாரியர் மேற்கோள் காட்டியுள்ளார். |
ஸ்ரீ நம்மாழ்வார் - திருவாய்மொழி - பாசுரம் # 10-5-1 |
ஆசாரியர் ஸ்ரீ நம்பிள்ளை உரை - சுருக்கம் |
இப்பாசுரத்தின் உரை மிகவும் அழகானது!
சுவர்க்கம் போன்ற உலகங்கள் அழியக்கூடியவை. அவற்றை அடைய குறிப்பிட்ட அளவு புண்ணியம் செய்தால் அவற்றை அடையலாம். கண்ணன் கழலிணைகளை நமக்குத் தரும் பரமபதமோ அழிவற்றது. அதனை அடைய "இவ்வளவு புண்ணியம் செய்யவேண்டும்" என்று அளவிட்டுச் சொல்லல் ஆகாது. அதனால் அதனை அடைய மனம் உடையவராக இருந்தால் போதும். அப்படிப்பட்டவர்கள் செய்யவேண்டியது என்ன? எண்ணவேண்டும். எதை? 'நாரணம்' என்ற திருநாமத்தை. ஏன்? 'நாரணம்' திருநாமமே எம்பெருமானின் தனிச் சிறப்பு வாய்ந்த திருநாமம். அஷ்டாக்ஷரம் முதலான மந்திரங்களில் உள்ள திருநாமம். மந்திரம் கொடுக்கும் அதே பலனைத் திருநாமம் அருளும் என்பதால் 'மந்திரம்' என்று சொல்லாமல் 'திருநாமம்' என்று ஆழ்வார் அருளியுள்ளார்! பிரணவம் என்கிற ஓம்காரம், நம:, 'ஆய' என்ற விகுதி எதுவும் தேவை இல்லை. 'நாரணம்' என்பதே போதும்! அது பூரணமான திருநாமம். அதென்ன "நாராயண" என்னாமல் "நாரணம்" என்கிறார்? குழந்தை 'அம்மா' என்றாலும், 'அம்மே' என்றாலும் தாய் ஓடி வருவாள் அன்றோ? அதே போல எம்பெருமானும் ஓடி வருவான். 'நாரணமே' என்று ஏகாரத்தோடு முடித்து ஆழ்வார் அருளியதால் 'இது ஒன்றே போதும்' என்று அருளியுள்ளார். 'அவ்வளவு பெரியதை அடைய இவ்வளவு எளிய திருநாமம் போதுமோ?' என்றால், "திண்ணம்" என்று ஆழ்வார் திட்டவட்டமாக அருளியுள்ளார்! அதுவும் எண்ணினாலே போதும் என்றும் அருளியுள்ளார்!! |
ஸ்ரீ பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி - பாசுரம் # 4-6-8 |
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம் |
"குழந்தைகளுக்கு எம்பெருமான் திருநாமங்களைச் சூட்டி அழைத்தாலும் நன்மையே" என்கிறார் ஆழ்வார்.
அஜாமிளன் என்பார் ஒருவர் தம் பிள்ளைக்கு "நாராயணன்" என்று பெயரிட்டு அழைக்க, அதுவே காரணமாக அவர் பாபங்கள் மன்னிக்கப்பட்டு, அவர் இறுதியில் வைகுந்தம் சென்றார். அந்நிகழ்வின் சாரமான பொருளாக இங்கே ஆழ்வார் எம்பெருமான் திருநாமங்களைக் குழந்தைக்கு இட்டு அழைக்க அறிவுறுத்துகின்றார்: உலகீர்! "நம்பி, பிம்பி" என்று தாழ்ந்தவர்களுடைய பெயர்களைக் குழந்தைகளுக்கு இடவேண்டாம்! அப்படிச் சூட்டினால் அவைகளால் ஏற்பட்ட தாழ்ந்த உலகியல் நன்மைகள் நான்கு நாள்களில் மழுங்கிவிடும். "நம்பி என்பது எம்பெருமானின் திருநாமம் அல்லவா?" என்றால், அந்த எண்ணத்துடன் பெயரைச் சூட்டாமல், 'நம்பி' என்று வேறு எவரையோ நினைத்து இட்ட பெயராயின், அது ஆழ்வாரின் திருவுள்ளத்திற்கு உகப்பில்லை காணீர்! "செந்தாமரைக் கண்ணனான நாராயணின் திருநாமம்" என்ற எண்ணத்துடன் ஒரு தாய் தன்னுடைய பிள்ளைக்குப் பெயரிட்டு அழைத்தால், அந்த நாரணன் என்ற பிள்ளையின் தாய் என்றும் நரகம் புகமாட்டாள். |
ஸ்ரீ குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி - பாசுரம் # 2-4 |
ஆசாரியர் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளை உரை - சுருக்கம் |
"அரங்கனுக்கு அடியார்களாய் நாத்தழும்பு எழ [நாக்கு தடித்துப் போகும்படி] 'நாரணா!' என்று அழைத்து" என்று அடியார்களுக்குத் திருநாம சங்கீர்த்தனம் ஒரு சிறப்பான அடையாளம் என்பதை இயம்பி அருள்கின்றார் ஆழ்வார்.
இங்கே ஆழ்வார் "எம்பெருமான் திருநாம சங்கீர்த்தனம்" என்பதை ஒரு படி மேலே கொண்டு செல்கிறார்: "அப்படித் திருநாம சங்கீர்த்தனம் செய்யும் அடியார்களின் திருவடிகளை ஏத்தி [பல்லாண்டு பாடி] அடியேன் வாழ்வேன்" என்கின்றார்! |
ஸ்ரீ மதுரகவியாழ்வார் - கண்ணிநுண் சிறுத்தாம்பு - பாசுரம் # 1 |
ஆசாரியர் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் உரை - சுருக்கம் |
மேலே ஸ்ரீ குலசேகர ஆழ்வார் "எம்பெருமான் திருநாமத்தைப் பாடும் அடியார்களின் திருவடிகளுக்குப் பல்லாண்டு பாடுவேன்" என்றார்.
இங்கே ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் இன்னும் ஒரு படி மேலே செல்கிறார்: "யசோதையின் அன்புக்குக் கட்டுப்பட்டு உரலில் கட்டுண்ட மாயனைக் காட்டிலும் 'கண்ணன் மீதுள்ள அன்பே ஒரு வடிவெடுத்து வந்ததோ?' என்னும்படி விளங்கும் என் ஆசாரியர், தென்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரியில் வந்து அவதரித்த நம்பியான ஸ்ரீ நம்மாழ்வாரின் திருநாமத்தைச் சொன்னாலேயே தித்திக்கும் அமுதம் என் நாவில் ஊறுகின்றது!" என்கிறார். இங்கே "என் நாவுக்கே" என்ற இடத்தில் "இதை என்னால் மட்டுமே உணர முடியும், ஆழ்வார் பெருமையை உணராதவர்களுக்குப் புரியாது" என்று உரை வரையப்பட்டுள்ளது! எம்பெருமான் திருநாமத்தைப் பாடுவது சிறப்பு. அதற்கும் கூட ஆள் கிடைக்கும். எம்பெருமான் அடியவர் திருநாமத்தைப் பாடுவது பெருஞ்சிறப்பு. அதற்கு ஆள் கிடைப்பது அரிதாம். ஒரு முறை ஒரு வண்ணான் ஸ்ரீ இராமானுசரைச் சேவித்து, அவன் குழந்தைகளையும் அவரைச் சேவிக்க அழைத்தார். அப்படி அழைக்கும்பொழுது "காரிமாறா! குருகூர் நம்பி! திருநாவீறு உடைய பிரான்! வாரீர்!" என்று அழைத்தார். அதாவது தம் பிள்ளைகள் எல்லோருக்கும் ஸ்ரீ நம்மாழ்வாரின் திருநாமங்களைச் சூட்டியிருந்தார். இதைக் கேட்டு உருகிய ஸ்ரீ இராமானுசர், "அந்தோ! நாமும் இல்லறத்தில் இருந்து இப்படி ஆழ்வார் திருநாமத்தை குழந்தைகளுக்குச் சூட்டி அழைக்கும் பேறு பெறவில்லையே!" என்று வருந்தினாராம்! சில சீடர்களுக்கு ஸ்ரீ நம்மாழ்வாரின் திருநாமத்தை ஸ்ரீ இராமானுசர் சூட்டினார் என்று குரு பரம்பரா பிரபாவமும் தெரிவிக்கின்றது. இப்படிச் சான்றோர்கள் ஸ்ரீ நம்மாழ்வார் திருநாமத்தில் ஈடுபடுவர். |
ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் - ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி - பாசுரம் # 1 |
ஆசாரியர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் உரை - சுருக்கம் |
இது "ப்ரபந்ந காயத்ரி" என்று கொண்டாடப்படும் ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதியின் முதல் பாசுரம். காயத்ரி மந்திரம் நான்மறைகளின் சாரம். அதுபோல, ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதி தமிழ் மறைகளின் சாரம்! ஸ்ரீ இராமானுசரைச் சரண் அடைந்தோருக்கு [ப்ரபந்நர்களுக்கு] இதுவே காயத்ரி மந்திரம்.
இங்கே ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் திருநாமங்களைப் பாடுவதின் இறுதிக்கட்டத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்: "திருமகள் கேள்வனை மாறன் என்ற ஸ்ரீ நம்மாழ்வார் துதித்தார். அவரது அடி பணிந்தவர் ஸ்ரீ இராமானுசர். அந்த அடியவருக்கு அடியவரின் திருநாமங்களை நாம் சொல்லுவோம்" என்று முழங்கினார். அத்துடன் நில்லாமல் 'இராமானுச' என்ற திருநாமத்தை 108 முறை நாமும் சொல்லும்படி, 'இராமானுச' என்ற திருநாமத்தைத் தன்னகத்தே கொண்ட 108 பாசுரங்களைப் பாடி, இராமானுச நூற்றந்தாதியாக நமக்கு அளித்துள்ளார்! காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்வது சிறப்பன்றோ? "ஸ்ரீ இராமானுசர் திருநாமங்களைச் சொல்லச் சொல்ல அவரது திருவடிகளில் நாம் மன்னி வாழலாம்!" என்றும் காட்டித் தருகின்றார். என்னே ஒரு கருணை! என்னே ஒரு வண்மை! இனி என் குறை நமக்கு? |
முடிவுரை |
நாராயண நாமம் நலம் தரும் சொல். எனினும் அதைப் பாடுவது முதல் படி.
'நாராயண' நாமத்தை விட அடியவரான ஸ்ரீ நம்மாழ்வாரின் 'பராங்குச' நாமம் ஏற்றம் உடையது. 'பராங்குச' நாமத்தை விட அடியவருக்கு அடியவரான 'இராமானுச' நாமம் ஏற்றம் உடையது. "நாராயணா" என்று சொல்லச் சொன்ன ஆழ்வார்கள், "நாராயண" நாமம் 108 முறை நாம் சொல்லும்படி எந்த ஒரு அருளிச்செயலும் அருளவில்லை. "பராங்குச" என்று ஓதிய ஸ்ரீ மதுரகவிகளும் 11 பாசுரங்களுடன் நிறுத்திக்கொண்டார். "இராமானுசா" என்று ஓதச் சொன்ன ஸ்ரீ திருவரங்கத்தமுதனார் மட்டுமே அதனைச் செயல்படுத்தி 108 முறை "இராமானுச" என்று ஓதும் வண்ணம் அருமையானதொரு அந்தாதியை அருளினார். இந்தப் பெருமை ஸ்ரீ இராமாநுசருக்கே உள்ளதொரு தனிச் சிறப்பு. 'நாராயண' நாமத்திற்குச் சொன்ன அனைத்து பெருமைகளும் [ஒரு முறை நினைத்தாலும், சொன்னாலும், கேட்டாலும் நன்மை பயக்கும் போன்றவை] அவனது அடியாரின் அடியாரான எம்பெருமானாரின் திருநாமத்திற்கும் சாலப் பொருந்தும். எம்பெருமானைக் காட்டிலும் எம்பெருமானார் பெருங்கருணை உடையவர் அன்றோ? 'இராமானுச' நாமத்தைச் சொல்பவருக்கு பராங்குசர் அருளும், நாராயணன் அருளும் ஒரு சேர கிடைக்கும். இதற்கு முந்தைய கட்டுரையில் தெரிவித்தது போல், ஸ்ரீ இராமானுச நூற்றந்தாதியைத் திருவரங்கன் மெச்சினான். ஆதலால், நமக்குப் பறை தரும் நாராயணனே தன் அடியவரான ஸ்ரீ நம்மாழ்வாரின் அடியவராம் எம்பெருமானாரின் திருநாமத்தை மிகவும் விரும்புகின்றான். ஸ்ரீமதே ராமாநுஜாய நம: |
நன்றிகள் பல! |
பின்வரும் வலைத்தளங்கள் உயர்ந்த தகவல்களின் பெட்டகங்கள்! அவற்றின் மதிப்பிற்குரிய உரிமையாளர்களுக்கு அடியேனின் மனமார்ந்த நன்றிகள்!
|
What a superb write up!Thanks to you, read and repeated in mind,Narayana namam and Acharya namam, many times while reading!My only Punyakaryam has been to name my son, Narayanan!
ReplyDeleteThank you for reiterating and reinforcing the need to take Narayana namam in a gesture of sharanagathi!
Thanks so much for sharing your genuine experience and also, for being exactly that mother Sri Periyazhwar had lauded in the quoted pasuram!! Adiyen.
DeleteOm namO nArAyaNAya 🙏
ReplyDeleteThank you, Sir!!
DeletesrimathE rAmAnujAya nama: |
Enjoy this purandara dAsa kriti...
ReplyDeleteNarayana ninna namada smaraNeya
nArAyaNa ninna nAmada smaraNeya
sArAmRtavu enna nAligege barali ||
kaShTadallirali utkRShTadallirali |
eShTAdarU matigeTTu irali |
kRShNa kRShNa endu SiShTaru pELuva
aShTAkShara mahAmantra ondirali ||1||
santata hari ninna sAsira nAmava
antaragada oLagirisi (oLage iTTu)
entO purandara viTThala rAyana
antya kAladalli cintisO hAge ||2||
https://youtu.be/thxL_p-mnh8
Such a suitable Krithi!! Thanks so much for sharing, Sir!!
DeleteBest!! Excellent. Thought you would allude a reference to Andal thiruppavai as well 😀😀🙏🙏
ReplyDeleteDhanyosmi. Very glad that you enjoyed and also, that you noticed the reference to Thiruppaavai!! Adiyen. :) _/|\_
DeleteExcellent.. like how Bhaagavatha sheshatvam greater than Bhagavath sheshatvam.. Ramanuja Nama greater than Narayana Nama
ReplyDeleteAbsolutely!! Thank you so much for recording the essence!!
Delete|| Srimathe Ramanujaya Nama: ||
நாமமகிமையை உணர்த்தும் அற்புதமான கட்டுரை.
ReplyDeleteதன் திருநாமத்தை அடியார் சொல்லும்போது எம்பெருமான் கண், வாத்ஸல்யப் பெருமிதத்தால் சிவக்கும்.
தன் திருவடியான ஸ்ரீ நம்மாழ்வார் திருநாமத்தையோ, அவரது திருவடியான எம்பெருமானார் திருநாமத்தையோ அடியார் நினைக்கும் போது எம்பெருமான் உள்ளம் குளிரும்.
பாசுரங்களின் விளக்கங்கள் அருமை.
மிக்க நன்றி, ஸ்ரீராம் ஜி. நீங்கள் இக்கட்டுரையைப் படித்து மகிழ்ந்ததை நினைத்து உவகை எய்தினேன்.
Delete